இன்னும் இரு சிஷ்ய ரத்தினங்கள்: ஸர்வஜ்ஞாத்மரும் ப்ருத்வீதவரும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

நாலு முக்யமான சிஷ்யர்கள் என்று ப்ரஸித்தமாகச் சொன்னாலும் இன்னம் சில மஹான்களும் ஆசார்ய சிஷ்யர்களில் ‘சிஷ்ய ரத்னம்’ என்னும்படி இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேரைப் பற்றிச் சொல்கிறேன். இரண்டு பேரும் — ஸுரேச்வராசார்யாள் மாதிரியே — முதலில் ஆசார்யாளிடம் (வாதச்) சண்டை போட்டுத் தோற்றுப் போய் அப்புறம் பரம சிஷ்யர்களாக ஆனவர்கள். ஒருத்தர் ஆசார்யாளைவிட வயஸில் ரொம்பப் பெரியவர். ப்ருத்வீதவர் என்று பெயர். ப்ருத்வீதரர் என்றும் சொல்லியிருக்கிறது. மற்றவர் ஆசார்யாளைவிட ரொம்பச் சின்னவர்; குழந்தை. அவர் பெயர் ஸர்வஜ்ஞாத்மர்.

ஆசார்யாள் கடைசி காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸர்வஜ்ஞபீடம் ஏறப்போனபோது அவரோடு பல பேர் வாதம் பண்ணப் போனார்கள். அவர்களில் தாம்ரபர்ணி தீரத்திலிருந்து போனவர்களும் இருந்தார்கள். அவர்களில் இந்த ஏழு வயஸுக் குழந்தை, அதன் தகப்பனார் ஆகியவர்களும் இருந்தார்கள். அப்போது குழந்தைக்குப் பேர் மஹாதேவன். இதற்கு முந்தியே தகப்பனார் தீவ்ர மீமாம்ஸகராக இருந்து கொண்டு ஜைன-பௌத்த மதங்களைக் கண்டனம் பண்ணியபோது இந்தக் குழந்தையும் அவர்களிடம் வாதம் பண்ணி அசர அடித்திருந்தது! இப்போதும் ஆசார்யாளின் உத்தர மீமாம்ஸைக்கு (வேதாந்தத்திற்கு) முன்னே தகப்பனார் உள்பட மற்ற எல்லாரும் தங்களுடைய பூர்வ மீமாம்ஸையால் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போன அப்புறமும் இந்தக் குழந்தை மட்டும் விடாமல் நாலு நாள் வாதம் பண்ணிற்று! கடைசியில் தோற்றுத்தான் போயிற்று. ஆசார்யாள் ஸர்வஜ்ஞ பீடம் ஏறினார்.

ஆதியிலே குழந்தையாசார்யாளைப் பார்த்தவுடன் கோவிந்த பகவத் பாதருக்கு ப்ரேமை பொங்கிக்கொண்டு வந்தது போல இப்போது அந்தத்தில் ஆசார்யாளுக்கே இந்தக் குழந்தையிடம் வந்தது.

குழந்தைக்கும் ‘தோற்றுப் போனோமே!’ என்று இல்லாமல், ‘ஸத்யம் தெரிந்ததே!’ என்று ஸந்தோஷமாக இருந்தது. ‘தெரிவித்தாரே!’ என்று ஆசார்யாளிடம் பக்தி, ப்ரைமையோடு கூடிய பக்தி, உண்டாயிற்று. சின்ன வயஸில், “ஸந்நியாஸம் தாருங்கள்:” என்று ஆசார்யாளைப் ப்ரார்த்தித்துக் கொண்டது. ஆசார்யாள் பூர்ண அநுக்ரஹத்தோடு அப்படியே கொடுத்தார்.

அப்புறம் குழந்தைக்கு ஸர்வஜ்ஞாத்மர் என்று பேர் ஏற்பட்டது. ஆசார்யாள் ஸர்வஜ்ஞர், அவருக்கு ரொம்ப ஆத்மார்த்தமான சிஷ்யர் என்று தெரிவிக்கும் பெயர்!

ஆசார்யாள் சரீர யாத்ரை முடித்து ப்ரஹ்மீபாவம் அடைவதற்கு முன் ஸுரேச்வராசார்யாளின் மேல் பார்வையின் கீழ் குழந்தை ஸர்வவஜ்ஞாத்மரைத்தான் இந்த (காஞ்சி) மடத்தின் ஸ்வாமிகளாக நியமனம் பண்ணினார். அதனால் ஸுரேச்வரரைத் தம்முடைய குருவாக அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். குருவின் பெயரைச் சொல்வது மரியாதையல்ல என்பதால் ஸுரேச்வரர் என்பதை அதே அர்த்தம் கொடுக்கும் ‘தேவேச்வரர்’ என்று சொல்லியிருப்பார்.

ஆசார்யாளுடைய சாரீரக பாஷ்யத்தை ஆதாரமாகக் கொண்டு ஸர்வஜ்ஞாத்மர் “ஸம்க்ஷேப சாரீரகம்” என்று புஸ்தகம் எழுதினார். ‘ஸம்க்ஷேபம்’ என்றால் சுருக்கம். ‘சுருக்கம்’ என்றாலும் இதில் ஆயிரம் ச்லோகத்துக்கு மேலே இருக்கிறது…. ஆமாம், ச்லோகங்கள் – ச்லோக ரூபத்தில் அத்வைதப் புஸ்தகம் எழுதினவர்கள் ரொம்பக் குறைச்சல். ஆசார்யாளுக்குப் பிற்காலத்தில் அப்படி எழுதியவர்களில் முக்யமான இரண்டு பேர் ஸர்வஜ்ஞாத்மரும், வித்யாரண்ய ஸ்வாமிகளும்தான்.

“பஞ்ச ப்ரக்ரியா” என்று அவர் இன்னொரு அத்வைத நூலும் செய்திருக்கிறார். எந்த ஸித்தாந்தத்திலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உண்டு என்று ஏற்றுக் கொள்வதுதானே ஆசார்யாள் வழி? அந்த வழியில் இவர் மீமாம்ஸைப் புஸ்தகமும் ஒன்று சின்னதாக எழுதியிருக்கிறார்.1

வ்யாஸ பூஜையில் விசேஷ ஸ்தானம் கொடுத்துப் பூஜிக்கப்படுபவர்களில் ஸர்வஜ்ஞாத்மர் ஒருவர். ஐந்து ஐந்து ஆசார்யர்களாக ஆறு ‘பஞ்சக’ங்களுக்கு அந்தப் பூஜையில் வழிபாடு நடத்தப்படுகிறது. அவற்றில் ‘த்ரவிடாசார்ய பஞ்சகம்’ என்பதில் ‘ஸம்க்ஷேப சாரீரகாசார்யர்’ என்று பெயர் கொடுத்து அவரைச் சேர்த்திருக்கிறது. ‘ஸர்வஜ்ஞாத்ம முனி‘ என்று அவரை மரியாதை கொடுத்துச் சொல்வது வழக்கம்.

ப்ருத்வீதவாசார்யாள் என்பவர் ஆசார்யாளுக்கு மூத்தவர். ஆசார்யாளுக்கு முந்தியும் பலர் ஸூத்ரபாஷ்யம் எழுதி அவை வ்யாஸருடைய வேதாந்தமான அபிப்ராயத்துக்கு மாறாக இருந்ததாலேயே அப்புறம் ஸரியான பாஷ்யம் நம் ஆசார்யாள் செய்ததாகப் பார்த்தோமல்லவா? இந்த பாஷ்யங்களில் ஒன்று, அதாவது வேதாந்தத்தை அநுஸரிக்காதது, ப்ருத்வீதவர் பண்ணியதாகும். ‘ப்ருத்வீதரர், அபிநவ குப்தர் முதலான 99 பேர்களின் பாஷ்யங்களை ஆசார்யாள் சின்னபின்னம் பண்ணி லோகத்தில் இல்லாத படி ஆகிவிட்டார்’ என்று ‘தத்வ சந்த்ரிகா’ என்ற புஸ்தகத்தில் இருக்கிறது.2 அபிநவகுப்தர் தந்த்ர சாஸ்த்ரம், அலங்கார சாஸ்த்ரம் இரண்டிலும் மிகுந்த க்யாதி பெற்றவர். அவர் பேருக்கும் முந்தி, இவரைச் சொல்லி, ‘ப்ருத்விதரர் அபிநவ குப்தர் முதலான’ என்பதால் ப்ருத்வீதவாசார்யாளுடைய உசந்த ஸ்தானம் தெரிகிறது.

தம் பாஷ்யம் போனபின் அவர் ஆசார்யாளிடம் சரணாகதி பண்ணி சிஷ்யராயிருக்கிறாரென்று தெரிகிறது.

நூறு வருஷம் முந்தி ஒளஃப்ரெஷ்ட் (Aufrecht) என்று ஒரு வெள்ளைக்காரர் நம்முடைய பழைய ஏட்டுச் சுவடிகளுக்குக் ‘காடலாக்’குகள் தயாரித்திருக்கிறார். அவற்றில் ஒன்று ஜெர்மனியில் லைப்ஸிக் யூனிவர்ஸிடியின் லைப்ரரியில் இருக்கிறது. இன்னொன்று இங்க்லாண்டில் ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்ஸிடிலுள்ள ப்ரஸித்தமான போட்லியன் லைப்ரரியில் இருக்கிறது. லைப்ஸிக் காடலாகில் “குரு பாதாதி நமஸ்காரம்” என்ற சுவடியைப் பற்றிச் சொல்லும்போது ஆசார்யாளின் சிஷ்யர்களான தோடகர், அநுபூதி ஸ்வரூபாசார்யார் ஆகியவர்களுடன், ப்ருத்வீதராசார்யார் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் ‘காடலாகி’லிருந்து நாம் அவர் செய்த முக்யமான கார்யமென்ன என்ற தெரிந்து கொள்கிறோம். ப்ருத்வீதவர் (அல்லது, தரர்) எழுதியதாகப் புஸ்தகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் எழுதிய சாரீரக பாஷ்யத்தை ஆசார்யாள் நிராகரணம் பண்ணின பிறகு அவர் ஒன்றும் எழுதவில்லை போலிருக்கிறது. ஆனாலும் அவரால் ஆசார்யாளின் மஹத்தான கார்யம் ஒன்று நடந்திருக்கிறது. அதை இந்தக் ‘காடலாகி’லிருந்து தெரிந்து கொள்கிறோம். அதில் ‘த்வாதச மஹா வாக்ய விவரணம்’ என்ற ஏட்டுச் சுவடியைப் பற்றி விவரம் தரும்போது இந்த விஷயம் தெரிகிறது. அந்தப் புஸ்தகம் வைகுண்டபுரி என்பவர் எழுதியது. என்ன சொல்லியிருக்கிறாரென்றால்….

நம்முடைய வேதாந்த ஸம்ப்ரதாய ஸந்நியாஸிகள் தேசம் முழுதும் பரவியிருந்ததால் வகை தொகை பண்ணிப் பத்துப் பிரிவாக்கி வைத்து ஒரு ஒழுங்கில் நிர்வாஹம் செய்ய வேண்டுமென்று ஆசார்யாள் நினைத்தார். இதுவே ‘தசநாமி’ ஸந்நியாஸிகள் என்று சொல்வது. ‘தஸ்நாமி’, ‘தஸ்நாமி’ என்று வடக்கே சொல்கிறார்கள். ஒவ்வொரு பிரிவின் பெயரையும் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஸாது தன் பெயரோடு சேர்த்துப் போட்டுக் கொள்வார். ‘தீர்த்த’, ‘ஆச்ரம’, ‘வன’, ‘அரண்ய’, ‘கிரி’, ‘பர்வத’, ‘ஸாகர’, ‘ஸரஸ்வதி’, ‘பாரதி’, ‘புரி’ என்று பத்து இந்தப் பத்துப் பிரிவு ஸந்நியாஸிகளும் ப்ருத்வீதரரின் சிஷ்யர்கள்:” ப்ருத்வீதராசார்ய: தஸ்யாபி சிஷ்யா தச” என்று வைகுண்டபுரி சொல்கிறார்.

இதற்கு என்ன அர்த்தம்? ஆசார்யாள் ஒழுங்குமுறை பண்ணிய தசநாமி ஸந்நியாஸிகள் அவ்வளவு பிரிவினரும் ப்ருத்வீதவருக்கு சிஷ்யர்களென்றால் என்ன அர்த்தம்? ஸந்நியாஸிகளைப் பல பிரிவுகளாக ஒழுங்கு பண்ணி வைத்தால் நல்லது என்று ஆசார்யாள் நினைத்த உத்தேசத்தைச் செய்து காட்டியவர். இவர் என்று அர்த்தம்! தேசம் முழுதிலும் இப்டி அந்த ஸந்நியாஸிகளைப் பிரித்து ஸித்தாந்தம், ஸாதானை எல்லாம் ஒன்றேதான் ஆனாலும் வெளி அடையாளங்களில் வித்யாஸங்கள் வைத்துப் பிரித்து — தண்டத்தில் துணியை எப்படி முடிந்திருக்கிறது என்பதைப் பார்த்தேகூட இவர் இன்ன பிரிவு என்று கண்டுபிடிக்கும்படி வைத்து — ஆர்கனைஸ் செய்தவர் ப்ருத்வீதராசார்யாள்தான் என்று அர்த்தம். இதில் வெள்ளை வேஷ்டிக்காரர்கள்கூட உண்டு. ஒரே ஆண்டிக் கூட்டம் என்றால் சேர்த்து வைத்து நிர்வஹிக்க முடியாமல் போய்விடும். ஆகையினால் ஒரு ஒழுங்கு முறையில் பிரித்து அதை சுத்தமாக இருக்கும்படி ரக்ஷித்து இப்படிச் செய்தது.

பெரிய கார்யம். இன்றளவும் தழைத்து வந்திருக்கும் படியாக அதை ஸாதித்தவரென்றால் ரொம்பவும் நிர்வாஹத் திறமையுள்ளவரென்று அர்த்தம் மற்றவர்கள் எழுத்துத் திறமையால் அத்வைதத்துக்குத் தொண்டு செய்தார்களென்றால் இவர் ‘ஆர்கனைஸேஷன் ஸைடி’ல் இப்படி மஹத்தான தொண்டு செய்து நம்முடைய நமஸ்காரத்துக்குப் பாத்ரராயிருக்கிறார்.

ஆசார்யாள் எந்த மடத்தில் எந்த சிஷ்யரை வைத்தரென்பதுபற்றி இரண்டு மூன்று நம்பிக்கைகள் இருப்பதில் ஒன்றின்படி ப்ருத்வீதவர் ச்ருங்கேரியில் பீடாதிபதிகளாக இருந்திருக்கிறார். ஜெர்மனி யூனிவர்ஸிடியிலுள்ள ‘காடலாக்’ சொன்னேனே, அதில் “ச்ருங்கேரி ப்ருத்வீதராசார்ய” என்றே இருக்கிறது.

‘ப்ருத்வீதர பாரதி’ என்று அவர் பெயர் குறிப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். தசநாமிகளில் ‘பாரதி’ என்பது ச்ருங்கேரியில் ஸ்வாமிகளாக வருபவர்களுக்கு உரியது. ‘தீர்த்த’ ஸம்ப்ரதாயஸ்தர்களும் அங்கே ஸ்வாமிகளாக வருவதுண்டு. இப்போது இருப்பவர் தீர்த்தர்3. தசநமாங்களும் அந்த மடத்துக்கு உண்டு என்கிறார்கள். ப்ருத்வீதவரின் சிஷ்யர்களாக தசநாமிகள் எல்லாரையும் சொல்லியிருப்பதாகப் பார்த்தோம்.


1 “ப்ரமாண லக்ஷணம்” எனும் நூல்.

2 உமாமஹேச்வர சாஸ்த்ரி என்பவர் எழுதியது.

3 தற்போது ‘மஹாஸந்நிதானம்’ எனப்படும் மூத்த ஸ்வாமிகளாக விளங்கும் ஸ்ரீஅபிநவ தீர்த்த ஸ்வாமிகள் இளைய பட்டம் நியமிக்குமுன் 1963-ல், கூறியது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is தோடகர் தாஸ்ய பக்தியின் திருவுருவம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அதிசயம் சாதித்த அமோக திக்விஜயம்: ஆன்மிய ஐக்கியமும் தேசிய ஐக்கியமும்
Next