ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
இரண்டாம் பத்து
விற்பெருவிழவும்
திருவல்லிக்கேணி
சென்னையில் திருவல்லிக்கேணி என்பது ஒரு பகுதி. இங்கு ஸ்ரீ பார்த்தசாரதி எழுந்தருளி இருக்கிறார். தொண்டைமான் சக்கரவர்த்தியின் வேண்டுகோளக்கிணங்கித் திருவேங்கடமுடையானே கண்ணனாகக் குடும்பத்தோடு ஸேவை சாதித்தார் என்பது வரலாறு. அதனால் மூலவருக்கு வேங்கடகிருஷ்ணன் என்று திருநாமம். இவர் பார்த்தசாரதி திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அருச்சனன் தேர்த்தட்டில் நின்றவன்
1068. விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ,
செற்றவன் றன்னை, புரமெரி செய்த
சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு
பார்த்தன்றன் தேர்முன்நின் றாணை,
சிற்றவை பணியால் முடிதுறந் தானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.
என்னையாளுடையப்பன் தங்கம் இடம்
1069. வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை
விழுமிய முனிவர்கள் விழுங்கும்,
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத் தோர்தொழு தேத்தும்,
ஆதியை யமுதை யென்னை யாளுடை
அப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும், மாடமா மயிலைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.
இச்சொல்மாலை படித்தோர் தேவருலகு ஆள்வர்
1077. மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்
மாடமா ளிகையும்மண் டபமும்,
தென்னன்தொண் டையர்கோன் செய்தநன்மயிலைத்
திருவல்லிக் கேணிநின் றானை,
கன்னிநன் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலி கன்றி,
சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார்
சுகமினி தாள்வர்வா னுலகே.
அடிவரவு - வில் வேத வஞ்சனை இந்திரன் இன் அந்தகன் பரதன் பள்ளி மீனமர் மன்னு - அன்றாயர்.
.