திருப்பாணாழ்வார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பன்னிரு ஆழ்வார்கள்

திருப்பாணாழ்வார்

"ஊரெனப்படுவது உறையூர்"எனப் போற்றிப் புகழும் சோழர் குல வேந்தர்களின் தலைநகராகும் உறந்தையம்பதி சரித்திரத்தில் பெருமைபடப் பேசப்பட்டுள்ளது.

செம்பியர்களின் ஆட்சியில் சிறப்புற்றுப் பெருமை பெற்றிலங்கிய திருவுறையூரில் செந்நெற் பயிரில் (A. H. 8- ஆம் நூற்றாண்டு) துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம் தேய்பிறையில் பொருந்திய துவிதியை திதியில் புதன்கிழமையன்று உரோகிணி நட்சத்திரத்தில் திருமாலினது ஸ்ரீவத்ஸத்தின் அமிசராய் திருப்பாணாழ்வார் அவதரித்தருளினார்.

பிறவாது பிறந்த அக்குழந்தையை அவ்வூரில் பஞ்சம ஜாதியில் பாணர் குலத்துப்பிறந்தானொருவன் நெற்பயிர் பக்கல் வந்தபொழுது கண்டான். கண்ட அளவில் பெற்றோர் யாவர் எனச் சுற்றும்முற்றும் பார்த்து, ஒருவரும் இன்மையால் தனது நல்வினைப் பயன் காரணமாக நாராயணன் தனக்கு அருளிச்செய்த செயலோ என மகிழ்ந்து, எடுத்துச் சென்று மனைவியிடம் அளித்தான், மனைவியும் மலடு தீர்ந்த தன்மையால் பசுவின் பால் முதலிய தூய உணவினைக் கொடுத்துக் குழந்தையைக் காத்து வந்தாள். திருமாலருளால் பிறந்த இவர் தாம் புகுந்த குலத்துக்கு ஏற்ற யாழ்ப் பாடலில் தேர்ச்சி பெற்று, அதனால் பாணர் குலத்தில் சிறப்புற்று இலங்கினமையால், யாவரும் பாணர் குலத் தலைவர் என்பது தோன்ற 'திருப்பாணர்'என இவரை அழைத்தனர்.

திருப்பாணர் பின் அரங்கநாதருக்குப் பாடல் திருத்தொண்டு செய்யும் எண்ணத்தினராய்ப் புறப்பட்டு, தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்தவராதலால் திருவரங்கத்தில் அடியிடத் துணியாமல், தென் திருக்காவிரியின் தென்கரையில் திருமுகத்துறைக்கெதரில் யாழுங்கையுமாக நின்று கொண்டு, திருவரங்கனைத் திசை நோக்கித் தொழுதார். பின்பு திருவரங்கநாதப் பெருமானைக் குறித்துப் பல பாடல்களைக் கண்டமும் கருவியுமொக்க, கேட்பவர் செவியும் மனமும் குளிர, எம்பெருமான் திருவுள்ளம் மகிழப்பாடினார். இங்ஙனம் நாள்தோறும் வைகறையில் திருபாணர் திருவரங்கனைக் குறித்துப் பல பாடல்களைத் தம்மை மறந்து பக்தியில் பரவசப்பட்டு பாடிக்கொண்டிருப்பார்.

ஒரு நாள் திருவரங்கநாதனை ஆராதிப்பவராகிய உலோகசாரங்க முனிவர் என்பவர் காவிரியில் நீராடித் திருமண் அணிந்து, துளவமணி மாலையையும், தாமரை மணிமாலையையும் கழுத்தில் அணிந்துகொண்டு, திருவரங்கநாதன் திருமஞ்சனத்திற்கு நீர்கொண்டு செல்லப் பொற்குடத்தைக் கையிலேந்தி அங்கு வந்தார். அவர் திருப்பாணரைக் கண்டு கைதட்டிக் கூவி, 'அப்பாற் செல்'என்று கூவினார். திருப்பாணர் இவ்வுலகத் தொடர்பை மறந்ததிருந்ததனால் அம்மொழியைச் செவியுறாமலேயே வாளா நின்றிட்டார். இதனால் கோபமுற்ற முனிவர் ஒரு கல்லை எடுத்து வீசினார். அது பாண் பெருமாளுடைய நெற்றியில் பட்டுக் குருதி பெருகச் செய்தது. திருப்பாணரும் தெளிவுற்று, முனிவர் எதிர்ப்புறம் சேய்மையில் நிற்பதைக் கண்டு, மனமும் உடலும் நடுங்கி அவ்விடத்தினின்று சென்று விட்டார்.

பிறகு உலோகசாரங்க முனிவர் பொற்குடத்தில் காவிரியின் நீரை முகந்துகொண்டு, திருவரங்கநாதன் முன் சென்றார். அப்பொழுது திருவரங்கநாதன் நெறறியினின்றும் செந்நீர் பெருகி வந்துகொண்டிருந்தது. இதனை முனிவரும் அர்ச்சகரும் கோயில் அதிகாரிகளுக்கு அறிவிக்க, அவர்களும் இவ்வுற்பாகச் செய்தியை அரசனுக்குக் கூற, அமைச்சர்களுடன் அரசன் ஆராய்ந்தும் காரணம் காணாது, சுவாமி திருவடியிலே பாரத்தை வைத்திட்டான்.

அதற்கு முன்பாக ஒரு நாள் பிராட்டி பெருமாளை நோக்கி, 'பல காலமாக நம்மைப் பாடிவருகிற பாணன் புறம்பே நிற்கப் பார்த்திருக்கலாமோ?'என்று விண்ணப்பம் செய்ய, எம்பெருமான் விரைவிலே அவரைத் தம் அருகில் அழைத்துக்கொள்வதாக வாக்களித்திருந்தனன். அங்ஙனம் வாக்களித்த வண்ணமே திருப்பாணருக்கு அருள்புரிந்து அவருடைய அன்பையும் செயலையும் பெருமையுடன் உலகத்தில் விளங்கச் செய்யவும், கடவுளுடைய திருவருளுக்கு அன்பே முதன்மையானதாகும் என்னும் அருமறையினுடைய உண்மையை இவ்வுலகத்தினர் பலரும் அறியவும் திருவரங்கேசனார் திருவுள்ளங் கொண்டார். அந்நாள் இரவில் உலோகசாரங்கருடைய கனவில் தோன்றி இறைவர், 'முனிவ!நீ சென்று எம்முடைய நல்லன்பராகிய திருப்பாணரை இழி குலத்தவர் எனக் கருதாமல் உன்னுடைய தோள்மீது எழுந்தருளச் செய்து, எம் திருமுன்புகொண்டு வருவாயாக'என்று கட்டளையிட்டருளினார்.

உலோகசாரங்க முனிவர் வைகறையில் கண் விழித்து எழுந்து, கனவிற் கடவுளிட்ட கட்டளையை நினைந்து மிக்க வியப்பை அடைந்தார். அரங்கரது ஆணையை நிறைவேற்ற எண்ணி அமலநாதரிடம் அன்புடைப் பெரியார் பலரைத் தம்முடன் வரவழைத்துக்கொண்டு பாண்பெருமாள் வழக்கமாக நின்று திருப்பாடல் தொண்டு புரியும் இடத்தை நாடிக் களிப்புடன் நடந்தார்.

தொண்டரெல்லாம் தொழுதேத்தும் தன்மையரான பாண்பெருமாளையணுகிய உலோகசாரங்கர், தலைமேற் கைகளைக் கூப்பி, மும்முறை வலம் வந்து, மண்ணிற்கிடந்து பாணருடைய திருவடிகளை வணங்கியெழுந்தார். பின்பு திருப்பாணாழ்வாரை நோக்கி, 'தேவரீரைத் தம்மிடத்துக்கு எழுந்தருளப் பண்ணுவித்துக் கொண்டு வரவேண்டுமென்று நம் பெருமாள் அடியேனுக்குக் கட்டளையிட்டருளினார்'என்று சொன்னார். பாணர் தலைவர் 'நீசனான அடியேன் திருவரங்கப்பெருநகரை மிதித்திடுவேனோ?'என்று தம் சாதி இழிவைச் சொல்லி மறுத்திட்டார்.

அப்பால் முனிவர், 'தேவரீர் மிதித்திடவேண்டா;பெருமாள் பெரிய திருவடியின் திருத்தோளில் எழுந்தருளுதல்போலத் தேவரீர் அடியேனது தோளில் ஏறியருளும்'என்று பிரார்த்தித்தார். 'தங்கள் பாதத்திலே தலையை வைத்து வணங்குவதற்குரிய யான் இக்கொடுந்தொழிலைச் செய்யேன்'என்று பாணர் கூறினார். பின்னர் முனிவர் கடவுளின் கட்டளையைக் கூறி வற்புறுத்தத் திருப்பாணர் தம்முடைய உயிரையும், உடலையும் இறைவரது அடியிணைக்கே உரியனவாக்கி மெய்மறந்து நின்றார்.

உலோகசாரங்க முனிவர், பாணநாதரைத் தோளிலேற்றிக் கொண்டு சென்று அரங்கநாதனது திருமுன்பே இறக்கிவிட்டார்.

உடனே திருப்பாணாழ்வார் இறைவனது திருவடி முதல் தலைவரையிலுமுள்ள அழகிய அவயங்களெல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கண் குளிரப் பார்த்து மனமுருகினார். எல்லா அவயங்களிலும் ஈடுபட்டுச் சேவித்துக் களித்தார்;மணவாளருடைய அழகிற் சிறந்த எல்லா அவயங்களிடமும், தாம் நுகர்ந்த அழகையும் இன்பத்தையும் உலகத்தார் எல்லாரும் நுகர்ந்து இன்புற்று உய்யத் திருவுள்ளங்கொண்டார்!அரங்கரது திருமேனியழகைச் சிறந்த பத்துப் பாட்டுக்களால் பாடினார். இந்த அருளிச்செயலுக்கு அமலனாகிபிரான் என்று பெயர்.

பின்னர் மக்கள் பலருங்காணத் திருப்பாணாழ்வார் பெரிய பெருமாளுடைய திருமலரடிகளையணுகிக் கீழே விழுந்து வணங்கி, அத்திருவடிகளினிடமே மறைந்து பேரின்ப வீட்டை அடைந்தார். திருப்பாணாழ்வாரைத் தூக்கித் தம் திருமுன்பு கொணர்ந்தமையைக் கருதி அரங்கநாதர், அந்த உலோகசாரங்கரையும் ஆட்கொண்டு, என்றும் அழிதலில்லாத பேரின்ப வீட்டை அவருக்கும் அளித்தருளினார்.

திருப்பாணாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்:1. திருவரங்கம், 2. திருவேங்கடம்,
3. பரமபதம் முதலியனவாகும்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தொண்டரடிப்பொடியாழ்வார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருமங்கையாழ்வார்
Next