தொண்டரடிப்பொடியாழ்வார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பன்னிரு ஆழ்வார்கள்

தொண்டரடிப்பொடியாழ்வார்

சோழ நாட்டில் உள்ள திருமண்டங்குடியில் (A. H. 8-ஆம் நூற்றாண்டு) பராபவ ஆண்டு மார்கழித் திங்கள் தேய்பிறையில் பொருந்திய சதுர்த்தசி திதியில் செவ்வாய்க்கிழமையன்று கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீ வனமாலையின் அமிசராய் முன்குடுமிச் சோழியரும் வைணவரும் ஆகிய வைணவ சோழியருக்குத் தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்தருளினார். தந்தையார் இவருக்கு விப்பிரநாராயணர் என்ற பெயரை இட்டு, உபநயனம் முதலிய வைதிகச் செயல்களைச் செய்தார்.

விப்பிரநாராயணர் திருமணத்தில் விருப்பமற்று, பல தலங்கள்தோறும் சென்று, இறைவனை வணங்க எண்ணியவராய் முதற்கண் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தார். அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநானைச் சேவித்து, அவரது அழகில் ஈடுபட்டவராய், அங்கு மிக்க வனப்புள்ள நந்தவனத்தை அமைத்து, பெரியாழ்வார் போன்று இறைவனுக்கு மாலை கட்டித் தரும் திருப்பணியை மேற்கொண்டு அங்கேயே தங்கலானார்.

அக்காலத்தில் திருவரங்கத்துக்கு வடக்கிலுள்ள உத்தமர்கோயிலில்,மிக்க அழகுடையவளாய்த் தேவதேவி என்னும் பெயருடன் தேவதாசி குலத்தில் பிறந்த ஒரு நங்கை தமக்கையுடன் நடனமாட உறையூருக்குச் சென்றாள். சோழன் முன்னிலையில் நடனமாடிப் பல பரிசுகள் பெற்றுத் திரும்புகையில் அவள் விப்பிரநாராயணரது நந்தவனத்தின் அழகில் ஈடுபட்டவளாய், அதற்குரியவனைத் தன்வயப்படுத்த எண்ணினாள். ஆனால்,அவளது தமக்கை தங்கையை நோக்கி, 'விப்பிரநாராயணர் இறை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். ஆதலினால் அவரை உன் வயப்படுத்துதல் எனும் செயல் உன்னாகாது'என்றுரைத்தாள். தங்கையாகிய தேவதேவி தமக்கையிடம், 'அவனை என் வயப்படுத்தாவிடின் உனக்கு ஆறுமாத காலம் அடியவளாவேன்'என உறுதி கூறினாள்.

பின்பு தேவதேவி தனியே மெல்லியதொரு செங்காவிச் சேலையை உடுத்து, அவரை அடுத்துத் திருவடிகளில் விழுந்து வணங்க, அவர் 'c யார்?'என்றார். அவள், 'நான் தீவினையால் தாசி குலத்தில் பிறந்தேனாயினும் அத்தொழிலைச் செய்ய உடன்படாது தேவரீரது திருவடியைச் சரணடைந்து உய்வு பெற நாடி வந்துற்றேன்'என்றாள். பின்பு, 'செடிகளுக்கு நீர் பெய்தல், பூப்பறித்தல், மாலை கட்டுதல், சோலையைப் பாதுகாத்தல் முதலிய பணிவிடைகளில் எதை நியமித்தாலும் செய்துவரக் காத்திருக்கிறேன்'என்று மிகுந்த வணக்கத்துடன் அவள் உரை செய்தாள். விப்பிரநாரயணரும் அவளது கபட எண்ணத்தை உணராமல் உடன்பட்டு தாம் அமுது செய்து மிகுந்த உணவினைக் கொடுத்துவர, அவளும் அதனை வாங்கி உட்கொண்டு பாத்தி கொத்துதல், நீர் ஊற்றுதல் முதலான செயல்களை ஊக்கத்துடன் செய்து, அவர்க்குத் தன்னிடத்து நம்பிக்கையுண்டாகும்படி நல்லவள்போல் நடித்து வந்தாள்.

பல மாதங்கள் கழிந்திப்ன், ஒரு நாள் பெருமழை பொழிந்து கொண்டிருந்த பொழுது, கருணை உள்ளத்தை உடைய அவர் வெளியிலே அவள் நனைந்து வருதலைப் பார்த்து, உள்ளே வந்து நிற்கும்படி கூறினார். அவளும் அருகில் வந்து, தனது மென்மொழிகளினாலும், மேனி மினுக்கினாலும் அவரது மனத்தைக் கவர்ந்து, அவரைத் தன் வயமாக்கிச் சில காலம் அவருடனிருந்து, பின்பு பொருளில்லாத அவரைப் பொருள் செய்யாது கைவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றாள். விப்பிரநாராயணரும அவள் பிரிவை ஆற்றாமல் அவளது வீட்டு வாயிலில் சென்று தயங்கி நின்றார்.

அவ்வளவில் திருமகள் திருமாலிடம் முன்போல் விப்பிரநாராயணனை ஆட்கொண்டு அந்தரங்க பக்தனாக்கியருள வேண்டும் என்று வேண்டினாள். இறைவனும் மினித வடிவம் கொண்டு, திருக்கோயில் பாத்திரங்களுள் பொன்வட்டில் ஒன்றை எடுத்துச்சென்று விப்பிரநாராயணர் அறியாமல் தேவதேவியிடம் தந்து, 'நான் அழகிய மணவாளதாசன், விப்பிரநாராயணன் அனுப்பவந்தேன்'என்று கூற, தேவதேவியும் விருப்பத்துடன், 'அவரை உள்ளே வரச் சொல்லும்'என்றாள், அடியார்க்கு எளியவனான எம்பெருமான் விப்விரநாராயணரிடம் வந்து தேவதேவி உள்ளே வரச் சொன்னாள்'என்ன, விப்பிரநாராயணரும் உள்ளங்குளிர்ந்து உடல் பூரித்து உள்ளே போய்ச் சேர்ந்தார்.

அவ்விரவு கழிந்து பொழுது விடிந்த அளவில், பொன் வட்டிலைக் காணாத கோயில் காப்போர் அதனை அரசனுக்கு அறிவிக்க, அரசனும் அர்ச்சகர், பரிசாரகர் முதலானவர்களைத் தண்டித்து வருத்தினான். பின்னர் ஒற்றர்மூலம் தேவதேவியின் இல்லத்தில் பொன் வட்டிவிருப்பதை உணர்ந்து, தேவதேவியை அழைப்பித்து வினவ, அவள், 'விப்பிரநாராயணரின் ஏவளாகிய அழகிய மணவாளதாசன் மூலம் விப்பிரநாராயணர் இதனை அனுப்பினார்'என்றாள். விப்பிரநாராயணர், 'யான் ஒன்றும் அறியேன்'என்றும், 'தமக்கு ஏவலாளன் இல்லை'எனவும் மறுத்துரைத்தார். அரசனும், களவாடிய பொருளை வாங்கினமைக்குரிய அபராதப் பொருளையும், பொன் வட்டிலையும் தேவதேவியிடமிருந்து பெற்றுப் பெருமாளுக்களித்து, பின் விப்பிரநாராயணரைச் சிறையில் இட்டான்.

மீண்டும் அரங்கநாயகி அரங்கநாதனை அருள் புரியுமாறு வேண்ட, பெருமாளும் அரசனது கனவில் தாம் எழுந்தருளி, 'தாசியிடத்துக் காதல் கொண்ட இவ்வந்தணருடைய கருமத்தைக் கழித்தற்பொருட்டு நாமே பொன்வட்டிலைக் கொண்டுபோய்த் தந்து இவனைத் தண்டிப்பித்தோம்;உண்மையில் இவன் கள்வனல்லன்;தூய்மையாளனே'என்று தெரிவிக்க, அரசன் அமைச்சர் முதலியோரிடம் அறிவித்து, அப்பொழுதே விப்பிரரை விடுவித்து உபசரித்து அனுப்பிவிட்டான்.

பிறவிப் பெருஞ்சிறையினின்றும் விடுபடுதற்கு ஒரு முற்குறியாகக் காவல் விடுபெற்ற அந்தணராகிய விப்பிரர் தமது துளவத் தொண்டினை மறந்து, பொருட் பெண்டிரின் பொய்ம்மை முயக்கத்தில் ஆழ்ந்திருந்ததற்கு வருந்தி, பெரியோர்களைச் சார்ந்து, பிராயச்சித்தம் தமக்குச் செய்யுமாறு வேண்டினார். பெரியோர்களும் பல நூற்பொருள்களை ஆராய்ந்து, 'பாவங்கள் யாவும் நீங்குதற்கு ஏற்ற பிராயச்சித்தம் பாகவதர்களுடைய திருவடித் தீர்த்தத்தை உட்கொள்வதே'என்று உய்யுமாறு கூற, அவர் அங்ஙனமே அதனைப் பெற்றுப் பருகித் தூய்மையராயினார். வைணவர்களுடைய திருவடித் தூளியாய் அவர்கட்குக் கீழ்படிந்து அடிமை பூண்டு ஒழுகி, அதனால் தமக்கு அதுவே பெயராக அவர் "தொண்டரடிப்பொடி"என்று திருநாமம் பெற்றார்.

பின்னர் இறைவனருளால் அர்ச்சாவதாரத்தில் மிக்க ஈடுபாடு கொண்டு, திருவரங்கத்துப் பெருமானுக்குத் துளவத் தொண்டு பூண்டு வாழ்ந்து, தமது அனுபவத்தைப் பிரபந்தமூலமாகப் பிறர்க்குத் தெரிவிக்கக் கருதி திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற திவ்வியப் பிரபந்தங்களை அருளிச்செய்து உலகத்தாரை வாழ்வித்து, பல்லாண்டுகள் திருவரங்கத்தில் வாழ்ந்தார்.

தேவதேவியும் தான் உய்வு பெற எண்ணித் தனது பொருளனைத்தையும் அரங்கனுக்கே உரியதாக்கிவிட்டு கோயிலிலே திருவலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் முதலிய அடிமைத் தொழில்களைச் சில காலம் செய்து கொண்டிருந்து முடிவில் நற்கதி நண்ணினாள்.

தொண்டரடிப்பொடியாருடைய பாசுரங்கள் யாவும் இன்னிசை உடையனவாய், பக்திச் சுவை நிறைந்து தேனினும் இனிமை பயப்பனவாய்ப் பொலிகின்றன.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்:1. திருவரங்கம்,
2. திருவயோத்தி, 3. திருப்பாற்கடல் முதலியனவாகும்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is ஸ்ரீ ஆண்டாள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருப்பாணாழ்வார்
Next