ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
முதற்பத்து
கலையும் கரியும்
திருச்சாளக்கிராமம்
'இராமன் வாழுமிடம் சாளக்கிராமம். ஊரகம், திருக்குடந்தை, திருப்பேர்நகர் ஆகிய இடங்களில் வாழ்பவனே இங்குள்ளான். அவனை ஸேவித்து உய்வு பெறுங்கள்' என்கிறார் ஆழ்வார். சாளக்கிராமத்தில் பகவான் தீர்த்தரூபியாக இருக்கிறான்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இராமன் இருக்குமிடம் சாளக்கிராமம்
988. கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்துபோய்,
சிலையும் கணையும் துணையாகச்
சென்றான் வென்றிச் செருக்களத்து,
மலைகொண் டலைநீ ரணைகட்டி
மதிள்நீ ரிலங்கை வாளரக்கர்
தலைவன், தலைபத் தறுத்தகந்தான்
சாளக் கிராம மடை நெஞ்சே
மனமே சாளக்கிராமம் சேர்
989. கடம்சூழ் கரியும் பரிமாவும்
ஓலிமாந் தேரும் காலாளும்,
உடன்சூழ்ந் தெழுந்த கடியிலங்கை
பொடியா வடிவாய்ச் சரந்துரந்தான்,
இடஞ்சூழ்ந் தெங்கு மிருவிசும்பில்
இமையோர் வணங்க மணங்கமழும்,
தடஞ்சூழ்ந் தெங்கு மழகாய
சாளக் கிராம மடைநெஞ்சே
எங்கும் நிறைந்தவன் எம்பெருமான்
990. உலவு திரையும் குலவரையும்
ஊழி முதலா எண்திக்கும்,
நிலவும் சுடரு மிருளுமாய்
நின்றான் வென்றி விறலாழி
வலவன், வானோர் தம்பெருமான்
மருவா வரக்கர்க் கெஞ்ஞான்றும்
சலவன்,சலஞ்சூழ்ந் தழகாய
சாளக் கிராம மடைநெஞ்சே
அரக்கரை அழித்தவன் வாழுமிடம் சாளக்கிராமம்
991. ஊரான் குடந்தை யுத்தமன்
ஒருகா லிருகால் சிலைவளைய,
தேரா வரக்கர் தேர்வெள்ளம்
செற்றான் வற்றா வருபுனல்சூழ்
பேரான், பேரா யிரமுடையான்
பிறங்கு சிறைவண் டறைகின்ற
தாரான், தாரா வயல்சூழ்ந்த
சாளக் கிராம மடைநெஞ்சே
ஆநிரை காத்தவன் வாழுமிடம் சாளக்கிராமம்
992. அடுதர்ர்த் தெழுந்தாள் பிலவாய்விட்
டலற அவள்மூக் கயில்வாளால்
விடுத்தான் விளங்கு சுடராழி
விண்ணோர் பெருமான் நண்ணார்முன்,
கடுத்தார்த் தெழுந்த பெருமழையைக்
கல்லொன் றேந்தி யினநிரைகாத்
தடுத்தான், தடஞ்சூழ்ந் தழகாய
சாளக் கிராம மடைநெஞ்சே
உலகளந்தான் வாழுமிடம் சாளக்கிராமம்
993. தாயாய் வந்த பேயுயிரும்
தயிரும் இழுது முடனுண்ட
வாயான், தூய வரியுருவிற்
குறளாய்ச் சென்று மாவலியை
ஏயா னிரப்ப, 'மூவடிமண்
இன்றே தா'என் றுலகேழும்
தாயான், காயா மலர்வண்ணன்
சாளக் கிராம மடைநெஞ்சே
நரசிம்மன் வாழுமிடம் சாளக்கிராமம்
994. ஏனோ ரஞ்ச வெஞ்சமத்துள்
அரியாய்ப் பரிய இரணியனை,
ஊனா ரகலம் பிளவெடுத்த
ஒருவன் தானே யிருசுடராய்,
வானாய்த் தீயாய் மாருதமாய்
மலைய யலைநீ ருலகனைத்தும்
தானாய், தானு மானான்றன்
சாளக்கிராம மடைநெஞ்சே
சாளக்கிராமம் சேர் அருள் கிட்டும்
995. வெந்தா ரென்பும் சுடுநீறும்
மெய்யிற் பூசிக் கையகத்து, ஓர்
சந்தார் தலைகொண் டுலகேழுந்
திரியும் பெரியோன் றான்சென்று, 'என்
எந்தாய் சாபம் தீர்,' என்ன
இலங்க முதுநீர் திருமார்பில்
தந்தான், சந்தார் பொழில்சூழ்ந்த
சாளக் கிராம மடைநெஞ்சே
அனைவரும் அருள் வேண்டுமிடம் சாளக்கிராமம்
996. தொண்டா மினமு மிமையோரும்
துணைநூல் மார்வி லந்தணரும்,
'அண்டா எமக்கே யருளாய்,' என்
றணையும் கோயி லருகெல்லாம்,
வண்டார் பொழிலின் பழனத்து
வயலி னயலே கயல்பாய,
தண்டா மரைகள் முகமலர்த்தும்
சாளக் கிராம மடைநெஞ்சே
சாளக்கிராமத்தில் ஸஹஸ்ரநாமம் சொல்லுங்கள்
997. தாரா வாரும் வயல்சூழ்ந்த
சாளக் கிராமத் தடிகளை
காரார் புறவில் மங்கைவேந்தன்
கலிய னொலிசெய் தமிழ்மாலை,
ஆரா ருலகத் தறிவுடையார்
அமரர் நன்னாட் டரசாள,
பேரா யிரமும் ஓதுமின்கள்
அன்றி யிவையே பிதற்றுமினே.
அடிவரவு - கலை கடம் உலவு ஊரான் அடுத்து தாய் ஏனோர் வெந்தார் தொண்டாம்
தாரா - வாணிலா.