ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
முதற்பத்து
வாடினேன்
அஷ்டாக்ஷர மஹாமந்திரத்தைத் திருமந்திரம் என்றும். எட்டெழுத்து என்றும் சொல்வதுண்டு. ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு பலனைத்தான் தரும். எல்லா மந்திரங்களும் கொடுக்கும் பலன்களைத் திருமந்திரமே கொடுக்கும். எம்பெருமான் எல்லோரையும் ரக்ஷிப்பதுபோல அவனது திருமந்திரமும் ரக்ஷிக்கிறது.
"பகவானுடைய பேரருளால் அவனிடமிருந்தே திருமந்திரத்தைப் பெற்றேன். அது என் பாவத்தைப் போக்கியது. என்னைத் தெளிவடையச் செய்தது. நான் நற்கதி அடையும் தகுதியைப் பெற்றுள்ளேன். 'புலவர்காள் அற்ப மனிதர்களைக் கற்பகமே ரக்ஷகனே' என்கிறீர்கள். நாராயண நாமம் சொல்லி நற்பயன் பெறுங்கள் சொன்னால் நன்மை, துயர் நீங்கும், அழைமின். துஞ்சும் போதாவது அழைமின், நாராயணா என்று கூறுங்கள்" என்கிறார் திருமங்கையாழ்வார்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆராய்ந்து தெளிந்து அறிந்தது திருமந்திரம்
948. வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துய ரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடி யிளையவர் தம்மோ
டவர்தரும் கலவியே கருதி.
ஓடினே னோடி யுய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்
நாராய ணாவெனும் நாமம்,
நாட்கள் வீணாயின இப்பொழுது தெளிந்தேன்
949. ஆவியே அமுதே எனநினைந் துருகி
அவரவர் பணைமுலை துணையா,
பாவியே னுணரா தெத்தனை பகலும்
பழுதுபோ யழிதந்தன நாள்கள்.
தூவிசே ரன்னம் துணையடும் புணரும்
சூழ்புனல் குடந்தையே தொழுது. என்
நாவினா லுய்ய நான் கண்டு கொண்டேன்
நாராய ணாவென்னும் நாமம்.
பக்தர் உள்ளத்தில் பகவான் இருப்பார்
950. சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
தெரிவைமா ருருவமே மருவி,
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன கழிந்தவந் நாள்கள்,
காமனார் தாதை நம்முடை யடிகள்
தம்மடைந் தார்மனத் திருப்பார்,
நாமம்நா னுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராய ணாவென்னும் நாமம்.
ஆழியானருளால் கண்டுகொண்டது திருமந்திரம்
951. வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்
என்செய்கேன் நெடுவீசும் பணவும்,
பன்றியா யன்று பாரகங் கீண்ட
பாழியா னாழியா னருளே,
நன்றுநா னுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.
இரவும் பகலும் நாராயணா என்று கூறுங்கள்
952. கள்வனே னானேன் படிறுசெய் திருப்பேன்
கண்டவா திரிதந்தே னேலும்,
தெள்ளியே னானேன் செல்கதிக் கமைந்தேன்
சிக்கனெத் திருவருள் பெற்றேன்,
உள்ளெலா முருகிக் குரல்தழுத் தொழிந்தேன்
உடம்பெலாம் கண்ணநீர் சோர,
நள்ளிரு ளளவும் பகலும்நா னழைப்பன்
நாராய ணாவென்னும் நாமம்.
தஞ்சை மாமணிக்கோயிலை வணங்கு
953. எம்பிரா னெந்தை யென்னுடைச் சுற்றம்
எனக்கர சென்னுடை வாணாள்,
அம்பினா லரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்தவெம் மண்ணல்,
வம்புலாஞ் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி,
நம்பிகாள் உய்ய நான்கண்டு கொண்டேன்
நாராய ணாவென்னும் நாமம்.
திருக்குடந்தைத் திருமாலையே தொழுமின்
954. இற்பிறப் பறியீ ரிவரவ ரென்னீர்
இன்னதோர் தன்மையென் றுணரீர்,
கற்பகம் புலவர் களைகணென் றுலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்
சொற்பொரு ளாளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ்புனல் குடந்தையே தொழுமின்,
நற்பொருள் காண்மின் பாடிநீ ருய்மின்
நாராய ணாவென்னும் நாமம்.
திருமந்திரமே நல்ல துணை
955. கற்றிலேன் கலைக ளைம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலே னதனால் பேதையேன் நன்மை
பெருநிலத் தாருயிர்க் கெல்லாம்,
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
செல்கதிக் குய்யுமா றெண்ணி,
நற்றுனை யாகப் பற்றினே னடியேன்
நாராய ணாவென்னும் நாமம்.
எல்லாவற்றையும் தரவல்லது திருமந்திரம்
956. குலந்தருஞ் செல்வந் தந்திடு மடியார்
படுதுய ராயின வெல்லாம்,
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளடு பெருநில மளிக்கும்,
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற
தாயினு மாயின செய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராய ணாவென்னம் நாமம்.
தீவினையை அழிக்கும் நஞ்சு திருமந்திரம்
957. மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார் வாள்கலி கன்றி,
செஞ்சொலா லெடுத்த தெய்வநன் மாலை
இவைகொண்டு சிக்கெனத் தொண்டீர்,
துஞ்நும்போ தழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லினும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராய ணாவென்னும் நாமம்.