ஹஸ்தாமலகர் ஒரே அத்வைத அநுபவத்திலிருந்தவர் என்றால் நாலு முக்ய சிஷ்யர்களில் பாக்கியிருக்கிறவர் இதற்கு முழு வித்யாஸமாயிருந்தவர்.
ஆசார்யாள் சொன்னதென்ன? “பாவாத்வைதம் ஸதா குர்யாத் க்ரியாத்வைதம் ந கர்ஹிசித்: பாவனையில் அத்வைதமாக, எல்லாம் ஒன்று என்று அநுபவிக்க ஸதாகாலமும் பழக்கிக் கொள்ளு; ஆனால் ஒருபோதும் கார்யத்தில் பார்க்க வேண்டிய வித்யாஸங்களைப் பார்க்காமலிருக்காதே!” என்றார். ஆனால், இப்படி பாவனையில் அத்வைதம் பழகிக் கொண்டே போனால் ஒரு நிலையில் கார்யத்தில்கூட வித்யாஸம் தெரியாமல் போகும். பட்டு வஸ்த்ரத்தால் காலைத் துடைத்துக்கொண்டு வீசி எறித்துவிட்டு அழுக்குக் கந்தலைக் கட்டிக்கொள்ளத் தோன்றும்! இப்படி அநேகம் தோன்றும். அந்த நிலையில் கட்டுப்படுத்தாமல் அப்படியெல்லாமும் கார்யத்திலேயே பண்ணிவிட்டுப் போகலாம். அன்னத்தை உடம்பில் தேய்த்துக் கொள்ளலாம், அமேத்யத்தை தின்னலாம்; கழுதையை நமஸ்காரம் பண்ணலாம், ராஜாவை உதைக்கலாம். மனஸில்தான் அத்வைதம், லோகத்தில் இல்லை என்பது போய்விட்ட அப்போது “அத்வைதம் த்ரிஷுலோகேஷு” -மூன்று லோகத்திலுள்ள ஸகல ஸமாசாரங்களைக் குறித்தும் கார்யத்திலேயே வேண்டுமானாலும் அத்வைதம் பார்க்கலாம். ஆனால் இதற்கும் ஒரே ஒரு விதி விலக்கு, “அத்தனை விஷயத்திலும் அத்வைதமாயிருந்தாயானாலும், குரு என்று இருக்கிறாரே, அவரிடம் மட்டும் அத்வைதம் கூடாது – கார்யத்தில் மட்டுமில்லை, பாவத்தில்கூடக் கூடாது! நாத்வைதம் (ந அத்வைதம்) குருணா ஸஹ“.
அத்வைதம் த்ரிஷுலோகேஷு நாத்வைதம் குருணா ஸஹ.
(ஆசார்யாளின் “தத்-த்வோபதேசம்” என்ற நூலின் இறுதியில் வருவது)
குருவும் தானும் ஒன்று என்று நினைக்கப்படாது. ஈச்வரனும் தானும்கூட ஒன்று என்று நினைக்கலாம்! நினைக்கலாம் என்ன? முடிவிலே அப்படித்தான் நினைக்க வேண்டும். ஞானம் வந்துவிட்டு ஈச்வரன்கிட்டேயும் அத்வைதம்தான். ஆனாலும் ‘நாம் நினைப்பது, நாம் செய்வது’ என்று துளி ஒட்டிக்கொண்டிருக்கிறவரைகூட ‘நானும் குருவும் ஒண்ணு’ என்று நினைக்கக்கூடாது. [அடுத்து வரும் வாக்யங்களை விடாமல் சிரித்தவாறே மொழிகிறார்கள்1:] வேணும்ம்ம்னு அத்தனை பொய்யையும்தான் குருவிடம் வெச்சுக்கணும்! ‘பேதம் த்வைமாச்சே, த்வைதம் பொய்யாச்சே’ – ன்னா, அத்தனை பொய்யையும்தான் குரு கிட்டே வெச்சுக்கணும்! அப்படித்தான் அம்பாள் ஆசை! அப்படித்தான் அவள் ‘ஆர்டர்’ போட்டிருக்கா! அவ யாரு? ப்ரம்ம வித்யா ஸ்வரூபிணி, ஞானாம்பாள்-ன்னும் சொல்றோம்; மாயை, மஹா மாயை-ன்னும் சொல்றமோல்லியோ? அதனாலே பேதம், பொய் எல்லாமும் அவள் பண்ணினதுதானே? அதிலேயும் அழகா, மதுரமா ப்ரேமை, தாஸ்யம் (தாஸ பாவம்), கைங்கர்யம், சரணாகதி-ன்னெல்லாம் வெச்சிருக்காளோல்லியோ? ‘என்னை அபேதமா ப்ரம்ம வித்யைன்னு தெரிஞ்சுக்கப் பண்றாரே, குரு-ன்னுட்டு – அவர் கிட்டேயே இந்த பேதத்தையெல்லாம் காட்டு! ஸத்யத்தைச் சொல்றவர்கிட்டே அத்தனை பொய்யும் பண்ணு! அவர் ‘டீச்’ பண்ற அத்வைதத்தையெல்லாம், அவரொருத்தர் விஷயமா மட்டும் மூட்டை கட்டி வெச்சுட்டு, ‘ஸ்வாமிகளே! நீங்க வேறே, நான் வேறேதான்! நீங்க மஹா ஸமுத்ரம், நான் அணுவிலேயும் அணு! நீங்க ஆண்டான், நான் அடிமை’ன்னு இரு. தாஸ்யம் பண்ணு, ஸேவை பண்ணு, சரணாகதி பண்ணு’ன்னு ஆஜ்ஞை பண்ணியிருக்கா! இந்த ஒரு இடத்தில் த்வைதம்தான்னு வெச்சுண்டு, ப்ரேமையினாலே, பணிவிடையினாலே அநுக்ரறத்தை அப்படியே பொங்கிண்டு வரும்படிப் பண்ணிட்டா பாக்கி ஸமஸ்த ப்ரபஞ்சத்திலேயும் அத்வைத பாவம் கெட்டியா ஸ்திரமாயிடும்…
அப்படியிருந்தவர்தான் அந்த நாலாவது சிஷ்யர். தோடகர் என்று பேர். பேர் என்றால் அப்பா – அம்மா வைத்ததில்லை; ஒரு காரணத்தினால் ஏற்பட்டது. ஆனந்தகிரி என்று அவருக்கு முதல் பேர்.
ஆசார்யாளுக்கு ஸதாகாலமும் பார்த்துப் கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருப்பார். ரொம்ப ஸாது. பார்த்தால் அசடு என்று தோன்றும். ஆசார்யாள் சிஷ்யர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். ஆறாயிரம் சிஷ்யர்கள் அவரை எப்பவும் சூழ்ந்து கொண்டிருப்பார்களென்று சொல்லியிருக்கிறது. எல்லாரும் புத்திசாலிகள். பாடத்தை ரஸித்துக் கேட்டுக்கொண்டு, நடுவே நடுவே ஸந்தேஹமெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு, ‘ஆஹா, ஆஹா!’ என்று கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். இவர் மட்டும் வாயை மூடிக் கொண்டிருப்பார். ‘ஒண்ணும் புரிஞ்சுக்கத் தெரியாத அசடு’ என்று மற்றவர்கள் நினைத்தார்கள்.
ஒருநாள் அவர் பாடத்துக்கு வர நாழியாயிற்று. ஆசார்யாள் அவருக்காகக் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். மற்ற சிஷ்யர்கள், ‘இவருக்காக ஏன் wait பண்ணனும். அவர் வந்தாலும் ஒண்ணு, வராட்டாலும் ஒண்ணுதானே?’ என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
‘அப்படியா ஸமாசாரம்?’ என்று ஆசார்யாள் நினைத்தார். ‘நம்மை ஆசார்யன் என்று வந்தடைந்த குழந்தைகளுக்கு வித்யா கர்வம், ‘நாம ஒசத்தி இன்னொருத்தன் மக்கு’ என்று எண்ணங்கள் வரப்படாதே’ என்று கருணையோடு நினைத்தார். இதைவிட ஒரு விசேஷமான ஒரு கருணை மக்கு என்று மற்றவர்கள் நினைத்த சிஷ்யரின் மேலே அவருக்கு உண்டாயிற்று.
அதே ஸமயம் சிஷ்யர் குதித்துக்கொண்டு, ஆனந்த நர்த்தனம் பண்ணிக்கொண்டு, ஆசார்யாளின் மேலே ஒரு அத்புதமான ஸ்தோத்ரத்தை கானம் பண்ணிக்கொண்டு அங்கே வந்தார்! புதுசாக அவரே, அப்பத்தான், மெய் மறந்த நிலையில் பண்ணின ஸ்துதி. தன்னாலே தாளம் போட வைக்கும் ‘தோடகம்’ என்ற வ்ருத்தத்தில் அமைந்த ஸ்துதி. அந்த வ்ருத்தத்தில் கவனும் பண்ணுவது கஷ்டம். ஸ்தோத்ரத்தில் வார்த்தைகள், கருத்துக்கள் எல்லாமே வித்வான்களும் ஆச்சர்யப்படும் படியாக வந்து விழுந்திருந்தன. மக்கு என்று நினைத்தவர்களெல்லாம் ‘இப்படியும் உண்டா?’ என்று கொண்டாடும்படியாக ச்லோகம் ச்லோகமாக எட்டு, ஸரியாகத் தாளம் போட்டுக்கொண்டு, குதித்துக்கொண்டு அவர் சொன்னார்.
அதற்குத் “தோடகாஷ்டகம்” என்று பெயர்.
பண்ணியவருக்குத் “தோடகாசார்யாள்” என்றே பெயர் ஏற்பட்டுவிட்டது!
அதில் ஒரு ச்லோகம் சொல்கிறேன். பெரியவா வாக்கைச் சொல்வதைவிட நான் என்ன சொல்லக் கிடக்கிறது? ஏதோ எனக்குத் தெரிகிற பக்தி ஸமாசாரம் எல்லாருக்கும்தான் தரணும். ஞானந்தான் தனியாய் அநுபவிப்பது. அது வருகிறபோது பார்த்துக்கொள்ளலாம்! பக்தி எல்லாருக்கும் கொடுத்து, சேர்ந்து அநுபவிப்பது – பக்ஷணத்தைப் பிறத்தியாரோடு சேர்ந்து சாப்பிடுகிற மாதிரி! மற்றவர்களோடு கலந்து அநுபவித்தில் எந்த ‘ரிக்ரியேஷ’னும் (பொழுது போக்குக் கலையும்) உள்ளே தேனாக இருக்கிற ஊற்றைத் தராது. பக்தி ஸ்துதிதான் தரும். ‘தோடகாஷ்டகம்’ அப்படி ஒன்று அதில் ஒரு ச்லோகம்,
ஜகதீம் அவிதம் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸச் சலத: |
அஹிமாம்சு-ரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் ||
‘மஹா மஹஸ்’ என்றால் பெரிய ஜ்யோதி. இப்படி ஒரு ‘அருட் பெரும் ஜோதி’ இருக்கிறது. ஜனங்களையெல்லாம் ரக்ஷிப்பதற்காக (‘ஜகதீம் அவிதும்’), ஜனங்கள் தப்பு வழியில் போகாமல் நேரே போகப் பண்ணுவதற்காக, இப்படியான அருள் ஜோதிகள் மநுஷ்ய உருவம் எடுத்துக் கொண்டு (‘கலித ஆக்ருதய:’) பல மஹான்களாக ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ‘சலத: ‘என்பதில் ச (cha)இல்லை. இப்படிச் சொன்னால் ‘விசரந்தி’ என்று சொன்ன ஸஞ்சாரத்தையே ரிபீட் பண்ணுவதாகிவிடும். அதைவிட ஆழமான அர்த்தம் கொடுக்கும்படியாக, இரண்டாவது ‘ச'(chha) போட்டுச் சொல்லியிருக்கிறார். ‘ஏமாற்றுவது’, ‘வேஷம் போடுவது’ என்று அர்த்தம்! ‘ஜனங்களை ரக்ஷிப்பதற்காக மஹான்கள் ஏமாற்று வித்தை பண்ணுகிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறது!’ ஆழமாவது அர்த்தமாவது? விபரீதமாயல்லவா இருக்கு? என்றால்… இதுதான் கருணையுடைய மாயம், ஏமாற்று ஜாலம் என்று ஸ்வாதீனமாகச் சொல்வது. உண்மையில் அவர்கள் நம் மாதிரி மநுஷ்யர்களா? இல்லையே! அருள் ஜோதிதானே? மநுஷர் வேஷம் போடுவது ஏமாற்றுதானே? லோகத்தில் அவர்களுக்கு வாஸ்தவத்தில் ஏதாவது ஸம்பந்தமுண்டா? இப்படி க்ஷேத்ர யாத்ரை தீர்த்த யாத்ரை பண்ணி அவர்கள் அடையவேண்டிய பலன் ஏதாவது உண்டா? இருந்தாலும் இதெல்லாம் பண்ணுகிறாகளென்றால் [சிரித்து] fraud-தானே? அதனால்தான் ‘chha’ போட்டு “சலத:”!
இப்படி அநேக நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் மாதிரியான ஜ்யோதிஸ்கள் மஹான்கள் என்று ஸஞ்சாரம் பண்ணி வருகிறார்கள். நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் இருந்தால் அவற்றின் ப்ரகாசத்தையெல்லாம் சேர்த்து வைத்து ஸுர்யன் என்றும் ஒன்று இருக்கிறது. அந்த ஸூர்யன் உதித்தாச்சு என்றால் மற்ற க்ரஹ, நக்ஷத்ர ப்ரகாசமெல்லாம் மறைந்து போய்விடுகிறது! ” இப்படி அருள் ஜ்யோதிகளுக்குள்ளே, அறிவு ஜ்யோதிகளுக்குள்ளே நீங்கள்தான் ஸுர்யனாக இதோ எதிரே ப்ரகாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்!” என்று ஆசார்யாளைப் பார்த்துச் சொல்கிறார்.
“அஹிமாம்சு: இவ அத்ர விபாஸி குரோ !”
‘ஹிமாம்சு’ என்றால் குளிர்ந்த கிரணமுடைய சந்திரன். ‘அஹிமாம்சு’ என்றால் அதற்கு மாறுதலான ஸூர்யன்.
க்ரஹங்கள், நக்ஷத்ரங்கள், ஸூர்யன் எல்லாமே ஸஞ்சாரம் பண்ணியபடிதான் இருக்கின்றன. ‘ஸ்டேஷனரி’ நிலையானவை) என்று சொல்கிறவை உள்பட அத்தனை galaxy-களும் நகர்ந்தபடியேதான் இருக்கின்றன என்று கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி இந்த மஹான்களாகிய மஹஸ்ஸுகளும் (ஜ்யோதிகளும்) லோகத்துக்கு ஞான ப்ரகாசத்தைக் கொடுத்தபடி ஸஞ்சாரம் பண்ணியபடியிருக்கிறார்கள் என்கிறார்.
இன்னொன்று தோன்றுகிறது. அகஸ்த்ய நக்ஷத்ரம் உதித்தால் கலங்கிய ஜலாசயங்கள் (நீர் நிலைகள்) எல்லாம் தெளிந்துவிடும். ஆசார்ய ஸூர்யன் உதித்ததில் கலங்கின அறிவுகளெல்லாம் தெளிந்து விட்டன!
கடைசி ச்லோகத்தில் என்ன சொல்கிறாரென்றால், “அசடாட்டம் இருந்த நானா இப்படிப் பாடுகிறேன் என்றால், நிஜமாக நானா பாடுகிறேன்? எனக்கு என்ன தெரியும்? நீங்கள் ஆய கலைகள் அறுபத்து நாலும் தெரிந்த ஸர்வஜ்ஞர் என்றால், எனக்கோ ஒரு கலையும் தெரியாது; ‘விதிதா ந மயா விசதைக கலா‘. “விசதைக கலா”: ‘விசத’மாக என்றால் ‘தெள்ளத் தெளிய’. எத்தனை வித்வானானாலும் அறிவினால் மாத்ரம் ஒரு தத்வத்தையோ, வேறே விஷயத்தையோ பிரிந்து நின்று தெரிந்து கொள்ளும் வரையில ‘தெள்ளத் தெளிய தெரிந்து கொண்டேன்’ என்று சொல்லமுடியாது.
“சிவாநந்தலஹரி”யில்2 ஸர்வஜ்ஞரான ஆசார்யாளே ஈச்வரனை “ஸர்வஜ்ஞ!” என்று கூப்பிட்டு, “எனக்கென்ன தெரியும்?ஸ்ம்ருதி தெரியுமா? ஷட்சாஸ்த்ரம் தெரியுமா? வைத்யம் கிய்த்யம், சகுண சாஸ்த்ரம் எதுவாவது தெரியுமா? பொயட்ரி தெரியுமா? பாட்டு, கீட்டு தெரியுமா? புராணம், மந்த்ர சாஸ்த்ரம் முதலான உசந்த ஸமாசாரம், டான்ஸ், விகடம் முதலான பொழுதுபோக்கு ஸமாசாரம் – எதுவுமே தெரியாமல் மாடு மாதிரி (‘பசு’ என்று சொல்லிக் கொள்கிறார்) இருக்கிறேன். நான் பசுவானாலும், நீதான் ‘பசுபதி’ என்று பேர் வைத்துக் கொண்டிருப்பதால் கருணை காட்டி யாகணும்” என்று சொல்லியிருக்கிறார். [சிரித்து] இது “சலத:” என்று சொன்ன ஏமாற்றுதானே?
தோடகர், “எனக்கு எதுவும் தெரியாது. அறிவினால் தங்களுக்கு ப்ரீதி செய்ய லாயக்கில்லாதவன். த்ரவயத்தால் தங்களுக்கும் சிஷ்யர்களுக்கும் செய்யவும் சக்தியே இல்லாதவன். செல்லாக் காசு இல்லாதவன்: ‘ந ச கிஞ்சந காஞ்சநம் அஸ்தி குரோ !’ ஆனாலும் தங்களிடம் தன்னியல்பாகப் பெருகும் க்ருபையே என்னை ரக்ஷித்து வருகிறது. அதை எல்லாமும் உடனுக்குடன் (‘த்ருதமேவ’) அளித்து வரணும் : ” த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம் ” என்று முடித்தார்.
ஒவ்வொரு ஸ்லோகத்தையும், “பவ சங்கர தேசிக மே சரணம்” என்று முடித்து அப்படியே ஆசார்ய சரணங்களில் சரணாகதி பண்ணிக்கொண்டு விழுந்துவிட்டார்.
ஆசார்ய சரணாகதி பண்ணிவிட்டோமானால் போதும். அப்புறம், எங்கே போய் முடியணுமோ, நிறையணுமோ அங்கே கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு அவர் பொறுப்பு.
[மிகுந்த நெகிழ்ச்சியுடன்] அந்த ஒருத்தர் என்றைக்கோ நர்த்தனம் பண்ணிக்கொண்டு, சரணாகதி செய்து தாரையாக அழுதது இன்றைக்கும் நம் எல்லாரையும் தொட்டு, உயர்வு தருகிறது. இது ஆனந்த தாரை!
அன்றைக்குக் கூட இருந்த ஆறாயிரம் பேர் கண்ணிலும் தாரை தாரையாய் வராமலிருக்குமா? ஆனால் அது ஆனந்த தாரை மட்டுமல்ல. பச்சாத்தாபமும் சேர்ந்து கண்ணீரை வருவிக்கிறது. ‘இவரைப் போய் மக்கு ப்ளாஸ்திரி என்று அபசாரமாக நினைத்தோமோ!’ என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். ஆசார்யாளையும் பண்ணுகிறார்கள். தோடகரையும் பண்ணுகிறார்கள். சில பேர் குரு எதிரில் சிஷ்யர் சரணத்தில் விழக்கூடாதென்று ஆசார்யாள் சரணத்திலேயே விழுந்து தாரை தாரையாக ஜலம் விடுகிறார்கள். கண்ணீர்த் துளிகளாகவே அர்ச்சனை!
தோடகாசார்யாள் பெருமை லோகத்துக்கெல்லாம் இப்படித் தெரிந்தது.
“ச்ருதி ஸார ஸமுத்தரணம்” என்று தோடகாசார்யாள் செய்ததாக ஒரு அத்வைத புஸ்தகம் இருக்கிறது. அவருக்கு ஏற்பட்ட பேருக்கு ஏற்றாற்போல் அதுவும் தோடக வ்ருத்தத்திலேயே இருக்கிறது.
தேசத்தின் வடக்கெல்லையில் பதரிநாதத்தில் ஆசார்யாள் ஸ்தாபித்த ஜ்யோதிர் மடத்தில் தோடகாசார்யாளையே முதல் பீடாதிபதிகளாக நியமித்தார்.
1 அவர்கள் சுவைத்துக் கூறியதன் சாயல் ஓரளவுக்கேனும் தெரியவேண்டுமென்று அவர்களது பேச்சு மொழியிலேயே கொடுத்துள்ளது.
2 “ஸ்ம்ருதௌ சாஸ்த்ரே” என்று தொடங்கும் ஐந்தாவது ச்லோகம்”