ஸுரேச்வரரின் தனித்தன்மையும் சிறப்பும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மீமாம்ஸகர்களின் ப்ரான புருஷராயிருந்த மண்டனமிச்ரர் ஆசார்யாளின் சிஷ்யரானது, வேதாந்த மதத்தின் புனருத்தாரணத்துக்குப் பெரிய பலம் கொடுத்தது.

ஆனாலும், மநுஷ ஸ்வபாவம் எத்தனை பெரியவர்களையும் எப்படிக் கொஞ்சமாவது ஆட்டி வைத்து விடுகிறது என்று தெரிவிப்பதுபோல, ஆசார்யாளின் மற்ற சிஷ்யர்களே அவரை (ஸுரேச்வராசார்யாளை)க் கொஞ்சம் ஸந்தேஹக் கண்ணோடு பார்த்ததாக ‘சங்கர விஜய’ங்களில் இருக்கிறது. அவர் ஆசார்யாளின் சாரீரக பாஷ்யத்துக்கு* வார்த்திகம் எழுத ஆரம்பித்ததாகவும், அப்போது மற்ற சிஷ்யாள், ‘என்ன இருந்தாலும் இவர் ரொம்பவும் தீவ்ரமான பூர்வ மீமாம்ஸகராக இருந்தவர்தானே? வாதத்தில் தோற்றுப் போனதால் வழியில்லாமல் ஆசார்யாளிடம் சிஷ்யராகிவிட்டாலும், அந்தரங்க பூர்வமாக அத்வைத வேதாந்தத்தில் இவருக்கு ஈடுபாடு இருக்குமோ, இருக்காதோ? நம்மெல்லாம் மாதிரி ப்ரஹ்மசர்யத்திலிருந்தே ஸந்நியாஸத்திற்கு வராமல் பஹுகாலம் குடும்ப வாழ்க்கையிலிருந்த இவருக்குள் ஞான தத்வம் ஏறியிருக்குமா? அதனாலே honest-ஆக எழுதாமல், தன்னுடைய பழைய ஸித்தாந்தத்துக்கே இடம் கொடுக்கும்படி ஏதாவது ‘ட்விஸ்ட்’, ‘கிஸ்ட்’ பண்ணி எழுதிவிடப் போகிறாரே!’ என்று ஆசார்யாளிடம் சொன்னார்களாம். ஆசார்யாள் மனஸில் ஒன்றை நினைத்துக்கொண்டு, ஆனால், சும்மாயிருந்துவிட்டார். ஸுரேச்வராசார்யாள் காதுக்கே விஷயம் எட்டி அவர் ‘நாம் எழுத வேண்டாம்’ என்று இருந்துவிட்டார்.

அப்புறம் ஒருநாள் அவர் ஆசார்யாளிடம் வந்து, “தங்களுக்கு குருதக்ஷிணை தரணும், தரணும் என்று இருந்தது. தாங்களோ பணத்தைத் தொடாதவர், நானும் ஸொத்து ஸ்வதந்த்ரம் எல்லாம் விட்டவன். என்ன தருவது, தருவது என்று இருந்தது. அப்புறம் என்னவோ யோசித்து, ஏதோ ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். இதுதான்!” என்று சொல்லி ஒரு சுவடிக் கட்டை ஆசார்யாள் பாதத்தில் வைத்து நமஸ்காரம் பண்ணினார்.

அது “நைஷ்கர்ம்ய ஸித்தி” என்ற புஸ்தகம். பரம கர்மாநுஷ்டாதாவாக இருந்தவர், “எல்லாக் கார்யமும் போய் சும்மாயிருப்பதுதான் மஹாஸித்தி. அதுதான் மோக்ஷம். அதுதான் வேத வேதாந்த முடிவு” என்று விவரித்து எழுதியிருந்த புஸ்தகம்!

ஆசார்யாளின் மனஸில் நினைத்துதான் ஸுரேச்வரருக்குள் புகுந்து, மற்ற சிஷ்யர்கள் அவருடைய honesty-ஐத் தெரிந்துகொள்ளும்படியாக இப்படி எழுதப் பண்ணினது!

ஆனாலும் அவர் எடுத்தவுடனேயே தடை ஏற்பட்டதால் அப்புறமும் சாரீரக வார்த்திகம் எழுதவேயில்லை. ஆசார்யாளும், மற்ற சிஷ்யாளும் ஆசைப்பட்டதன் பேரில் (ஆசார்யாளின்) உபநிஷத் பாஷ்யங்களில் இரண்டிற்கு மாத்ரம் வார்த்திகம் எழுதினார். ஒன்று தக்ஷிணத்தில் பெருவாரியாக வழக்கிலுள்ள க்ருஷ்ண யஜுர் வேதத்தைச் சேர்ந்த தைத்திரீயம்; இன்னொன்று வடக்கே ரொம்ப அநுஷ்டானத்திலுள்ள சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்த ப்ருஹதாரண்யகம். (ஆசார்யாளின்) தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்திற்கும் அவர் உரை எழுதியிருக்கிறார் – “மான ஸோல்லாஸம்” என்று பேர்.

ஸுரேச்வராசார்யாளை இந்த (காஞ்சி) மடம், ச்ருங்கேரி மடம், த்வாரகா மடம் ஆகிய மூன்றும் தங்கள் தங்கள் ஆசார்ய பரம்பரையில் சொல்லிக்கொள்கின்றன. நம் மடத்துச் சரித்ரத்தை ஆழ்ந்து பார்த்தால் ஸுரேச்வராசார்யாளுக்குப் பீடாதிபத்ய அந்தஸ்து இருந்தாலும், அவரோடு கூடவே ஸர்வஜ்ஞாத்மர் என்ற இளம் ப்ரம்மசாரி இளவரசுப் பட்டம் மாதிரி இருந்துகொண்டு சாஸ்த்ரீய கார்யங்கள் எல்லா பண்ணி வந்ததாகத் தெரியும். அதாவது ஸுரேச்வரரின் மேல் பார்வையில் ஸர்வஜ்ஞாத்மர் இருந்தாரென்று தெரியும். அவர் ஸித்தியடைந்தபிறகு ஸர்வஜ்ஞாத்மரே பீடாதிபதியாக முழுப் பொறுப்பும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதை வைத்து ஆலோசித்துப் பார்த்தால், மூன்று மடங்களிலுமே இப்படி ஸுரேச்வரரை அத்யக்ஷகராக ஆசார்யாள் நியமித்து, அவருக்கு உட்பட்டு வயஸில் சின்ன இன்னொருவர் வைதிகாசாரங்கள் முக்யமாயுள்ள எல்லாக் காரியமும் பண்ணும்படி வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது. ‘ஸெக்யூலர் (உலகியல் விஷயமான) நிர்வாஹப் பொறுப்பு முழுக்க ஸுரேச்வரரிடம்; சாஸ்த்ரத்திற்கு மேலே போன கட்டத்தில் ஞானோபதேசமும் அவர் பண்ணுவது; சாஸ்த்ராசாரங்களின்படியான அநேக கார்யங்கள் இன்னொருவர் செய்வது — என்று வைத்திருக்கலாம். ஏனென்றால்…

வயஸில் பெரியவர், மஹா பண்டிதர், பூர்வ மீமாம்ஸகராகப் பெயரெடுத்தவர், செல்வத்தையும் செல்வாக்கையும் விட்டு ஸந்நியாஸியானவர் என்று ஒரு ஸுரேச்வரருக்குத் தனி கௌரவமிருந்தது. இன்னொரு பக்கம் க்ருஹஸ்தாச்ரமத்தில் இருந்துவிட்டல்லவா துரீயாச்ரமத்திற்கு வந்தவர் என்ற எண்ணமும் சிலபேருக்கு இருந்திருக்க இடமிருக்கிறது. ஆசார்யாள் தம்முடைய மடங்களின் கௌரவத்துக்கு பங்கமாகக் கொஞ்சம் ஸம்சயாஸ்பதமாகக் கூட எதுவும் எவரும் நினைக்க இடம் கொடுக்கப்படாது என்று நினைத்திருக்கலாம். ஸுரேச்வராசார்யாளின் விசேஷ கௌரவத்துக்குத் தக்கதாக அவருக்கு நியமனம் தர வேண்டுமென்றும் நினைத்திருக்கலாம். அதனால் இப்படி மூன்று பீடங்களில் அவரை அத்யக்ஷகராக வைத்து, அவருடைய மேற்பார்வையில், ப்ரம்மச்சர்யத்திலிருந்து துரீயாச்ரமம் போன இன்னொருவர் பீடாதிபத்தியம் வஹித்து சாஸ்த்ராசாரங்கள் ப்ரதானமாகவுள்ள கார்யங்களையெல்லாம் பண்ணும்படி ஏற்பாடு பண்ணியிருப்பாரென்று தோன்றுகிறது.

மடாதிபதி, குரு என்றெல்லாம் ஸந்நியாஸிக்கு பொறுப்பு ஏற்பட்டால் அதற்கேற்ற ஸெக்யூலர் கார்யம், சாஸ்த்ரோக்த கார்யம் ஆகியவையுந்தான் சேர்கின்றன. ஸாஸ்த்ரோக்தமாகச் சிலது பண்ணும் சரீரத்துக்கு க்ருஹஸ்தாச்ரம அநுபவங்கள் கொஞ்சமும் கிடையாது என்றால் அப்போது பொதுப் பார்வையில் அதற்குத் தனியான பரிசுத்தியும் கௌரவமும் தெரியத்தான் செய்யும்.

இந்த ஸந்நியாஸியை விடவும் ரொம்ப ஜாஸ்தி சாஸ்த்ரகர்மா–அக்னி கார்யங்கள் முழுக்க–க்ருஹஸ்தனுக்கே உண்டு. அவ்வளவையும் பூர்வாச்ரமத்தில் புஷ்களமாகப் பண்ணினவர் ஸுரேச்வராசார்யாள், அப்போது அவருக்கிருந்த பேரிலேயே காஞ்சீபுரத்தில் ‘மண்டனமிச்ர அக்ரஹாரம்’ என்று ஒரு வீதி இருக்கிறது. க்ருஹஸ்தர் வஸிக்கும் இடத்துக்கு ஸந்நியாஸியின் பேரை வைப்பதை விட, அந்த ஸந்நியாஸியே உசந்த கர்மாநுஷ்டாதாவாக இருந்தபோது அவருக்கிருந்த பேரை வைப்பதுதான் பொருத்தம் என்று இப்படி வைத்தாற்போலிருக்கிறது. ஆதியில் அவரிருந்த மாஹிஷ்மதீயிலிருந்தேதான் ஆசார்யாளோடு இருநூறு ப்ராம்மண குடும்பங்கள் காஞ்சீபுரம் வந்து அங்கே குடியேறியதாகச் சொல்வார்கள்.


* ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ‘சாரீரக மீமாம்ஸா’ என்றும் பெயராதலால் ஆசார்யாளின் ஸூத்ர பாஷ்யம் ‘சாரீரக பாஷ்யம்’ என்றும் கூறப்படும். சரீரத்திலிருந்து பிரித்து அதற்கு உட்பொருளான ஆத்மாவைச் சொல்வதால் ‘சாரீரகம்’.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ச்ருங்கேரிச் சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பத்மபாதரின் 'பஞ்ச பாதிகை'
Next