காஞ்சி மஹிமை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

திக்விஜயமெல்லாம் முடித்து முடிவாகக் காஞ்சீபுரத்துக்கு வந்தார். ‘கச்சி மூதூர்‘ என்று சங்க இலக்கியமான ‘பெரும்பாணாற்றுப்படை’ முதலியவற்றிலேயே சொல்லப்படும் அந்தப் புராதனமான நகரம் மஹாக்ஷேத்ரம் என்பதாக மட்டுமின்றி பெரிய வித்யா ராஜதானியாகவும் இருந்திருக்கிறது. வடக்கே காசி மாதிரி தெற்கே காஞ்சி. “சான்றோர் உடைத்து” என்று சிறப்பிக்கப்படும் ‘தொண்டை நன்னாட்டின்’ தலைநகரம் அதுதான். “கடிகா ஸ்தானம்” எனப்படும் ஸம்ஸ்க்ருத யூனிவர்ஸிடி இருந்த நகரம் அது. அப்பர் ஸ்வாமிகள் “கல்வியைக் கரையில்லாத காஞ்சி மாநகர்” என்கிறார்1. பல மத ஸித்தாந்திகளும் கூடியிருந்த இடம் அது என்று ‘மணிமேகலை’யிலிருந்து தெரிகிறது. பௌத்தம், ஜைனம், காபாலிகம் முதலான எல்லா மதங்களும் அங்கே பிற்காலத்தில் இருந்ததென்று மஹேந்த்ர பல்லவனின் ‘மத்த விலாஸ ப்ரஹஸன’ நாடகத்திலிருந்து தெரிகிறது. சரித்ரத்தில் சக்கரம் ஒரு முழு சுற்றுச் சுற்றிப் பழையபடியே மறுபடி நடக்கும்போது எந்த வட்டாரத்தில் எப்படியிருந்ததோ அப்படித்தான் திரும்பவும் நடக்கும். அதனால் ஆசார்யாள் காலத்திலும் அங்கே பல மதங்கள் இருந்திருக்க வேண்டும். இப்போதும் பௌத்த சிற்பங்கள் பல அங்கே அகப்படுகின்றன. காஞ்சி மண்டலத்துக்குள்ளேயே இருக்கும் திருப்பருத்திக்குன்றம் ஜினகாஞ்சி என்கிற சமண ஸ்தலமாகப் பேர் பெற்றிருக்கிறது.

க்ஷேத்ரம் என்று பார்க்கும்போது, ‘ரத்ன த்ரயம்’ என்கிற ஈச்வரன், அம்பாள், பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் முக்யமான ஸ்தலமாயிருப்பது அது. எண்ணி முடியாத கோவில்கள் ஸகல தெய்வங்களுக்கும் அங்கே இருப்பதில் ஏகம்பம் பரமேச்வரனின் பஞ்சபூத ஸ்தலங்களில் ப்ருத்வீ க்ஷேத்ரமாயிருக்கிறது. அம்பாள் காமாக்ஷியின் காமகோஷ்டம் – ‘காமகோட்டம்’ என்பது – அத்தனை அம்மன் ஸந்நிகளுக்கும் மூல சக்தி பீடமாயிருக்கிறது2 பெருமாள் வரதராஜாவாக உள்ள விஷ்ணு காஞ்சியை – ‘அத்தியூர்’ என்று வைஷ்ணவர்களின் திவ்ய தேசங்களில் சொல்வது: அதை – மூன்று முக்யமான க்ஷேத்ரங்களில் ஒன்றாகச் சொல்கிறார்கள். ஸ்ரீரங்கமும், திருப்பதியும் மற்ற இரண்டு.

விஷ்ணு காஞ்சியைத் தற்போது சின்ன காஞ்சிபுரம் என்கிறோம். பெரிய காஞ்சிபுரம் என்பது சிவகாஞ்சி. கச்சி ஏகம்பமும் காமகோட்டமும் உள்ள இடம்.

ரத்ன த்ரயம் மட்டுமில்லாமல் ஷண்மத தெய்வங்களுக்குமே முக்யமான க்ஷேத்ரம் காஞ்சி.

பிள்ளையார் கோவில்கள் இல்லாத ஊரே தமிழ் நாட்டில் கிடையாது. அப்படிக் காஞ்சிபுரத்திலும் அநேகம் உண்டு. அங்கே ஒரு பேட்டைக்கே பிள்ளையார் பாளையம் என்று பேர். காமாக்ஷி ஆலயத்தியிலேயே ஆறு, ஏழு விக்நேச்வர மூர்த்திகள் உண்டு. காஞ்சி ப்ருத்வீ க்ஷேத்ரம்; கணபதியே ப்ருத்வீ  தத்வந்தான்.

ஸுப்ரஹ்மண்யருக்கு குமரக் கோட்டம் என்று தனிக் கோயில் இருக்கிறது. கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணம் எழுதி அரங்கேற்றியதே அங்கேதான்! விசேஷம் என்னவென்றால், ஸோமாஸ்கந்த மூர்த்தத்தில் எப்படி குமாரஸ்வாமி ஈச்வரனுக்கும் அம்பாளுக்கும் மத்தியில் இருக்கிறாரோ அப்படியே இந்த குமாரக்கோட்டமும் கச்சி ஏகம்பத்துக்கும் காமகோட்டத்துக்கும் மத்தியில் அமைந்திருக்கிறது.

கச்சபேச்வரர் கோவிலில் ஸூர்யன் ஸந்நிதியில் ‘மயூர சதகம்’ என்று நூறு ச்லோகம் கொண்ட ஸூர்ய ஸ்துதி கல்வெட்டில் பொறித்திருப்பதிலிருந்து அது ஒரு முக்யமான ஸூர்ய க்ஷேத்ரமாகத் தெரிகிறது.

இப்படி ஷண்மதங்களுக்கும் முக்யம் வாய்ந்ததாகக் காஞ்சிபுரம் இருக்கிறது. ஆசார்யாளுக்கு முந்தியே அப்படியிருந்து அவர் அதனாலேயே அங்கே வந்து தங்கியிருக்கலாம். அல்லது ஷண்மத ஸ்தாபனாசார்யாளாகிய அவர் வந்து தங்கியதாலேயே அது இப்படிப் பெருமை பெற்றிருக்கலாம்.

ஸப்த மோக்ஷபுரிகளில் தக்ஷிணத்தில் உள்ள ஒன்றே ஒன்று காஞ்சீபுரம்தான் என்பது அதன் தலையான சிறப்பாகும்.

ஸமய முக்யத்வம், வித்யா ஸ்தான முக்யத்வம், ராஜரீக முக்யத்வம், வ்யாபார முக்யத்வம் எல்லாமே அந்த ஊருக்கு இருந்ததால்தான் “நகரேஷு காஞ்சி” என்று புகழப்பட்டிருக்கிறது.


1 “மறையது பாடி” எனத் தொடங்கும் பதிகம், எட்டாம் பாடல்.

2 “தெய்வத்தின் குரல்” — முதற் பகுதியில் ‘காமாக்ஷியின் சரிதை‘ என்ற உரை பார்க்கவும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is சிவ-சக்தி தர்சனம்:சிவலிங்கங்களும் சக்தி ஸ்துதியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  காஞ்சியில் ஆசார்யாள்
Next