ஆசார்யாளின் நூல்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆசார்யாளும் எழுதித் தள்ளிக்கொண்டு போனார். உபநிஷத்துக்களுக்கும் கீதைக்கும் பாஷ்யம் எழுதினார்1. மிக நுட்பமான தத்வங்களையும், அபிப்ராயங்களையும் அநாயாஸமான தெளிவோடு விளக்கி எழுதினார். உபநிஷத்துக்களில் ஒன்றுக்கொன்று வித்யாஸமான மாதிரி விஷயங்கள் வரும். ஒரே கீதையிலேயே பகவான் ஒவ்வொரு ஸமயத்தில் ஒவ்வொரு மார்க்கத்தை உசத்திப் பேசுகிறாற்போல இருக்கும். இப்படி mutually contradictory-யாக (ஒன்றுக்கொன்று முரணாக)த் தோன்றுவதையெல்லாம் அலசி, அலசி, ஒரே அபிப்ராயத்தில்தான் எல்லாவற்றுக்கும் பரம தாத்பர்யம், அதுதான் அத்வைதம் என்று ஆசார்யாள் உறுதிப்படுத்தியிருக்கும் அழகைப் பார்த்து அறிவாளிகள் எல்லாரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.

‘ஸித்தாந்தம் இருக்கட்டும். அவர் கையாண்டிருக்கிற முறையினால் ஸம்ஸ்க்ருத பாஷைக்கே ஒரு புது மெருகு ஏற்றிவிட்டார். எப்படிப்பட்ட சிக்கலான அபிப்ராயங்களையும் அந்த பாஷையால் எவ்வளவு லாகவமாகத் தெரிவித்துவிடமுடியும் என்று காட்டிவிட்டிருக்கிறார்’ என்றும் பல பேர் கொண்டாடுகிறார்கள்.

‘Lingua franca’ என்பதாகப் பல பாஷைக்காரர்களுக்கும் தொடர்பு மொழியாயிருக்கும் பொது பாஷையைச் சொல்கிறார்களல்லவா? நம் தேசத்தில் அப்படி இருந்து வந்திருப்பது ஸம்ஸ்க்ருதம்தான். குறிப்பாக, ஆதாரமான மத சாஸ்த்ரங்கள் அந்த பாஷையில்தான் இருக்கின்றன. அதனாலேயே தேசம் முழுவதற்குமாக எழுதிய ஆசார்யாள் அந்த பாஷையில் எழுதியது.

பாஷ்யங்கள், ஸொந்த நூலான ப்ரகரணங்கள் என்று இப்படி எழுதியதெல்லாம் ஞான மார்க்கம்.

பாஷ்யங்களில் ஸித்தாந்த ரீதியான ஆராய்ச்சி, வாதங்கள் எதிர் வாதங்கள் எல்லாம் விஸ்தாரமாக, ஆனால் துளிக்கூட வளவளப்பில்லாமல் இருக்கும். தாம் சொல்ல வரும் அபிப்ராயத்துக்கு நேர் விரோதமாகப் ‘பூர்வ பக்ஷம்’ என்று எத்தனை சொல்ல முடியுமோ அத்தனையையும் அவரே சொல்லிவிட்டு அப்புறம் அதெல்லாம் எப்படித் தப்பு என்று ஆணித்தரமாகக் காட்டி ‘ஸித்தாந்த’த்தை நிலைநாட்டுவார். இப்படித்தான் ஸாங்க்ய-மீமாம்ஸாதிகள், பௌத்த-சார்வாகாதிகள் முதலான மற்ற ஸித்தாந்தங்களையெல்லாம் நிராகரணம் பண்ணியிருப்பது. முன்னேயே நாம் பார்த்திருப்பதுபோல, ‘மற்றதெல்லாம் அடியோடு உபயோகமில்லாதவை!’ என்று தள்ளிவிடாமல் எதில் என்ன ஸாரமாக இருந்தாலும் எடுத்துக்கொண்டார். அது மட்டுமில்லை, அதெல்லாமே அத்வைதத்தில் அடக்கம்தான் என்கிறார். மாண்டூக்ய உபநிஷத் காரிகை என்று கௌடபாதர் செய்திருக்கிறார். அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார் என்றேனல்லவா? அதிலே கௌடபாதர், ‘அத்வைதிகளாக இல்லாத மற்ற ஸித்தாந்திகள் தங்களுக்குள்ளேயேதான் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்; நமக்கு அவர்களிடம் ஒரு விரோதமில்லை’ என்று சொல்லியிருப்பதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது “அத்வைதத்திற்கு அந்த ஸித்தாந்தமெல்லாமும் கை, கால் மாதிரிதானே?” ( யதா ஸ்வஹஸ்த பாதாதிபி:) என்கிறார். தன் கை காலுடனேயே எவனாவது விரோதம் பாராட்டுவானா? கை கண்ணைக் குத்தி வலி உண்டாக்கலாம். ஒரு கால் இன்னொரு காலைத் தடுக்கி, பல்லே நாக்கைக் கடித்து, வலி ஏற்படுத்தலாம். அது மாதிரி அவர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு போகட்டும். மொத்த மநுஷ்யனுக்கு எல்லாம் அங்கமானதால் எதனோடும் மோதலில்லாத மாதிரிதான் அத்வைதிக்கு அவர்கள். அடுத்த ச்லோக பாஷ்யத்திலே இன்னும் ப்ரேமையோடு, “அந்த த்வைதிகளுக்கெல்லாமும் ஆத்மாவாயிருப்பவன் அத்வைதி என்பது தானே பரம தாத்பர்யம்? தத: பரமார்த்ததோ ப்ரஹ்மவித் ஆத்மைவ த்வைதிநாம்!” என்கிறார்.2

மாற்று ஸித்தாந்தக்காரர்களுக்கும் நிரம்ப மரியாதை கொடுத்தே சொல்லியிருக்கிறார். மீமாம்ஸா பாஷ்யக்காரர்களில் ஒருவரான சபரரை “ஆசார்யேண சபர ஸ்வாமிநா” என்றும், இன்னொருவரான உபவர்ஷரை “பகவதோ உபவர்ஷேண” என்றும், கௌதமர் செய்த ந்யாய ஸுத்ரத்தைக் குறிப்பிடும்போது “ஆசார்ய ப்ரணீதம்” என்றும், அவர்களுக்கு ‘ஆசார்யர்’, ‘ஸ்வாமி’, ‘பகவான்’ என்றெல்லாம் அடைமொழி கொடுத்து ஸூத்ர பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.3

தாமே ஸொந்தமாக எழுதிய ஞான நூல்களான ‘ப்ரகரண’ங்களில் ஸித்தாந்த வாதமாக அதிகம் இல்லாமல் தத்வங்களை பளிச் பளிச்சென்று மணிமணியாகக் கொடுத்திருக்கும். அதோடுகூட, அநுபூதிமானின் நிலையையும் ஸ்வச்சமாக வர்ணித்திருக்கும். ப்ரகரண க்ரந்தங்களில் மிகவும் பெரிதான ‘விவேக சூடாமணி’யிலும், ‘உபதேச ஸாஹ்ஸ்ரீ’யிலும் இப்படிப்பட்ட வர்ணனைகள் வருவதோடு ‘ஜீவன் முக்தாநந்த லஹரீ’, ‘தன்யாஷ்டகம்’, ‘யதி பஞ்சகம்’ முதலியவையும் அத்வைதாநுபவியின் ஆனந்த நிலையை வர்ணிப்பவைதான். ‘ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு தான் பாட்டுக்கு ஆத்மாராமனாகத் திரிந்து கொண்டிருக்கிறானே அவனைப் போன்ற பாக்யசாலி யார்?’ என்று ‘யதிபஞ்சக’த்தில் கேட்கிறார்: “கௌபீநவந்த: கலு பாக்ய வந்த:”—“பாக்யசாலி என்றால் அது இந்தக் கோவணாண்டி அல்லவா?” என்கிறார். நம் மனஸில் ஆழப் பதிகிற விதத்தில், அவனே தன்னை மறந்து தன் ஸ்திதியை, “தத் ஏகோ (அ)வசிஷ்ட: சிவ: கேவலோஹம்“, “ஸாக்ஷீநித்ய: ப்ரத்ய காத்மா சிவோஹம்“, “அஹமேவ பரம் ப்ரஹ்ம வாஸு தேவாக்யம் அவ்யயம்“, “அஹம் ஆநந்த ஸத்யாதி லக்ஷண: கேவல: சிவ:”, “சிதாநந்த ரூப: சிவோஹம் சிவோஹம்” என்றெல்லாம் சொல்வதாக இருக்கும்,4 இப்படிப்பட்ட க்ரந்தங்களைப் பாராயணம் பண்ணும்போது, அப்படிப் பண்ணுகிற நாழி வரையிலாவது நாமும் அழுக்கில்லாத ஆகாசம் மாதிரி, ஜ்யோதிர் மயமாக, ஆனந்த மயமாக இருக்கிறாற்போலவே இருக்கும்.

ஏக சைதன்ய ஜ்யோதிஸினால்தான் லோகத்திலுள்ள எல்லா ஒளிகளும், காட்சிகளும், காண்பானும் என்பதை இறுக்கி ஒரே ச்லோகத்தில் அடக்கி ‘ஏக ச்லோக ப்ரகரணம்’ என்றும் ஒன்று அநுக்ரஹித்திருக்கிறார். அரை ச்லோத்திலேயேகூட உபதேச ஸாரத்தை வடித்துக் கொடுத்திருக்கிறார்!5

குழந்தைகளுக்கு வாத்தியார் உபதேசம் பண்ணுகிறது போல அடியிலிருந்து ஆரம்பித்து “பால போத ஸங்க்ரஹம்” என்று ஒன்று பண்ணியிருக்கிறார். இன்னொன்று, சின்னச் சின்னக் கேள்வியும் பதிலுமாக ஸகல விஷயங்களும் சொன்னதுதான் “ப்ரச்நோத்தர ரத்ந மாலிகா.”

ஞானப் புஸ்தகங்களைப் போலவே பக்தி ஸ்தோத்ரங்களும் நிறைய எழுதினார். இது ஸகல ஜனங்களுக்குமான உபகாரம். பண்டிதர்களே ரஸிக்கக்கூடிய சிக்கல்களை ஞானப் புஸ்தகங்களில் அவிழ்த்துக் கொடுத்த அதே ஆசார்யாள் ஒரு குழந்தைகூட ப்ரியப்பட்டுச் சொல்லும்படியாக, அதற்கும் புரியும்படியாக, பக்தி ஸ்துதிகள் நிறையப் பண்ணிக் கொடுத்தார். இவற்றிலேயும் ரஸிகர்கள், ரஸஜ்ஞர்கள், விஷயஜ்ஞர்கள் ஆச்சர்யப்படும்படியாக அநேகம் உண்டு.

பாதாதி கேச வர்ணனை, கேசாதிபாத வர்ணனை என்று தெய்வங்களை விஸ்தாரமாக வர்ணிப்பது, பக்தி பாவம் பொங்கும்படியாக எப்படியெல்லாம் உபசாரம் பண்ணிப் பண்ணிப் பார்க்கலாமோ அத்தனையும் ச்லோக ரூபமாகப் பண்ணிவிடுவது6 – என்று நிறையச் செய்து அவற்றைச் சொல்வதாலேயே பாராயணம் பண்ணும் நம் சித்தம் பரமாத்மா விஷயமாக ஒட்டிக் கொண்டிருக்கும்படிச் செய்திருக்கிறார்.

பாஷ்யங்கள் முழுக்க ‘ப்ரோஸ்’. ப்ரகரண க்ரந்தங்களிலும் ‘ப்ரோஸ்’ உண்டானாலும் ‘பொயட்ரி’ தான் ஜாஸ்தி. ஸ்தோத்ரங்களெல்லாம் ‘பொயட்ரி’தான். எதுவானாலும் அதே தெளிவு, அர்த்த புஷ்டி, ஹ்ருதயத்துக்குப் பரம சாந்தியைத் தருகிற தன்மை.


1 ஈச – கேன – கட – ப்ரசன – முண்டக – மாண்டூக்ய – தைத்ரீய – ஜதரேய – சாந்தோக்ய – ப்ருஹதாரண்யக என்ற பத்தும் முக்கியமான தசோபநிஷதுக்களாகக் கருதப் படுகின்றன. இப் பத்துக்கும் ஆசார்யாள் பாஷ்யம் செய்துள்ளார். ஆசார்ய பாஷ்யம் பெற்றதாலேயே இப்பத்தும் அதி முக்யத்வம் பெற்றன என்றும் சொல்லலாம். இன்னும் சில உபநிஷதங்களுக்கும் அவர் பெயரில் பாஷ்யங்கள் இருக்கின்றன.

ப்ரஹ்ம ஸூத்ரம் – தசோபநிஷத்துக்கள் — கீதை இவற்றை ஒன்று சேர்த்து வேதாந்தத்தின் ஆதாரமாகிய ‘ப்ரஸ்தான த்ரயம்’ என்பர்.

2 மாண்டூக்ய காரியா III 17-18 பாஷ்யம்.

3 III. 3.53 & 1. 1-4.

4 இவ்வைந்து மேற்கோள்கள் முறையே ‘தச ச்லோகீ’, ‘அத்வைத பஞ்சரத்னம்’, ‘ப்ரஹ்மாநுசிந்தனம்’, ‘அத்வைதாநுபூதி’, ‘நிர்வாணஷட்கம்’ ஆகியவற்றில் வருபவை.

5 அரை ச்லோகமாவது:

“ப்ரஹ்ம ஸத்யம் ஜகந் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:”—ப்ரம்மமே ஸத்யம்; உலகம் ஒரு நிலையில் ஸத்யம் போலிருந்தாலும் உண்மை நிலையில் பொய்யாகிவிடுவதான ‘மித்யை’; ஜீவன் ப்ரம்மமேயன்றி வேறல்ல.

6 சிவபெருமானைக் குறித்துப் பாதாதி கேச: ஸ்தோத்ரம், கேசாதி பாத ஸ்தோத்ரம் இரண்டும் செய்திருக்கிறார். விஷ்ணுவைக் குறித்து பாதாதி கேச ஸ்தோத்ரம் உள்ளது, ஸெளந்தர்ய லஹரியில் அம்பிகையின் கேசாதி பாத வர்ணனையும்: ஸுப்ரஹ்மண்ய புஜங்கத்தில் முருகனின் பாதாதி கேச வர்ணனையும் உள்ளன. பலவித உபசாரங்களைக் கூறும் ஸ்தோத்ரங்கள். சிவ மாநஸ பூஜா, ம்ருத்யுஞ்ஜய மாநஸிக பூஜா, த்ரிபுரஸுந்தரீ மாநஸ பூஜா, தேவீ சதுஃஷஷ்ட்யுபசார பூஜா, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா, பகவந் (க்ருஷ்ண) மாநஸா பூஜா – ஸ்தோத்ரங்கள், தத்வங்களையே திரவியங்களாக உருவகித்த ‘நிர்குணமாநஸ பூஜா ஸ்தோத்ர’மும் உள்ளது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is காசி வாஸத்தில் வைதிக மதப் பிரசாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மூன்று மார்க்கங்களையும் ஸ்தாபித்தவர்
Next