வாணிலா முறுவல்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

முதற்பத்து

வாணிலா முறுவல்

நைமிசாரணியம்

நைமசரிரணித்தில் பகவான் காடு வடிவமாகவே இருக்கிறான். தம்முடைய தாழ்வுகளை எல்லாம் கூறிக்கொண்டு பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு பகவானைச் சரணடைகிறார் ஆழ்வார். ஒரு முறை தேவர்கள் பிரம்மாவை அடைந்து, பூமியில் தவம் செய்வதற்கு ஏற்ற சிறந்த இடம் எதுவென்று கேட்டனர். பிரம்மா தர்ப்பத்தைச் சக்கரமாகச் செய்த உருட்டினார். அது இக்காட்டில் வந்து நின்றது. தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுவே என்று அது காண்பித்தது. அதனால் நைமிசம் - அரணியம் ஆயிற்று.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எம்பெருமான் பிறவிநோய் நீக்குபவன்

998. வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள்

மாதரார் வனமுலைப் பயனே

பேணினேன், அதனைப் பிழையெனக் கருதிப்

பேதையேன் பிறவிநோ யறுப்பான்,

ஏணிலே னிருந்தே னெண்ணினே னெண்ணி

இளையவர் கலவியின் திறத்தை

நாணினேன், வந்துன் திருவடி யடைந்தேன்

நைமிசா ரணியத்து ளெந்தாய்

வாழ்நாளை வீணாக்கிவிட்டேனே

999. சிலம்படி யுருவிற் கருநெடுங் கண்ணார்

திறத்தனா யறத்தையே மறந்து,

புலம்படிந் துண்ணும் போகமே பெருக்கிப்

போக்கினேன் பொழுதினை வாளா

வானவர்க் கரசனே, வானோர்

நலம்புரிந் திறைஞ்சும் திருவடி யடைந்தேன்

நைமிசா ரணியத்து ளெந்தாய்

எந்தாய் உன் திருவடிகளே சரணம்

1000. சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து

சுரிகுழல் மடந்தையர் திறத்து,

காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த

தொண்டனேன் நமன்றமர் செய்யும்,

வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை

வெண்டிரை யலமரக் கடைந்த

நாதனே, வந்துன் திருவடி யடைந்தேன்

நைமிசா ரணியத்து ளெந்தாய்

இமயமதூதர் தண்டிப்பரே காப்பாற்று

1001. வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து

பிறர்பொருள் தாரமென் றிவற்றை,

நம்பினா ரிறந்தால் நமன்றமர் பற்றி

எற்றிவைத்து, 'எரியெழு கின்ற

செம்பினா லியன்ற பாவையைப் பாவி

தழுª 'வன மொழிவதற் கஞ்சி,

நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன்

நைமிசா ரணியத்து ளெந்தாய்

இரந்தவர்க்கு இல்லை என்று சொல்லாதீர்கள்

1002. இடும்பையா லடர்ப்புண்டு, இடுமினோ துற்றென்

றிரந்தவர்க் கில்லையே யென்று,

நெடுஞ்சொலால் மறுத்த நீசனே னந்தோ

நினைக்கிலேன் வினைப்பயன் றன்னை,

கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால்

படுவதோர் கொடுமிறைச் கஞ்சி,

நடுங்கிநான் வந்துன் திருவடி யடைந்தேன்

நைமிசா ரணியத்து ளெந்தாய்.

பரமனே உன்னையே அடைந்தேன்

1003. கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து

திரிந்துநா யினத்தொடும் திளைத்திட்டு,

ஓடியு முழன்று முயிர்களே கொன்றேன்

உணர்விலே னாதலால், நமனார்

பாடியைப் பெரிதும் பரிசழித் திட்டேன்

பரமனே பாற்கடல் கிடந்தாய்,

நாடிநான் வந்துன் திருவடி யடைந்தேன்

நைமிசா ரணியத்து ளெந்தாய்

நெஞ்சை விட்டுப் பிரியாதவன்

1004. நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்

நீதியல் லாதன செய்தும்,

துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே

துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்

வஞ்சனே னடியேன் நெஞ்சினிற் பிரியா

வானவா தானவர்க் கென்றும்

நஞ்சனே, வந்துன் திருவடி யடைந்தேன்

நைமிசா ரணியத்து ளெந்தாய்

எந்தாய் உன் திருவடியைச் சேர்ந்துவிட்டேன்

1005. ஏவினார் கலியார் நலிகவென் றென்மேல்

எங்ஙனே வாழுமாறு, ஐவர்

கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்

குறுங்குடி நெடுங்கடல் வண்ணா,

பாவினா ரின்சொல் பன்மலர் கொண்டுன்

பாதமே பரவிநான் பணிந்து,என்

நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன்

நைமிசா ரணியத்து ளெந்தாய்,

தவஞ்செய்து நின் திருவடி சேர்ந்தேன்

1006. ஊனிடைச் சுவர்வைத் தென்புதூண் நாட்டி

உரோமம்மேய்ந்து ஒன்பது வாசல்,

தானடைக் குரம்பை பிரியும்போ துன்றன்

சரணமே சரணமென் யிருந்தேன்,

தேனடைக் கமலத் திருவினுக் கரசே

திரைகொள்மா நெடுங்கடல் கிடந்தாய்,

நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன்

நைமிசா ரணியத்து ளெந்தாய்

இவற்றைப் படித்தோர் தேவர்கள் ஆவர்

1007. 'ஏதம்வந் தணுகா வண்ணம்நா மெண்ணி

எழுமினோ தொழுதும்,' என்று இமையோர்

நாதன்வந் திறைஞ்சும் நைமிசா ரணியத்

தெந்தையைச் சிந்தையுள் வைத்து,

காதலே மிகுத்த கலியன்வா யலிசெய்

மாலைதான் கற்றுவல் லார்கள்,

ஓதநீர் வைய மாண்டுவெண் குடைக்கீழ்

உம்பரு மாகுவர் தாமே.


அடிவரவு - வாணிலா சிலம்பு சூது வம்பு இடும்பை கோடிய நெஞ்சு ஏவினால்

ஊனிடை ஏதம் - அங்கண்.




 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கலையும் கரியும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  அங்கண் ஞாலம்
Next