வாலி மாவலத்து

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

முதற்பத்து

வாலி மாவலத்து

திருப்பிருதி

ஆழ்வார் இமயமலையிலுள்ள திருப்பிருதியில் மங்களாசாஸனத்தைத் தொடங்குகிறார். இந்த திவ்யதேசத்தைப் HKF, பிருதி என்று பலவாறு கூறுவர். இதனை நந்தப்ரயாகை என்றும் சொல்லுவர். 'தருமமே வடிவாகிய இராமனை ஸேவிக்க வேண்டுமா? திருப்பிருதி செல்லுங்கள் என்கிறார் ஆழ்வார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே திருப்பிருதி செல்

958. வாலி மாவலத் தொருவன துடல்கெட

வரிசிலை வளைவித்தன்று,

ஏல நாறுதண் தடம்பொழி லிடம்பெற

இருந்தந லிமயத்துள்,

ஆலி மாமுகி லதிர்தர அருவரை

அகடுற முகடேறி,

dL மாமயில் நடஞ்செயும் தடஞ்சுனைப்

பிருதிசென் றடைநெஞ்சே

இமயத்தேயுள்ள திருப்பிருதி சேர்

959. கலங்க மாக்கட லரிகுலம் பணிசெய்ய

அருவரை யணைகட்டி,

இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள்தாம்

இருந்தந லிமயத்து,

விலங்கல் போல்வன விறலிருஞ் சினத்தன

வேழங்கள் துயர்கூர,

பிலங்கொள் வாளெயிற் றரியவை திரிதரு

பிருதிசென் றடைநெஞ்சே.

கண்ணபிரான் இருக்குமிடம் திருப்பிருதி

960. துடிகொள் நுண்ணிடைச் சுரிகுழல் துளங்கெயிற்

றிளங்கொடி திறத்து, ஆயர்

இடிகொள் வெங்குர லினவிடை யடர்த்தவன்

இருந்தந லிமயத்து,

கடிகொள் வேங்கையின் நறுமல ரமளியின்

மணியறை மிசைவேழம்,

பிடியி னோடுவண் டிசைசொலத் துயில்கொளும்

பிருதிசென் றடைநெஞ்சே.

நெஞ்சே திருப்பிருதி அடை

961. மறங்கொ ளாளரி யுருவென வெருவர

ஒருவன தகல்மார்வம்

திறந்து, வானவர் மணிமுடி பணிதர

இருந்தந விமயத்துள்,

இறங்கி யேனங்கள் வளைமருப் பிடந்திடக்

கிடந்தரு கெரிவீசும்,

பிறங்கு மாமணி யருவிய டிழிதரு

பிருதிசென் றடைநெஞ்சே

திருப்பிருதியைத் தேவர்கள் தொழுகின்றனர்

962. கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுதேத்த,

அரைசெய் மேகலை யலர்மக ளவளடும்

அமர்ந்தந லியமத்து,

வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன்தோய்த்து,

பிரச சாரிதன் னிளம்பிடிக் கருள்செயும்,

பிருதிசென் றடைநெஞ்சே.

963. 'பணங்க ளாயிர முடையநல் லரவணைப்

பள்ளிகொள் பரமா' என்,

றிணங்கி வானவர் மணிமுடி பணிதர

இருந்தந லிமயத்து,

மணங்கொள் மாதவி நெடுங்கொடி விசும்புற

நிமிர்ந்தவை முகில்பற்றி,

பிணங்கு பூம்பொழில் நுழைந்துவண் டிசைசொலும்

பிருதிசென் றடை நெஞ்சே

தேவர்கள் ஸஹஸ்ரநாமம் சொல்லும் HKF

964. கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய

கறிவளர் கொடிதுன்னி,

போர்கொள் வேங்கைகள் புனவரை தழுவிய

பூம்பொழி லிமயத்துள்,

ஏர்கொள் பூஞ்சுனைத் தடம்படிந் தினமலர்

எட்டுமிட் டிமையோர்கள்,

பேர்க ளாயிரம் பரவிநின் றடிதொழும்

பிருதிசென் றடைநெஞ்சே.

பிரமன் முதலிய யாவரும் திருப்பிருதியை வணங்குவர்

965. இரவு கூர்ந்திருள் பெருகிய வரைமுழை

இரும்பசி யதுகூர,

அரவம் ஆவிக்கு மகன்பொழில் தழுவிய

அருவரை யிமயத்து,

பரம னாதியெம் பனிமுகில் வண்ணனென்

றெண்ணிநின் றிமையோர்கள்

பிரம னோடுசென் றடிதொழும் பெருந்தகைப்

பிருதிசென் றடைநெஞ்சே,

திருப்பிருதி சேர்ந்தோர் துயரம் நீங்கும்

966. ஓதி ஆயிர நாமங்க ளுணர்ந்தவர்க்

குறுதுய ரடையாமல்,

ஏத மின்றிநின் றருளும்நம் பெருந்தகை

இருந்தந லிமயத்து,

தாது மல்கிய பிண்டிவிண் டலர்கின்ற

தழல்புரை யெழில்நோக்கி,

பேதை வண்டுக ளெரியென வெருவரு

பிருதிசென் றடைநெஞ்சே

இப்பாசுரங்களைப் படித்தால் வினைகள் சேரா

967. கரிய மாமுகில் படலங்கள் கிடந்தவை

முழங்கிட, களிறென்று

பெரிய மாசுணம் வரையெனப் பெயர்தரு

பிருதியெம் பெருமானை,

வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர்

கலியன தொலிமாலை,

அரிய வின்னிசை பாடுநல் லடியவர்க்

கருவினை யடையாவே.


அடிவரவு- வாலி கலங்க துடி மறம் கரை பணங்கள் கார் இரவு ஓதி கரிய - முற்றமூத்து.

 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வாடினேன்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  முற்ற மூத்து
Next