முக்ய சிஷ்யர்களில் இன்னொருவர் ஹஸ்தாமலகர்…
ஆசார்யாளை ஸ்மரிக்கும்போது அவருடைய சிஷ்யர்களையும் ஸ்மரித்து நமஸ்காரம் பண்ணுவது விசேஷம் – பகவத் பக்தியோடு, ‘அடியார்க்கடியேன்’ என்று அவனுடைய பக்தர்களையும் பக்தி பண்ணும் ரீதியில்.
இன்னொரு விதத்தில் பார்த்தால் ஆசார்யாள் – சிஷ்யாள் என்று இவர்களைப் பிரித்துச் சொல்லலாமா? அவரேதானே இவர்களும்? “மஹாவிஷ்ணுவுடைய நாலு புஜம் மாதிரி எனக்கு நாலு சிஷ்யர்களை வைத்துக்கொண்டு அவதாரம் பண்ணுவேன்” என்று ஈச்வரனே இவர்களைத் தன் அங்கங்களாகச் சொன்னானல்லவா? பிரித்துச் சொன்னால் அபசாரமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் குரு-சிஷ்ய பாவம் என்பதன் அழகு, உயர்வு எல்லாம் தெரியும்படி த்வைத விளையாட்டு நடந்ததால் தனித்தனியாக ஒவ்வொரு சிஷ்யர் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். நாம் மனஸில் த்யானிப்பதற்கு த்வைதக் கல்பனைகள் வேண்டித்தானே இருக்கிறது?…
தேச ஸஞ்சாரத்தில் ஆசார்யாள் மேற்கு ஸமுத்ரத்துக்குப் பக்கத்தில் ஸ்ரீபலி என்னும் ஊருக்குப் போயிருந்தார்.
அங்கே ஒரு ப்ராம்மணன் பிள்ளையை அழைத்துக் கொண்டுவந்தான். பிள்ளை நன்றாக வளர்ந்திருந்தான். ஆனால் ஒன்றும் தெரியவில்லை. பார்க்கத் தெரியவில்லை. கேட்கத் தெரியவில்லை. பேசத் தெரியவில்லை. “ப்ரம்மமா இருக்கு, நீங்கதான் ஸரி பண்ணணும்” என்று ஆசார்யாளிடம் தகப்பனார்க்காரன் வேண்டிக்கொண்டான்.
எதுவும் தெரிந்து கொள்ளாமல் ஜடமாயிருப்பதை, லோக வசனப்படி, “ப்ரம்மாக” என்றான்! பையனைப் பார்த்த ஆசார்யாளுக்கோ வாஸ்தவமாகவே அவன் ப்ரம்மமாகத்தானிருந்த ஞானி என்று தெரிந்துவிட்டது!
பெரிய வேடிக்கை என்னவென்றால் பெரிய ஞானி, பெரிய அஞ்ஞானி இரண்டு பேருக்கும் வித்யாஸமே தெரியாது. அஞ்ஞானியில் இரண்டு தினுஸு. ஒன்று, மூளை வேலை செய்யாத முழு அசடு, பைத்தியம், அதிலேயும் இரண்டு தினுஸு! போட்டது போட்டபடி ப்ரமித்துக் கொண்டு ஒரே ஸாதுவாயிருப்பது ஒன்று. ஒரே கூச்சல், அடி, உதை என்று வெறிக் கூத்தாயிருப்பது ஒன்று. இரண்டும் மூளை ஸரியாக வேலை செய்யாத அஞ்ஞானி. இன்னொன்று, மூளை ஸரியாக வேலை செய்கிற மாதிரி மற்ற கார்யமெல்லாமிருந்தாலும் பரம நாஸ்திகமாக இருக்கும் அஞ்ஞானி! இந்த மூன்றுவித அஞ்ஞானிகள் மாதிரியும் ஞானி இருப்பான்! திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகள் என்று இருந்தார். பக்தியோடு கிட்ட வருகிறவர்களின் மேலே கல்லைத் தூக்கிப் போடுவார்! அதுவே அநுக்ரஹமாகி விடும்! ‘நல்லது நல்லதாயில்லை; பொல்லாதது பொல்லாததாயில்லை; சாஸ்த்ரமில்லை, ஸம்ப்ரதாயமில்லை’ என்று நாஸ்திகன் எப்படியிருக்கிறானோ அப்படியே ஞானியும் இருப்பான்!
வித்யாஸம் என்னவென்றால் அசடு, பைத்தியம் உள்ளே ஒன்று, ஜடமாக உணர்ச்சியில்லாமலிருக்கும்; அல்லது காரணமேயில்லாமல் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கும். ஞானியோ உள்ளே ஒரே சாந்தி, ஸெளக்யமென்று ஆனந்தமாயிருப்பான்! நாஸ்திகன் நாம் தப்பிப் போய் அவனுக்கு ஒரு சின்ன ஹிம்ஸை பண்ணிவிட்டாலும் பதிலுக்கு நூறு பண்ணுவான். எதுவுமே பண்ணாவிட்டால் கூட ஸத்துக்களை ஹிம்ஸிப்பான். ஞானி சூடு போட்டாலும் சிரித்துக்கொண்டு, உள்ளூர ஆசீர்வாதம் பண்ணிக்கொண்டு இருப்பான்! ஹிம்ஸையிலும் ஆனந்தம்! எல்லாவற்றையும் அறிந்துகொண்டு அசடு மாதிரி, நாஸ்திகன் மாதிரி இருப்பவன் அவன்.
இப்படிக் கட்டையாட்டம் இருந்த பிள்ளையை உன்மாதம் என்று வைத்து ஆசார்யாளிடம் அந்த ப்ராம்மணன் அழைத்துக்கொண்டு வந்தான். பையனைப் பார்த்ததும் அவருக்கு, ‘நம்ம பின்னோட இழுத்துண்டு போறதுக்காக வந்து சேர்த்திருக்கிற வஸ்து’ என்று தெரிந்தது!
“யாருப்பா? எந்த ஊருப்பா?” என்று பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்.
வருஷக் கணக்காக வாய் திறக்காமலிருந்த பையன் ‘டாண்’ என்று, “எல்லாம் ஒண்ணா இருக்கச்சே ‘யாரு, எவா?’ன்னா என்ன அர்த்தம்? எல்லாம் ஸொப்பனமாயிருக்கச்சே, ஸொப்பனத்துக்குள்ளே அந்த ஊர், இந்த ஊர்-னு பேர் வெச்சா, முழிச்சுண்ட அப்புறம் எந்த ஊரைச் சொல்லிக்கிறது?” என்று கேட்டான்.
ச்லோக ரூபமாக, ” நான் மநுஷ்யனில்லை, தேவனில்லை, யக்ஷனில்லை, நாலு ஜாதியில் எதுவுமில்லை, நாலு ஆச்ரமிகளில் யாருமில்லை; நான் ‘நிஜபோதரூபம்‘ – அதாவது ஆத்ம ஞான ஸ்வரூபம்” என்றிப்படி பதில் சொன்னதாக இருக்கிறது. ‘ஹஸ்தாமலக ஸ்தோத்ரம்’என்று பேர்.
பிள்ளை பேசுகிற ஸந்தோஷத்தில் தகப்பனார் அகத்துக்கு அழைத்துக்கொண்டு போனான். அங்கே போனால் அந்தப் பிள்ளை பழையபடியே ஆகிவிட்டது.
ஆசார்யாளிடம் மறுபடிக் கூட்டிக்கொண்டு வந்தான். அவர்கிட்டேயானால் அவரைவிட ஞானமாகப் பேசுகிறது!
பிள்ளை நேராக இருந்தால் போதும் என்கிற எண்ணத்தில் தகப்பனார், ” இது எங்க பிள்ளை இல்லை, உங்க பிள்ளைதான்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அப்படியே ஆசார்யாள் தன்னுடைய சிஷ்ய பரிவாரத்தில் அந்தப் பிள்ளையைச் சேர்த்துக்கொண்டு ‘ஹஸ்தாமலகர்’ என்று பேர் வைத்தார்.
ஹஸ்தாமலகம் என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ என்பதுதான்! அப்படியென்றால் என்ன? கத்திரிக்காய், மாங்காய் இப்படி எதை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பார்த்தாலும் அதன் அடிப் பக்கத்தில் நிறையப் பங்கு கையில் ஒட்டிக் கொண்டிருக்கும். அதனாலே அந்தக் காய்களில் கால், அரைக்கால் பாகம் கண்ணுக்குத் தெரியாது. நெல்லிக்காய்தான் கையில் ஒட்டிக்கொள்கிற பாகம் ரொம்ப ரொம்பக் குறைச்சல். அதனாலே நன்றாக முழு ரூபமும் தெரியும். பூமியில் விழுந்து கிடக்கும்போதுகூட அப்படித்தான். சுத்தமாக ரவுண்டாக அதுதான் இருப்பதால் இப்படி!
எலுமிச்சங்காய், விளாங்காய் முதலானதுகூட ரவுண்டாயிருந்தாலும் ‘வெய்ட்’ இருப்பதால் கையிலே அழுத்தி ஒரு பாகம் மறைந்துதான் போகும். எடுப்பாக முழு ரூபமும் தெரியும்படி இருப்பது நெல்லிதான். ஆகவே தெளிவாக முழுக்கத் தெரியும் ஸமாசாரத்தை ‘ஹஸ்தாமலகம்’ என்பது. அப்படி பெர்ஃபெக்டாக இவர் ஆத்ம ஸ்வரூபத்தைத் தெரிந்துகொண்டு, ஆசார்யாள் கேட்டவுடன் பளிச்சென்று சொல்லிவிட்டதால் ஹஸ்தாமலகர் என்று பேர்.
அவர் சொன்ன ச்லோகங்களுக்கு ஆசார்யாளே பாஷ்யம் எழுதினார். ‘ஹஸ்தாமலகீயம்’ என்று பேர்.
புரி ஜகந்நாத மடத்தில் ஹஸ்தாமலகரை முதல் ஸ்வாமிகளாக ஆசார்யாள் வைத்ததாக நம்பப்படுகிறது. த்வாரகை என்றும் இன்னொரு நம்பிக்கை.