ஆசார்யாள் காஞ்சீபுரம் வந்ததை அநேகமாக அவரது அத்தனை சரித்ர புஸ்தகங்களுமே சொல்கின்றன. காஞ்சியிலிருந்து கொண்டுதான் அவர் ஆறு சிஷ்யர்களை தேசமெல்லாம் அனுப்பிவைத்து ஷண்மதங்களை நிலைப்படுத்தினாரென்று ‘ஆனந்தகிரீயம்’, ‘(ச்ருங்கேரி) குருவம்ச காவ்யம்’ இரண்டிலும் இருக்கிறது.1
ஆசார்யாள் காஞ்சிபுரத்தில் ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் செய்தாரென்று ‘சங்கராப்யுதம்’, ‘கோவிந்த நாதீயம்’, ‘சித்விலாஸீயம்’, ‘குரு ரத்னமாலா’ ஆகிய புஸ்தகங்கள் தெரிவிக்கின்றன2. ‘ஸுஷமா’ மேற்கோளிலிருந்து ‘ப்ருஹச் – சங்கர’, ‘ப்ராசீன சங்கர’ விஜயங்களிலும் இந்த விஷயம் இருப்பதாகத் தெரிகிறது3. ‘வ்யாஸாசலீய’த்தின்படி காஷ்மீரத்தில் ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் என்று த்வனித்தாலும், கதைத் தொடர்ச்சியோ அவருடைய காஞ்சீ வாஸத்தைச் சொல்வதாக இருக்கிறது4. இந்தக் குழப்பத்தைப் போக்குவதாகக் ‘காச்மீரம் என்று காஞ்சி மண்டலத்துக்கே ஒரு பெயர் உண்டு’ என்று கோவிந்த நாதீயத்தில் தெளிவுப்படுத்திச் சொல்லியிருக்கிறது.5 ‘சிவரஹஸ்ய’ இதிஹாஸத்தில் ஆசார்ய சரித்ரத்தை முடிக்குமிடத்தில் அவர் காஞ்சீபுரத்தில் தம்முடைய மடத்தில் வஸித்துவந்த காலத்தில் ‘மிச்ரர்கள்’ என்கிற மஹா பண்டிதர்களை ஸகல சாஸ்த்ர வாதத்திலும் ஸுலபமாக ஜயித்தார் – ”விஜித்ய தரஸா (அ)க்ஷத சாஸ்த்ரவாதை : மிச்ராந் ” என்று சொல்வது ஸர்வஜ்ஞ பீடம் ஏறியதைக் குறிப்பதாகவே தெரிகிறது5.
அவதாரத்தைப் பூர்த்தி பண்ணி ஆசார்யாள் காஞ்சியிலேயே ஸித்தியடைந்ததாக ‘சிவரஹஸ்யம்’, ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’ ஆகிய இதிஹாஸ-புராணங்களும், சில சங்கரவிஜயங்களும், ஆசார்யாள் பற்றிய இதர புஸ்தகங்கள் சிலவும் சொல்லியிருக்கின்றன. ஸித்தி ஸ்தலம் கேதாரிநாத், பதரிநாத் என்று வித்யாஸமாக அபிப்ராயப்படும் சங்கரவிஜயங்கள் முதலிய புஸ்தகங்களும் இருக்கின்றன6.
ஒன்றுபடுத்தவே வந்த ஆசார்யாளின் சரித்ர விஷயமாகவே வித்யாஸமான அபிப்ராயங்களைச் சொல்வது மனஸுக்கு ஏற்கவேயில்லை. அவரொன்றும் ஸ்வசரிதையோ, உயிலோ எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை! பின்னால் வந்தவர்கள் ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றை ஆதாரம், ப்ரமாணம் என்று வைத்துக்கொண்டு முடிவு பண்ணுகிறோம்! அடிப்படை உண்மை நாமெல்லாரும் அவருடைய பக்தர்கள், சிஷ்யர்கள், குழந்தைகள் என்பதுதான். எல்லா ஆராய்ச்சியையும்விட அவரிடம் நம் எல்லோருக்கும் பக்தியும், நமக்குள்ளே கொஞ்சங்கூட த்வேஷலேசமில்லாத அன்பும் இருப்பதுதான் முக்யம்; உயிர்நிலை. அதற்கு ஹானி என்றால் எல்லா ஆராய்ச்சியையும் வாபஸ் வாங்கிக்கொண்டு விடலாம்… [சிரித்து] ” எது ஆசார்யாளின் ஸித்தி ஸ்தலம் ?” என்று கேட்டால், சில ஸித்த புருஷர்களைப்பற்றி ஒருத்தரே மூன்று நாலு இடங்களில் ஸமாதியானாரென்கிறார்களே, அப்படி ஆசார்யளும் ஆனாரென்று சொல்லிவிடலாம் போலிருக்கிறது!
முக்தி க்ஷேத்ரமான காஞ்சீபுரத்தில் ஆசார்யாள் முக்தி அடைந்தாரென்று ஒரு நம்பிக்கை… முக்தி “அடைவது” என்ன? அவரே முக்தி ஸ்வரூபம்! எப்பவும் ஜீவன் முக்தராக இருந்தவர். ஆனாலும் ஒரு நாள் அவர் அவதார சரீரத்தை த்யாகம் பண்ணி நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டாரல்லவா? அந்த விதேஹ முக்தியைத்தான் சொல்கிறேன். அப்படி அவர் முக்தி அடைந்தது காஞ்சீபுரத்தில் காமாக்ஷியின் முன்னாலேயே என்று சில புஸ்தகங்களில் இருக்கிறது. ‘ப்ருஹச் சங்கர விஜய’த்தில் ” தேவ்யா : புர : பரதரே புருஷே விலில்யே ” – ‘அம்பாளின் எதிரக்கே (எதிரில்) பராத்பரமான ப்ரஹ்ம தத்வத்தில் லயித்து விட்டார்’ என்று இருக்கிறது. ‘ப்ராசீன சங்கர விஜய’த்திலும் அப்படியே சொல்லியிருக்கிறது.
காமாக்ஷ்யா : ஸவிதே ஸ ஜாது, நிவிசந்-உந்முக்த-லோக- ஸ்ப்ருஹோ |
தேஹம் ஸ்வம் வ்யபஹாய தேஹ்யஸுகமம் தாம
ப்ரபதே பரம் ||
“ஸ ஜாது காமாக்ஷ்யா: ஸவிதே நிவிசந்” – ஒரு ஸமயம் காமாக்ஷி ஆலயத்துக்குப்போய் அம்பாள் கிட்டே நின்று கொண்டிருந்தார். “உந்முக்த லோக ஸப்ருஹ:” – அப்போது உலகப்பற்று அப்படியே அவருக்கு விட்டுப் போயிருந்தது. எப்போதுமே ஸ்வார்த்தமாக அவருக்கு உலகப்பற்று கிடையாதுதான். ஆனால் அந்த உலகத்தைக் கடைத்தேற்றணும் என்று பரார்த்தமாகப் பற்று இருந்தது! ” பற்றற்றான் “என்கிற ஈச்வரனுக்கே இப்படியரு பற்று, ஆசை இருந்துதான் அவதாரம் பண்ணியது! ஆசையெல்லாம் அறுத்துப் போட்ட ஸந்நியாஸியாயிருந்தும் இந்த ஆசைக்காகத்தான் நாடெல்லாம் நின்ற இடத்தில் நிற்காமல் அலை அலை என்று அலைந்தார்! இப்போது ஒருவாறு “லோகம் பிழைச்சுக்கும்” என்று நிம்மதிப்படும்படி அதை தர்மவழியில் நிறுத்தியாகிவிட்டது. அதனால் ஆசையும் போய்விட்டது; “உந்முக்த லோக ஸ்ப்ருஹ:.” அப்படியே அம்பாளுக்குக் கிட்டே நின்றபடி தேஹத்தை விட்டுவிட்டார் : “தேஹம் ஸ்வம் வ்யபஹாய”. உசந்த ஸ்தானமான தம் இருப்பிடத்துக்குப் போய்விட்டார்- “தாம ப்ரபேதே பரம்”. அதென்ன உசந்த ஸ்தானமென்றால் ப்ரஹ்ம ஸ்வரூபமாயிருப்பதுதான். “கேரளீய சங்கர விஜய”த்திலும் இப்படியே சொல்லிக் கூடுதலாக, “இப்படி அகண்ட ஜ்யோதிஸ்ஸாக, ஆனந்த மயமாக, அக்ஷர ஸ்வரூபமாயுள்ள பரம பதத்தை அடைந்த பின்னும், ஸாது ஜனங்களுக்கு மோக்ஷதாதாவாகவுள்ள ஸ்ரீசங்கராசார்யாள் அங்கேயே – காஞ்சீபுரத்தில் அம்பாள் ஆலயத்திலேயே என்று அர்த்தம்; அங்கேயே – சைதன்யமே மூர்த்தி கரித்தாற்போல இன்றைக்கும் இருந்து வருகிறார்” என்று முடித்திருக்கிறது7. காமாக்ஷி ஆலயத்திலுள்ள ஆசார்ய மூர்த்தத்தையே சொல்லியிருப்பதாகத் தெரிகிறது
ஆசார்யாள் காஞ்சீபுரத்துக்கு வந்தபோது அங்கே ஸாங்க்யம், மீமாம்ஸை முதலிய அரைகுறை வைதிக மதஸ்தர்களும், பௌத்த ஜைனாதி அவைதிக மதஸ்தர்களும் நிறைய இருந்தார்கள். ப்ராசீனமான ஆலயங்கள் இருந்தாலும் பூஜா க்ரமங்கள் வேத விருத்தமாக (முரணாக)ப் போயிருந்தன. ஸாக்ஷாத் ராஜராஜேச்வரியான அம்பாள் காமாக்ஷியே உக்ர கலைகளோடு இருந்தாள் என்று சொல்லியிருக்கிறது.
ஆசார்யாள் ஸர்வதீர்த்தக் கரை வழியாக ஊருக்குள் ப்ரவேசித்தார். அங்கே காசி மாதிரியே விச்வேச்வரர் ஆலயமும் முக்தி மண்டபமும் உள்ளன. ஸர்வ தீர்த்த ஸ்நானம் பண்ணி ஆலய தர்சனம் முடித்து முக்தி மண்டபத்தில் தங்கிவிட்டு விஷ்ணு காஞ்சிக்குப் போனார். வரதராஜ ஸ்வாமி ஆலய பூஜையை முறை பண்ணிக் கொடுத்துச் சில காலம் அங்கேயே தங்கியிருந்தார். அங்கே பெருமாள் கோவிலுக்கு மேற்கே இப்போதும் நம் மடம் ஒன்று இருக்கிறது8.
அவர் இப்படி இருந்து கொண்டிருந்தபோது, லோக க்ஷேமத்தை உத்தேசித்து ராஜாவிடம் சொல்லி காஞ்சி நகரத்தையே காமாக்ஷி ஆலயம் மத்திய பிந்துவாக (புள்ளியாக) இருக்கும்படியான ஸ்ரீசக்கர ரூபத்தில் ஒழுங்குபடுத்தி நிர்மாணம் பண்ணச் சொன்னார். ராஜாவும் அப்படியே செய்தான். அவன் ராஜஸேனன் என்ற சோழ ராஜா என்று சொல்லியிருக்கிறது.
ஸ்ரீசக்கரம் வெளி இரண்டு சுற்றுக்கள் பத்ம தளங்கள் (தாமரை இதழ்கள்) விரிந்திருப்பதுபோல இருக்கும். உள்ளே அடுக்கடுக்காக வரும் கோணங்களும் அசப்பில் பார்த்தால் தாமரைப் பூவில் வரிசையாக இதழ்கள்மாதிரி இருக்கும். “பெரும்பாணற்றுப் படை”யில் காஞ்சியை இப்படித்தான் வர்ணித்திருக்கிறது. 9
அம்பாள் ஆலயத்துக்கும் அம்பாள் யந்த்ரத்துக்கும் ஏனிப்படி முக்யம் தந்தாரென்றால்…
பல மூர்த்திகளுக்கும் காஞ்சி முக்ய க்ஷேத்ரமாயிருந்தாலும் தேவீ க்ஷேத்ரம் என்றுதான் அதற்கு அதிமுக்யத்வம். சக்தி பீடங்களை மூன்று, பதினெட்டு, முப்பத்தாறு, ஐம்பத்தொன்று, ஐம்பத்தாறு, அறுபத்துநாலு, தொண்ணூற்றாறு, நூற்றியெட்டு, ஆறாயிரத்து நானூறு என்று பலவிதமாகச்சொல்வதுண்டு. இந்த எல்லாவற்றிலுமே முக்யமான ஒன்றாக வருவது காஞ்சியிலுள்ள காமபீடம் என்ற காமகோடி பீடம். அம்பாளின் நாபி பீடம் அது. சரீரத்தில் மத்ய ஸ்தானமாயிருப்பது நாபி. அப்படி லோகத்திற்கே இருப்பது காஞ்சி. காஞ்சி என்றால் ஒட்டியாணம். நாபிக்குக் கவசம்தான் ஒட்டியாணம். “மேரு தந்த்ரம்”, “காமாக்ஷீவிலாஸம்”, “காஞ்சீ மாஹாத்ம்யம்” ஆகிய நூல்களில் இப்படிச் சொல்லியிருக்கிறது.
ஸகல க்ஷேத்ரங்களிலுள்ள அம்பாளுடைய சக்தி கலைகளுக்கெல்லாம் கேந்த்ர ஸ்தானமாயிருப்பது காஞ்சி காமாக்ஷிதான்! [சிரித்து] அந்த எல்லா பல்புக்கும் இவள் தான் ஜெனரேட்டர்! இதைத் தெரிவிப்பதாகத்தான் காஞ்சீபுர வட்டாரத்தில் ஐம்பதுக்குமேலே சிவன் கோவில்கள் இருந்தாலும் எதிலேயும் அம்மன் ஸந்நிதியே இல்லை! காம கோஷ்டத்திலோ அம்பாள் மட்டுமாக இருக்கிறாள்! ஸுந்தரேச்வரர் கோவிலில் மீனாக்ஷி, ஜம்புகேச்வரர் கோவிலில் அகிலாண்டேச்வரி, கபாலீச்வரர் கோவிலில் கல்பகாம்பா என்கிற மாதிரியெல்லாம் இல்லாமல், கூட ஈச்வர ஸந்நிதியில்லாமல் அம்பாள் மட்டும் இருக்கிறாள். காஞ்சியில் ஏகாம்ரர், வரதர் உள்பட எவருக்கும் இல்லாத பெருமையாகத் தான் மட்டுமே நாலு பக்கமும் கோபுரமும், கோபுரவாசலும், ராஜ வீதிச் சுற்றுகளும் கொண்ட ராஜ ராஜேச்வரியாக இருக்கிறாள்!
இவள்தான் அம்பாளின் அநேக விதமான ரூப பேதங்களில் த்ரிபுரஸுந்தரியாக இருப்பவள். ஸுந்தரீ வித்யா என்ற ஸ்ரீவித்யா சாஸ்தரத்தில் சொல்லியுள்ளபடி சதுர்புஜையாக தநுர்-பாண-பாச-அங்குசங்களை வைத்துக் கொண்டிருப்பவள் இவள்தான். அந்த சாஸ்த்ரம்தான் ஆசார்யாளுக்கு அம்பாளே கைலாஸத்தில் கொடுத்து, அவர் ‘ஸெளந்தர்ய லஹரி’யாகப் பூர்த்தி பண்ணியது. அந்த த்ரிபுரஸுந்தரிதான் அவருடைய மடத்து ஸ்வாமியான சந்த்ரமௌளீச்வரரின் சக்தியும்!
இந்தக் காரணங்களால் ஆசார்யாளுக்கு காமாக்ஷியம்பாள் ரொம்ப முக்யம்.
[சிரித்து] “இதென்ன ந்யாயம்? இவர் சொன்னது ‘சும்மாக் கிடக்கிற’ அத்வைதம்! அம்பாளோ ஒரே சக்தி ஒரே கார்யம் ஒரே மாயை! இவருக்கென்ன அவளைப் பற்றி?” — என்றால்,
சும்மாக் கிடந்ததை அவள்தானே இத்தனை வித விதமான சக்திகளோடு விதவிதக் கார்யங்கள் பண்ணும்படி செய்திருக்கிறாள்? சிவனே என்று, சிவமாகவே சும்மாயிருந்த இந்த சம்-புவையே சம்-கரர் என்று ஆக்கி, அவர் மித்யை என்று ஒதுக்கச் சொன்ன உலகத்திற்காகவே ஓயாமல் கார்யம் பண்ணச் செய்திருக்கிறாள்? ஆகையால், ஒன்றிலிருந்து இத்தனையையும் கிளப்பிவிட்ட அவள்தான் அவற்றையெல்லாம் மறுபடி அந்த ஒன்றிலேயே, ஒன்றாகவே அடக்கவும் ஆஸாமியை ஏதோ செய்கிறார், பெரிய அவதார கார்யமே செய்கிறார் — என்றால் செய்கிறதற்கு சக்தி அந்த மூல பராசக்தியிடமிருந்துதானே வருகிறது? அதனால், ஒன்றிலிருந்து பலவற்றைச் செய்த அவளேதான் பலவற்றை ஒன்றாக்கவும் கருணையோடு மனஸ் வைத்து எல்லாம் செய்கிறாள் என்றாகிறது. அது மாத்ரமில்லை — ஸாதனை, கீதனை நிதித்யாஸனம் எது பண்ணினாலும் ஸரி, அவள் பிரித்து வைத்த இந்த ஜீவன் மறுபடி மூலத்தோடு சேரணும் என்றால் பிரித்தவள்தான் சேர்த்தும் வைக்கணும்; இவனாகவா பிரிந்து வந்தான்? அவள்தானே பிரித்துக் காட்டினாள்? அப்போது அந்த மஹாசக்தியை மீறி இவனாக மறபடி ஒன்று சேரமுடியுமா என்ன? அவள்தான் சேர்க்கணும், ஒன்றாக்கணும். அப்படிப் பலபேரை, மஹாஞானிகளை, ப்ரஹ்மவித்துக்களை அவள் சேர்த்து ஒன்றாக்கி வைத்திருப்பதும் தெரிகிறது. ஆக, அவள் க்ருபைதான் அத்வைத மோக்ஷத்திற்கு வழி திறந்து விட்டாகணும், அப்படியும் அவள் பரமாநுக்ரஹம் பண்ணுபவள்தான் என்று ஆசார்யாளுக்கு நன்றாகத் தெரியும் – “அந்தஃசாக்த” ரான (உள்ளூரத் தாமே சக்தி ஸ்வரூபமான) ஆசார்யாளுக்கு நன்றாகத் தெரியும். மஹாமாயையேதான் ஞானப்பால் ஊட்டுகிற ஞானாம்பாள், ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபிணி என்பது அவருக்கு அநுபவமாகத் தெரியும்.
சிவ-சக்தி ஐக்யம் என்ற அத்வைதத்திலேயே கொண்டு விட்டுப் பூர்ணத்வத்தை அநுக்ரஹிக்கும் ஸ்ரீவித்யையும் ப்ரஹ்ம வித்யையும் ஒன்றுதான் என்பதாலேயே ஒரு பக்கத்தில் ஞான மார்க்கமாக நிறையச் செய்த ஆசார்யாள் இன்னொரு பக்கம் உபாஸனா மார்க்கமாக ஸ்ரீவித்யைக்கும் ஏற்றம் கொடுத்தார்…
தேவீ-வித்யைகளில் எதுவானாலும் ஸரி, பொதுவாக மஹாசக்தியாகவும் அதே ஸமயம் பரம கருணையுள்ள தாயாயும் இருக்கும் மோக்ஷதாயினி அவளே என்பதால்தான் தம்முடைய முக்ய மடங்களிலெல்லாம் ஒரு சக்தி பீடத்தைச் சேர்த்து வைத்தார். இந்த (காஞ்சி) மடத்துக்குக் காமகோடி பீடம். ச்ருங்கேரிக்கு சாரதா பீடம், புரி மடத்துக்கு விமலா பீடம். த்வாரகைக்கு காளிகா (பத்ரகாளி) பீடம். பதரிமடத்துக்குப் பூர்ணகிரி பீடம்…
ஆசார்யாள் சொன்னபடி காஞ்சி நகர அமைப்பு ஸ்ரீ சக்ராகாரமாக ஒழுங்குபடுத்தப்பட்டவுடன் அவர் காமாக்ஷி ஆலயத்திற்கு வந்தார். அம்பாளை சாந்தப்படுத்தி, ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டை செய்தார்.
பிலாகாசம் என்பதாக கர்ப்ப க்ருஹத்திலே குஹையில் ஆகாச மாத்ரமாகவும் அம்பாள் அங்கே இருக்கிறாள். பக்கத்திலேயே உக்ர தேவி உக்ர கலைகளோடு மூர்த்தியாக இருந்தாள். ஆசார்யாள் தாமே ஸ்ரீயந்த்ரம் போட்டு அதில் அந்தக் கலைகளை ஆவாஹனம் செய்து அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கினார். “அப்படிப் பண்ணிய ஆசார்யாள் நம் புண்யங்களை வளர்க்கட்டும்!” என்று ‘குருரத்ன மாலா’ சொல்கிறது:
ப்ரக்ருதிம் ச குஹாச்ரயாம் மஹோக்ராம்
ஸ்வக்ருதே சக்ரவரே ப்ரவேச்ய யோ (அ)க்ரே |
அக்ருதாச்ரித-ஸெளம்ய மூர்த்திம்-ஆர்யாம்
ஸுக்ருதம் நஸ்ஸ சிநோது சங்கரார்ய:||
அம்பாளுக்கு நேர் முன்னால் சக்ர ராஜம் எனப்படும் ஸ்ரீயந்த்ரம் ஆசார்யாளே போட்டதை சித்விலாஸீயத்தில் “காமாக்ஷ்யா: புரதோ தேசே ஸ்ரீசக்ரம் ஸ்வயம் ஆலிகத்” என்று சொல்லியிருக்கிறது.
“ஆனந்தகிரீய”த்திலும் காமாக்ஷிவைபவம், ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டை முதலியவற்றை விரிவாகச் சொல்லியிருக்கிறது.10
காமகோடி பீடத்தைப் பழையபடி ப்ரகாசிக்கும்படி ஆசார்யாள் ஜீவசக்தியோடு ஸ்தாபித்தார்.
அப்புறம் கச்சி ஏகம்பம் முதலானவற்றுக்கும் போய் ஆராதனா க்ரமத்தை தாந்த்ரிகமாக சுத்தப்படுத்திக் கொடுத்தார்.
ஆறு சிஷ்யர்கள் தேசம் முழுதும் போய் யாராருக்கு எது இஷ்ட தேவதையோ, அதை வைதிகமாக, இதர தேவதா நிந்தையில்லாமல் அவற்றோடு சேர்த்தே பூஜிக்கும்படியாகச் செய்தார்கள். இப்படி ஷண்மத உபாஸனையை நிலை நிறுத்திவிட்டுக் காஞ்சீபுரம் திரும்பி வந்து ஆசார்யாளுக்கு ஸேவை செய்து கொண்டிருந்தார்கள்.
உபாஸனையில் செய்யவேண்டியதையெல்லாம் இவ்வாறு செய்த பிறகு, வாதத்தினால் முடிவாக அத்வைதத்தை ஸ்தாபிக்க நினைத்து ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் செய்தார். முடிந்த முடிவாக எதிர்வாதம் பண்ணவந்த எல்லாரும் அத்வைதம்தான் ஸத்ய தத்வம் என்று ஏற்கும்படிச் செய்தார்.
ஸர்வமுமாக ஆனது ஒன்றுதான். அதனால் அந்த ஒன்றைத் தெரிந்துகொண்ட ஞானி ஸர்வஜ்ஞனாகி விடுகிறான். ஆசார்யாள் இந்த அர்த்தத்தில் ஸர்வஜ்ஞராக இருந்தது மட்டுமில்லை. ஒன்று பலவாக, அனந்தமாக ஆகியிருப்பதில் அவற்றைப் பற்றிய அறிவைத் தரும் அநேக சாஸ்த்ரங்கள் உண்டாயிருக்கின்றன. வாழ்க்கை நடத்துவதற்கும், அறிவு பல விதங்களில் ஸந்தோஷப்படுவதற்கும் உபாயங்களைத் தரும் ஏராளமான சாஸ்த்ரங்களும் கலைகளும் உண்டாயிருக்கின்றன. இவை அத்தனையும் தெரிந்தவனையே லோக ரீதியில் ஸர்வஜ்ஞன் என்பது. ஒவ்வொரு சாஸ்த்ரம், கலை, வித்யை தெரிந்த நிபுணனும் கேள்வி கேட்டு எல்லாருக்கும் பதில் சொல்கிறவர்தான் ஸர்வஜ்ஞ பீடம் ஏற முடியும். ‘பரஹ்ம வித்தையோ?’ என்று பேச்சு வழக்கிலேகூட எல்லா வித்யைக்கும் மேலே சொல்வதையே கரைத்துக் குடித்தவர் ஆசார்யாள்! ஸர்வஜ்ஞ பீட ஸிம்ஹாஸனத்தில் பல படிகள் இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு வித்யைக்கு ப்ரதிநிதி; அந்த வித்யை பற்றி கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லி, ‘மாஸ்டர்’ பண்ணியதாக நிரூபித்தால்தான் அடுத்த படிக்கு ஏற முடியும்; முடிவாக ஸரஸ்வதியே வந்து கேள்வி கேட்பாள்; அம்பாளுக்கும் பதில் சொன்னால்தான் ‘ஸர்வஜ்ஞ பீடாரோஹணம்’ என்பதாக அந்த ஆஸனத்தில் உட்கார முடியும் – என்று சொல்வார்கள். ஸர்வமுமான ஒன்றை அறிந்ததால் ஸர்வஜ்ஞரான ஆசார்யாள், அந்த ஸர்வ விஷயங்களைப் பற்றிய வித்யைகளில் ஒன்று விடாமல் அவ்வளவையும் அறிந்த ஸர்வஜ்ஞராகவும் இருந்தவர். ஆகையால் அநாயாஸமாக ஸகல சாஸ்த்ரக்காரர்களுக்கும் பதில் சொல்லி ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் பண்ணி விட்டார்.
ஆசார்யாள் க்ரந்தங்களைப் பார்த்தால் தெரியும், எத்தனை சாஸ்த்ரங்கள், வித்யைகள் அவருக்குக் கரதலப்பாடம் என்று. அவர் செய்ததாக “சங்கராசார்யம்” என்று ஒரு ஜ்யோதிஷ சாஸ்த்ரப் புஸ்தகம் இருப்பதாகத் தெரிகிறது… ஸங்கீத வித்வான் ஒருத்தர். “எங்களிலேயே ரொம்பக் கொஞ்சம் பேருக்குத்தான் ஸங்கீத ‘க்ராம’ங்களைப் பற்றியும், இன்னும் கதி-கமகம்-கீதம் முதலான ‘டெக்னிகல்’ விஷயங்களும் தெரியும். ‘ஸெளந்தர்ய லஹரி’யில் ‘கலேரேகாஸ் – திஸ்ரோ’ ச்லோகத்தில் இதெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு ஆசார்யாள் சொல்லியிருக்கிறாரே!” என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டு சொன்னார்.
‘காந்தர்வ வேதம்’ என்று ஸ்தானம் பெற்றது ஸங்கீத வித்யை. அம்மாதிரி உசந்த வித்யைகள்தான் என்றில்லாமல் நடைமுறை வாழ்க்கையில் தொழிலாளிகள் கையாளும் சின்னச் சின்ன ‘டெக்னிக்கு’கள்கூட அவருக்குத் தெரியும். சாணார்களிடமிருந்து ‘தென்ன மர வித்தை’கற்றுக் கொண்டதைச் சொன்னேன். இன்னொரு கதை உண்டு. “எல்லாம் தெரிஞ்வசர்-னா உமக்குச் செருப்புத் தைக்க வருமா?” என்று சக்கிலி கேட்டானாம். ஆசார்யாள் சாந்தமாக ஊசியை எடுத்து மூக்குத் தண்டில் தேய்த்துக்கொண்டு தைக்க ஆரம்பித்து விட்டாராம்! “எங்க ரஹஸ்யத்தை நல்லா தெரிஞ்சுண்டிருக்கியே!” என்று அவன் நெடுஞ்சாண் கிடையாக நமஸ்காரம் பண்ணினானாம்! மூக்கு மேலே ஊறுகிற ஒரு மாதிரியான எண்ணெய்ப் பசை ஊசியில் பட்டால் அது ஸுலபமாகத் துளைத்துக்கொண்டு போகும் என்ற knack தெரிந்து சக்கிலியர்கள் அப்படித்தான் தேய்த்துக் கொள்வார்களாம்.
ராஜா கேட்டுகொண்டதன் பேரில் ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் செய்தார். உலகத்து ராஜா மோக்ஷராஜாவுக்குப் பண்ணிய பட்டாபிஷேகம்!
ஷண்மத ஸ்தாபனமும், அதற்கு சிகரமாக அத்வைத ஸ்தாபனமும் செய்ததற்குப் பட்டாபிஷேகம் மாதிரி ஸர்வஜ்ஞ பீடாரோஹணம். வாதச் சண்டையில் இனிமேல் எதிரியில்லை என்று ஜயித்தாகிப் பட்டம் சூட்டப்பட்டதாக அர்த்தம்! ராமாயணத்தில் ராம பட்டாபிஷேகம் மாதிரி இது ஆசார்யாள் சரித்ரத்தில். ஆனால் ராமர் ஆட்சி பட்டாபிஷேகத்திற்கு அப்புறம்தான் ஆரம்பித்தது. ஆசார்யாள் ஞான ராஜாவாக ஆட்சி பண்ணியதற்குப் பூர்த்தியாக இந்த வைபவம் இருந்தது!
அவதரித்ததிலிருந்து ஓயாமல் ஒழியாமல் ஓடிக்கொண்டிருந்தவர் கொஞ்ச காலம் நிம்மதியாகக் காமாக்ஷியை ஆராதித்துக் கொண்டிருந்தார். ஓடாமல் அவர் பண்ணிய ஆராதனையும் மூன்று லோகங்களுக்கும் க்ஷேமம் உண்டாக்கிற்று.
கம்பாதீர-நிவாஸிநீம் அநுதினம் காமேச்வரீம் அர்ச்சயந் |
ப்ரஹ்மாநந்தம் அவிந்தத த்ரிஜகதாம் க்ஷேமங்கர: சங்கர:||
(கம்பைக் கரையில் குடிகொண்டுள்ள காமேச்வரியை தினந்தோறும் வழிபட்டு மூவுலகுக்கும் க்ஷேமம் புரியும் சங்கரர் ப்ரஹ்மானந்தம் அடைந்தார்) என்று ‘சங்கராப்யுதயம்’ சொல்கிறது. நகை நகைகளாக த்ரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரங்கள் பல செய்து அந்தத் தாயாருக்குப் போட்டு அழகு பார்த்தார்11.
கைலாஸத்தில் பரமேச்வரனிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்ததில் யோக லிங்கமாகிய சந்த்ரமௌளீச்வரனை காஞ்சி மடத்தில் ப்ரதிஷ்டை பண்ணி அவர் பூஜித்துக் கொண்டிருந்ததைச் சரித்ரங்கள் சொல்கின்றன. இந்த யோக லிங்கத்தைப் பற்றி ஸ்ரீஹர்ஷரின் “நைஷத”த்தில் கூடச் சொல்லியிருக்கிறது.
முப்பத்திரண்டு வயஸு பூர்த்தியாயிற்று. நந்தன வருஷம் வைசாக சுக்ல பஞ்சமியில் அவதாரம் பண்ணி ரக்தாக்ஷிவருஷம் வைசாக சுக்ல பஞ்சமியோடு 32 முடிந்தது. வ்யாஸருடைய இஷ்டத்துக்காகக் கூட்டிக் கொண்ட பதினாறு வருஷமும் தீர்ந்து விட்டது. தொடர்ந்தாற்போல் வந்த ஏகாதசியோடு சரீர யாத்ரையை முடித்து அகண்ட சைதன்யமாகிவிட வேண்டுமென்று நினைத்தார்.
ஆசார்யாள் விதேஹ கைவல்யம் அடையப் போகிறாரென்றதும் சிஷ்யர்களெல்லாம் வந்து முடிவாக ஒரு உபதேசம் அநுக்ரஹிக்கும்படி ப்ரார்த்தித்துக் கொண்டார்கள்.
ஆசார்யாள், “வேதோ நித்யம் அதீயதாம்” என்று ஆரம்பித்து, அடியிலிருந்து நுனிவரை செய்யவேண்டிய அத்தனை ஸாதனா க்ரமத்தையும் படிப்படியாக ஐந்தே ச்லோகத்தில் உபதேசித்தார். “ஸோபாந பஞ்சகம்” என்று பேர். ‘ஸோபானம்’ என்றால் படி வரிசை. (‘உபதேச பஞ்சகம் ‘என்றும் சொல்லப்படுகிறது.)
“வேத வழிப்படியான கர்மாக்களைப் பண்ணு. காம்யமாகப் பண்ணாமல் ஸ்வாமிக்குப் பூஜையாகப் பலனை த்யாகம் செய்து பண்ணு. இப்படிப் பண்ணிப் பண்ணிப் பாபத்தைப் போக்கிக் கொள்ளு. பாபம் போகப் போகச் சித்தத்தின் தோஷங்களும் போகும். அப்போது ஸம்ஸார வாழ்க்கையிலுள்ள தோஷங்களை அலசித் தெரிந்து கொள்ளு. நன்றாக சித்த சுத்தி உண்டாகும். அப்புறம் ஞானமார்க்கத்தில் போய் ஆத்மாவைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தாபத்தை வளர்த்துக்கொள்ளு. அது கனிந்ததோ இல்லையோ சட்டென்று வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிடு”.
“பந்து ஸங்கத்தை விட்டு விட்டு ஸத்ஸங்கத்தில் சேர்ந்து பகவத் பக்தியை த்ருடமாக ஆக்கிக்கொள்ளு. அப்புறம் ஒரு நல்ல ஞானியிடம் போய், சுச்ரூஷைகள் பண்ணி ப்ரணவோபதேசம், மற்ற மஹா வாக்யோபதேசம் எல்லாம் பெற்றுக்கொள். ‘ச்ரவணம்’ பண்ணிய உபதேசத்தை ‘மனன’மாக மனஸில் நன்றாக அலசிப் பார். குதர்க்க புத்தியோடு பார்க்காமல், வேதத்தில் நம்பிக்கையோடு தர்க்கம் பண்ணிப் பார். இப்படி நன்றாக அர்த்தமான பின் அதை உள்ளே ஊறப்போடுவதற்கு ‘நிதித்யாஸனம்’ (ஆழ்ந்த த்யானம்) ஆரம்பி. ‘நாம் ஞான மார்க்கத்தில் போகிறோமாக்கும்!’ என்ற கர்வத்தை அப்பப்பவும் அடித்துப் போடு. ‘தேஹமே நான்’ என்ற நினைப்பை விட்டு ‘நான் ப்ரஹ்மம்’ என்ற பாவனையை ஆரம்பி. தேஹமும் ப்ராரப்தம் உள்ள மட்டும் இருந்தாக வேண்டுமென்பதால், ஒரு வ்யாதி வந்தால் அதற்கு எப்படி ரொம்பவும் அளவாக மருந்து கொடுப்பார்களோ அப்படிப் பசி வ்யாதிக்கு மருந்தாகவே ஆஹாரம் போடு. ருசியான ஆஹாரத்தைத் தேடாமல் பிக்ஷை எடுத்து என்ன கிடைத்தாலும் த்ருப்தியாகத் தின்னு. எதையும் பொருட்படுத்தாமல் உதாஸீனமாயிரு. ஜனங்களிடம் பாசமும் வைத்துக் கொள்ளாதே, த்வேஷமும் வைத்துக் கொள்ளாதே! பட்டுக்கொள்ளாமல் இரு. சீதம், உஷ்ணம் முதலானதுகளையும் இப்படியே பொருட்படுத்தாதே. பேச்சைக் குறைத்து மௌனமாக ஏகாந்தத்துக்குப் போ. பராத்பரமான ப்ரஹ்மத்திலே சித்தம் ஸமாதியாவதற்கு முயன்று ஆத்ம பூர்ணத்தை ப்ரத்யக்ஷமாகத் தெரிந்து கொண்டுவிடு. இந்த அநுபவத்தில் ஜகத் முழுக்க அடிபட்டுப் போய், ஸஞ்சிதம் என்ற முன்வினை அழிந்து போகப் பண்ணிக் கொள். ஆகாமி என்ற பின்வினை ஒட்டாமல் பண்ணிக்கொள். பலன் கொடுக்க ஆரம்பித்துவிட்ட ப்ராரப்த வினை மட்டும் தீர்கிறவரை சரீரத்தில் ஜீவித்து, அதுவும் தீர்ந்தவுடன் பரப்ரஹ்மமாகவே நிலைத்துவிடு – பரப்ரஹ்மாத்மநா ஸ்தீயதாம்!” என்று செய்யவேண்டிய எல்லாவற்றையும் ரத்னச் சுருக்கமாக ‘ஸோபாந பஞ்சக’த்தில் உபதேசித்து எல்லாருக்கும் சாந்தியை உண்டு பண்ணினார்.
ஆசார்யாளின் சரீர தாரணத்திற்கு ப்ராரப்தம் காரணமில்லை. அது லோக கார்யத்துக்காக வந்த அவதார சரீரம். அந்தக் கார்யம் ஆகிவிட்டது. “பரப்ரஹ்மாத்மநாஸ்தீயதாம்” என்று உபதேசத்தை முடித்தமாதிரி அவரே ஆகி விட்டார்!
‘ஆனந்தகிரீய’த்தில் ஆசார்யாள் ஸ்தூல சரீரத்தை ஸூக்ஷ்ம சரீரத்தில் கரைத்து, ஸூக்ஷ்ம சரீரத்தைக் காரண சரீரத்தில் கரைத்து அகண்ட சைதன்யமாகி விட்டார் என்று சொல்லியிருக்கிறது.
1 ‘ஆனந்த கிரீயம்’ – ப்ரகரணங்கள் 67-72; ‘குருவம்ச காவ்யம்’ – ஸர்கம் 3, ச்லோகம் 36-ம், அதற்கு நூலாசிரியரே எழுதியுள்ள விரிவுரையும். அனைத்து சங்கர விஜயங்களுக்கும் முந்தைய ‘ப்ருஹச்-சங்கர விஜய’த்திலும் ஆசார்யாள் காஞ்சி வாசத்தின்போது ஷண்மத ஸ்தாபனம் செய்த விவரம் உள்ளதாக ‘குரு ரத்னா மாலா’வின் 33-வது ச்லோகத்திற்கான ‘ஸுஷமா’ விரிவுரையின் மேற்கோளிலிருந்து தெரிகிறது. சித்விலாசீய சங்கர விஜயம் 31-ம் அத்தியாயம் 15-24 ச்லோகங்களும் இவ்விஷயத்தைக் கூறுகின்றன.
2 ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் என்ற ச்ருங்கேரி ஆசார்யாளின் சீடரான ஸ்ரீலக்ஷ்மண ஸூரியின் “பகவத் பாதாப்யுதயத்”த்திலும் காஞ்சியில் ஆசார்யாளின் ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் கூறப்பட்டுள்ளது (ஆறாம் ஸர்க்க முடிவு).
3 ‘குரு ரத்னமாலா’வின் ‘ஸுஷமா’ வ்யாக்யானத்தில் முறையே 33–வது, 31–வது ச்லோகங்களின் விரிவுரையில் காணும் மேற்கோள்கள் .
4 சென்னை மானுஸ்க்ரிப்ட் லைப்ரரி பதிப்பில் முற்சேர்க்கையாகக் கொடுத்துள்ள ஐந்து ச்லோகம் பார்க்கவும்.
5 மூலத்தில் “ஸ்வகாச்ரமே” என்பதாகக் காஞ்சி ஸ்ரீ மடம் ஆசார்யாளே பீடாதிபத்யம் வஹித்த மதமாகக் கூறப்பட்டுள்ளது. ‘குரு ரத்ன மாலா’ 33-ம் ச்லோகத்துக்கான ‘ஸுஷமா’ வ்யாக்யானத்தில் மேற்கோளாக வரும் ‘வ்யசாச்சலீய’ ச்லோகங்களில் ஒன்றும் மேற்படி ‘சிவரஹஸ்ய’ வசனத்தை அடியொற்றி ஆசார்யாள் காஞ்சி வாஸத்தில் தான் நிர்மாணித்திருந்த மடத்தில் (‘மடேஸ்வக்லுப்தே’) இருந்தபோது மிச்ரர்களை வென்றாரென்று கூறி, ஸர்வஜ்ஞபீடம் ஏறியதையும் தெரிவிக்கறது (“சர்வஜ்ஞ பீடம் அதிருஹ்ய.”)
‘ப்ரூஹச்-சங்கர விஜயம்’, அதற்கடுத்தபடியாகத்தொன்மை பொருத்திய ‘பிராசீன சங்கர விஜயம்’ ஆகியவற்றில் ஆசார்யாள் காஞ்சியில் ஸ்ரீ சாரதா மடம் என்று பெயர் கொண்ட ஸ்ரீ காமகோடி பீட மடத்தை ஸ்தாபித்துத் தமக்குப் பிறகு ஸுரேச்வரரையும், அவரது காப்பில் ஸர்வஜ்ஞாத்மரையும் நியமித்த விவரம் இருப்பதை ‘ஸுஷமா’ 31-34 ச்லோக விருவுரை மேற்கோள்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். ‘கேரளிய சங்கர விஜய’மும் இதனை அப்படியே அடியொற்றிச்செல்கிறது.
பொது நூலான புராணங்களைச் சேர்ந்த ‘மார்கண்டேய சம்ஹிதை’யில் காஞ்சி மட ஸ்தாபனமும் அதற்க்குரிய ஸ்ரீ காமகோடி பீடத்தில் ஸுரேச்வரரின் நியமனமும் கூறப்பட்டுள்ளன. (72-7)
‘ஆனந்த கிரீய சங்கர விஜயம்’ இவற்றை அனுசரித்துத் கூறுகையில் ஆசார்யாள் தம்முடைய வாஸத்துக்கு உரியதாகக் காஞ்சி ஸ்ரீமடத்தை ஏற்படுத்திக் கொண்டதையும் (“நிஜவாஸயோக்யம் மடமபி பரிகல்ப்ய”) ஸுரேச்வரரை நியமித்ததையும் தெரிவிக்கறது (ப்ரகரணம் 65).
ஸ்ரீ லக்ஷ்மண ஸூரியின் ‘பகவத்பாதாப்யுதயத்’திலும் காஞ்சி ஸ்ரீமட ஸ்தாபனம் கூறப்பட்டிருக்கிறது.
6 ஆசார்யாள் அவதாரத்தை முடித்து ஸித்தியடைந்தது எங்கு என்பது பற்றி நூல்கள் கூறுவது:
‘மாதவீய’த்தின்படி அவ்விடம் கேதாரம். ‘சித்விலாசீய’த்தின்படி பதரியிலுள்ள தத்த குகை. (ஸதாநந்தரின்) ‘சங்கர திக்விஜய ஸார’த்தின்படியும் பதரி. ‘கோவிந்த நாதீய’த்தின்படி திருச்சூர். (லக்ஷ்மண சாஸ்திரிகளின்) ‘குரு வம்ச காவ்ய’த்தின்படி மஹாராஷ்டிரத்திலுள்ள தத்ர க்ஷேத்ரமாகிய மாஹூரி. ஆனந்தகிரீயம், ‘வ்யாஸாசலியம்’, ‘கேரளியம்’, (மேற்கோள்களிலிருந்து பெறப்படும்) ‘ப்ரூஹத்’ — ‘ப்ராசீன’ சங்கர விஜயங்கள். ‘சிவ ரஹஸ்யம்’, ‘மார்கண்டேய சம்ஹிதை’, காஞ்சி ஸ்ரீமட குரு பரம்பரா நூல்கள், டாக்டர் ஹூல்ட்ஷ் பதிப்பித்த (‘ஸ்ரீ ச்ருங்கேரி குரு பரம்பரா ஸ்தோத்ரம்’, கூடலி ஸ்ரீமடத்தின் ‘ஜகத்குரு பாரம்பர்ய ஸ்துதி’ஆகியவற்றின்படி காஞ்சிபுரம்.
‘சங்கராப்யுதய’த்திலும், ‘பதஞ்ஜலி சரித’த்திலும் ஸித்தி ஸ்தலம் இன்னதென்று ஸ்பஷ்டமாகச் சொல்லாவிடினும் ஆசார்யாள் திருவாழ்வின் இறுதிக் காலத்தில் காஞ்சியில் வஸித்ததாகக் கூறியுள்ளது. “கம்பிக் கரையில் காமேச்வரியை வழிபட்டுக் கொண்டு மூவுலகில் க்ஷேமங்கரரான சங்கரர் ப்ரஹ்மாநந்தம் அடைத்தார்” (ப்ரஹ்மாநந்தம் அவிந்தத) என்று ‘சங்கராபுதையம்’ கூறுவது அவரது ப்ரம்ம நிர்வாணத்தைச் கட்டும் எனலாம்.
இந்திய பாஷைகளில் முதலில் வெளியான ‘என்சைக்ளோபீடியா’ பெங்காலியிலுள்ள “விச்வகோஷ்” என்பது. 1892–ல் வெளியான புத்தகம் அதில் ‘காஞ்சிபுரம்’ என்ற தலைப்பில் அந்த க்ஷேத்ரத்தைப் பற்றிச் சொல்லும் போது “பகவான் சங்கராச்சார்யரின் ஸமாதி ஸ்தலம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
7 காமக்ஷ்யா நிகடே ஜாது ஸந்நிவிச்ய ஜகத்குரு: ||
தேஹிபிர்துர்பஜம் பேஜே தேஹம் தத்ரைவ ஸந்த்யஜன் |
அகண்ட ஜ்யோதி-ராநந்த-மக்ஷரம் பரமம் பதம் ||
ஸ ஏவ சங்கராச்சர்யோ குருர்-முக்தி-ப்ரதஸ்-சதாம் |
அத்யாயி மூர்த்தம் சைதந்யமிவ தத்ரைவ திஷ்டதி ||
8 காஞ்சியில் ப்ரதானமான ஸ்ரீமடம் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ளது.
9 “பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச்
கடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்…
பழவிறல் மூதூர்… கச்சி.”
10 64-65 ப்ரகரணங்கள்.
11 த்ரிபுரஸுந்தரி குறித்து அஷ்டகம், மாநஸ பூஜா ஸ்தோத்ரம், சதுஷ்ஷஷ்ட்யுபசார பூஜா ஸ்தோத்ரம், வேத பாதஸ்தவம் முதலியன ஆசார்யாள் அருளியுள்ளார்.