ஞானப் புஸ்தகங்களிலேயே கர்மாநுஷ்டானத்தில்தான் ஆரம்பித்து சாஸ்த்ரோக்தமாக வர்ணாச்ரம தர்மங்களின்படி எல்லாம் பண்ணிக்கொண்டு போகவேண்டும் என்று நிறையச் சொல்லியிருக்கிறார்.
தற்காலத்தில் ஸமத்வம் என்று சொல்லி வெறும் லௌகிக விஷயங்களை மட்டும் கவனித்து நாம் reform (சீர்திருத்தம்) என்று சொல்லி deform செய்வதுபோல (உருக்குலைப்பதுபோல) ஆசார்யாள் பண்ணவே இல்லை. இப்போது நாம் கார்யத்திலேயே எல்லாம் ஒன்று என்று ஆரம்பித்திருக்கிறோம். ஆனால் நம் மனஸிலே ஒற்றுமை பாவம், எல்லாம் ஒன்று என்று லவலேசமாவது இருக்கிறதா? இருந்தால் இத்தனை போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு இருக்குமா? சாஸ்த்ரங்கள் என்ன சொல்கின்றன? அவற்றையே அநுஸரித்துப்போன ஆசார்யாள் என்ன சொன்னார்? “ஸம்ஸ்கார வித்யாஸத்தினால் ஸ்ருஷ்டியில் குண கர்மாக்கள் வித்யாஸமாகத்தான் இருக்கும். அந்த வித்யாஸத்தை ஸமம் பண்ண ஆரம்பித்தால் ஜ்வரக்காரனுக்கு விருந்துச் சாப்பாடு போடுகிற மாதிரியும், ஆரோக்யசாலிக்கு மருந்து கொடுக்கிற மாதிரியுந்தான் ஆகும். அதனால் எப்படி வித்யாஸப்படுத்தி அவரவரையும், மொத்தத்தில் ஸகலரையும் முன்னேற்ற வேண்டுமோ அப்படித்தான் கார்யங்களையும் அநுஷ்டானங்களையும் பிரித்துக் கொடுக்க வேண்டும். மனஸிலே ‘எல்லாம் ஒரே சைதன்யம்’ என்ற அத்வைத பாவமும் அதனால் ஏற்படும் ஏற்றத் தாழ்வில்லாத ப்ரேமையும் இருக்கவேண்டுமே தவிரக் ‘கார்யத்தில் ஒண்ணு’ என்று பண்ணக்கூடாது. ‘ பாவாத்வைதம் ஸதா குர்யாத் ; க்ரியாத்வைதம் ந கர்ஹிசித் – எப்போதும் மனோபாவத்தில் அத்வைதத்தை வளர்த்துக்கொள்; ஆனால் கார்யத்தில் ஒருபோதும் அத்வைதத்தைக்கொண்டு வராதே!’ கார்யமில்லாத நிலைக்குத்தான் அத்வைதம் என்றே பேர்’ என்பது தான் சாஸ்த்ரத்தைத் அநுஸரித்து ஆசார்யாள் செய்த உபதேசம். இப்போது நேர்மாறு! ‘பாவாத்வைதம்’ இல்லை, ‘க்ரியாத்வைத’த்துக்கே முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறோம்! க்ரியா லோகத்தில் வேத வழிப்படியான அநுஷ்டானந்தான் இருக்க வேண்டுமென்று ஆசார்யாள் வழிபோட்டுக் கொடுத்தார். அதாவது பழைய வழியை மறுபடிச் செப்பனிட்டுக் கொடுத்தார்.
இப்படி (ஞானம், பக்தி, கர்மா என்ற) மூன்று மார்க்கங்களையும் வைதிகமாக நிலைப்படுத்தியிருக்கிறார்.
பக்தி ஸ்தோத்ரமானாலும் ஞானத்தில், அத்வைதத்தில் கொஞ்சமாவது கொண்டு நிறுத்துவதாகவே இருக்கும். தெய்வங்களுக்குள் பேதமே இல்லாமல் சொல்வது, தெய்வம் என்றும் மநுஷ்யன் என்றுங்கூட பேதமில்லை என்று காட்டுவது – இப்படி இரண்டு விதமாக இருக்கும்.
அத்தனை தெய்வத்தையும் ஸ்துதித்துப் பாடினார். ஒவ்வொரு தெய்வத்தைச் சொல்லும் போதும் ‘இதுவே பரப்ரஹ்மம், பரதெய்வம், இதற்குமேல் ஒன்று எனக்குத் தெரியவில்லை’ – “ந ஜானே ந ஜானே” – என்றே சொல்வார். லக்ஷ்மியை அவளே ஸரஸ்வதி, பார்வதி என்று கொண்டாடிய மாதிரியே மற்ற தெய்வங்களையும் சொல்லியிருப்பார்.
பக்தி எப்படி த்வைதம் மாதிரி இருந்தாலும் அத்வைதமாக முடிகிறது என்று அநேக இடங்களில் காட்டியிருக்கிறார். ‘சிவாநந்தலஹரி’யில் பக்தி லக்ஷணத்தைப் பல விதமாகச் சொல்லி “ஸிந்து: ஸரித் வல்லபம்” – ஸமுத்ரத்தில் நதி கலந்து ஸமுத்ரமே ஆகிவிடுகிறாற்போல – என்று முடித்திருக்கிறார்1. ‘ஸெளந்தர்யலஹரி’யில் வேடிக்கையாகச் சொல்வார் : “பவாநி த்வம்” – “பவாநி, நீ(என்னைக் கடாக்ஷிப்பாயாக!) ” என்று பக்தன் ஆரம்பிக்கும் போதே, “பாவநி த்வம்” என்ற அந்த வார்த்தைகளுக்கு “நான் நீ ஆவேன்” என்றும் அர்த்தம் பண்ணலாமாதலால் அம்பாள் அப்படி அர்த்தம் பண்ணிக்கொண்டு பக்தனுக்கு அத்வைத ஸாயுஜ்யத்தைக் கொடுத்து விடுகிறாள் என்கிறார்2.
நிர்குண ப்ரஹ்மமேதான் ஸகுண மூர்த்தியாக வந்திருப்பது என்று தம்முடைய ஸ்தோத்ரங்களில் ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார். “கோவிந்தாஷ்டகம்” என்று க்ருஷ்ணர் அடித்த கூத்தையெல்லாம் சின்ன ஸ்தோத்ரமாகக் கொடுத்திருக்கிறார். அதில் எல்லாக் கூத்தும் அடங்கிப்போன அத்வைத வஸ்துதான் இப்படி வந்தது என்றும் சேர்த்துச் சேர்த்துச் சொல்லிக்கொண்டு போயிருக்கிறார். ஆரம்பமே “ஸத்யம் ஞானம் அநந்தம் நித்யம்” என்று போட்டிருக்கிறார்!
ஆசார்யாள் ‘விஷ்ணு ஸஹஸ்ர நாம’த்திற்கு பாஷ்யம் செய்திருப்பதே ஸகுண – நிர்குணங்களையும் பக்தி – ஞானங்களையும் ஒன்றுபடுத்திக் காட்டுவதற்குத்தான் என்று சொல்லலாம்.
அத்வைதத்தையும் பக்தியையும் இணைத்து கொடுத்திருப்பதற்கு நீங்கள் அவ்வளவாகக் கேள்விப்பட்டிராத ஒரு ஸ்தோத்ரத்தில் த்ருஷ்டாந்தம் காட்டுகிறேன். “லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பஞ்ச ரத்னம்” என்று அதற்குப் பெயர். ஆசார்யாள் நரஸிம்மர் விஷயமாகப் பண்ணியுள்ள “கராவலம்ப ஸ்தோத்ர”த்தின் அளவுக்கு இது ப்ரஸித்தியாக இல்லை. இதை ஆரம்பிக்கும்போதே ஆசார்யாள் சொல்கிறார்: கண்ணாடி இருக்கிறது. உள்ளே ப்ரதிபிம்பம் தெரிகிறது. பார்த்தால் நன்றாகவே இல்லை. திலகம் வைக்கணும் என்று தோன்றுகிறது. என்ன பண்ணணும்? கண்ணாடிக்கா பொட்டு வைப்பார்கள்? அது அழுக்காவதாகத் தான் ஆகுமே தவிர வேறே என்ன நடக்கும்? பின்னே என்ன பண்ணுவார்கள்? ப்ரதி பிம்பத்துக்கு மூலமான பிம்ப ஆஸாமிக்குத்தான் பொட்டு வைப்பார்கள். அப்படி இந்த ஜீவலோகம் பூராவும் ஏக சைதன்யம் மாயைக் கண்ணாடியில் காட்டுகிற தினுஸு தினுஸான ப்ரதி பிம்பங்கள்தான். நீயும் அப்படித்தான். உனக்கு ஏதாவது நல்லது பண்ணிக்கொள்ள வேண்டுமானால் அது பொட்டு இட்டு அலங்காரம் பண்ணிக் கொள்கிற மாதிரி. நேரே உனக்கே — அதாவது மாயையில் ப்ரதிபலித்து உண்டான உன் தேஹ, இந்த்ரியாதிகளுக்கே — நீ நல்லது என்று ஒன்றைப் பண்ணிக்கொண்டால் அது கண்ணாடியில் கறுப்புப் பூசி அழுக்குப் பண்ணும் கார்யம் தான். ‘மூல பிம்பம் சைதன்யம் என்றால் அதற்கு நான் பண்ணக் கூடியது என்ன இருக்கிறது? முதலில் அது என் மனஸுக்கே வரவில்லையே!’ என்கிறாயா? ஸரி, அதுவேதான் ரூபங்களோடு, குணங்களோடு இந்த லக்ஷ்மி நரஸிம்ஹ மூர்த்தியாகவந்திருக்கிறது. அவனுக்கு பஜனை பண்ணு, பூஜை பண்ணு, ஸதா ஸ்மரணம் பண்ணு! அதுதான் உனக்குப் பண்ணிக்கொள்ளும் அத்தனை நல்லதும் – திலக தாரணம் முதலான அத்தனை அலங்காரமும்’ என்று சொல்லியிருக்கிறார். இத்தனை நீட்டாமல் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்.
இதில் எல்லைக் கோடியாகத்தான் ‘தக்ஷிணாமூர்த்தி அஷ்டக’த்தில் கூத்து, லீலை என்பதே இல்லாமல் ஒரே வேதாந்த தத்வங்களாகச் சொல்லி அந்த தத்வ ரூபகமாகவே, “ஸ்ரீகுரு மூர்த்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணா மூர்த்தயே” என்று ச்லோகம்தோறும் முடித்திருக்கிறார்.
பக்தி, ஞானம் இரண்டையும் சேர்த்த உபதேசமாக ‘பஜ கோவிந்தம்’ என்று தேசம் பூரா பஜனை பண்ணிக்கொண்டு போயிருக்கிறார்.
ஜனங்கள் நல்லதை நல்லபடி எடுத்துச் சொன்னால் உடனே அந்த வழியை ஏற்றுக்கொண்டு விடுவார்கள். இப்படி அந்தக் காலத்தில் ஆசார்யாள் கர்ம – பக்தி – ஞானம் என்று வேத சாஸ்த்ர வழியை மறுபடி நன்றாக ரிப்பேர் பண்ணி நடுவிலே புறப்பட்ட மதாந்தரங்களான சந்து, பொந்து முள்ளு வழி எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதில் போக ஆரம்பித்தார்கள்.
ஆரம்பத்தில் ஆசார்யாள் ஸஞ்சாரம் பண்ணவில்லை. இந்த தேசத்தில் எத்தனை பாஷைக்காரர்கள், மதக்காரர்கள் ஜாதிக்காரர்கள் உண்டோ அத்தனை பேரும் கூடுகிற காசியில் இருந்துகொண்டே நானாதிசை சிஷ்யர்களின் மூலமும் ஒளபநிஷதமான (வேதாந்த) மதஸ்தாபனத்தைச் செய்ய ஆரம்பித்து விட்டார்.
1 61-வது ச்லோகம்
2 22-வது ச்லோகம். தேவியின் நாமமான பவானி என்பதையே வினைசொல்லாகக் கொண்டால் “நான் ஆவேன்” என்று பொருளாகும்.