ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
நான்காம் பத்து
தூம்புடை
திருமணிக்கூடம்
இவ்வூர் திருநாங்கூர்த் திருப்பதிகளுள் ஒன்று. திருநாங்கூரிலிருந்து கிழக்கே அரைக்கல் தொலைவில் உள்ளது. பெருமாள் திருமணிக்கூட நாயகன். தாயார் இந்திரா தேவி. இந்த எம்பெருமான் கஜேந்திரவரதன்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆனையின் துயர் நீக்கியவன் அமரும் இடம்
1288. தூம்புடைப் பனைக்கை வேழம்
துயர்கெடுத் தருளி, மன்னு
காம்புடைக் குன்ற மேந்திக்
கடுமழை காத்த எந்தை,
பூம்புனல் பொன்னி முற்றும்
புகுந்துபொன் பரண்ட, எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே. 1
இலங்கைமீது கணை தொடுத்தவன் இருக்கும் இடம்
1289. கவ்வைவா ளெயிற்று வன்பேய்க்
கதிர்முலை சுவைத்து,இ லங்கை
வெவ்விய இடும்பை கூரக்
கடுங்கணை துரந்த எந்தை,
கொவ்வைவாய் மகளிர் கொங்கைக்
குங்குமம் கழுவிப் போந்த,
தெய்வநீர் கமழும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே. 2
நம்பின்னை நோன்புணர்ந்தவன் தங்கும் இடம்
1290. மாத்தொழில் மடங்கச் செற்று
மருதிற நடந்து வன்தாள்
சேத்தொழில் சிதைத்துப் பின்னை
செவ்வித்தோள் புணர்ந்த எந்தை,
நாத்தொழில் மறைவல் லார்கள்
நயந்தறம் பயந்த, வண்கைத்
தீழ்தொழில் பயிலும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே. 3
குவலயாபீடத்தை அழித்தவன் அமரும் இடம்
1291. தாங்கருஞ் சினத்து வன்தாள்
தடக்கைமா மருப்பு வாங்கி,
பூங்குருந் தொசித்துப் புள்வாய்
பிளந்தெரு தடர்த்த எந்தை,
மாங்கனி நுகர்ந்த மந்தி
வந்துவண் டிரிய, வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே. 4
சூர்ப்பணகையின் காதும் மூக்கும் அறுத்தவன் ஊர்
1292. கருமக ளிலங்கை யாட்டி
பிலங்கொள்வாய் திறந்து, தன்மேல்
வருமவள் செவியும் மூக்கும்
வாளினால் தடிந்த எந்தை,
பெருமகள் பேதை மங்கை
தன்னொடும் HKM லாத,
திருமகள் மருவும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே. 5
தசாவதாரம் எடுத்தவன் தங்கும் இடம்
1293. கெண்டையும் குறளும் புள்ளும்
கேழலு மரியும் மாவும்,
அண்டமும் சுடரும் அல்லா
ஆற்றலு மாய எந்தை,
ஒண்டிற லாளர் நாங்கூர்த்
வடவர சோட்டங் கண்ட,
திண்டிற லாளர் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே. 6
பஞ்சபூதங்களாகிய இறைவன் தங்கும் இடம்
1294. குன்றமும் வானும் மண்ணும்
குளிர்புனல் திங்க ளோடு,
நின்றவெஞ் சுடரும் அல்லா
நிலைகளு மாய எந்தை,
மன்றமும் வயலும் காவும்
மாடமும் மணங்கொண்டு,எங்கும்
தென்றல்வந் துலவும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே. 7
எல்லாப் பொருள்களுமானவன் தங்கும் இடம்
1295. சங்கையும் துணிவும் பொய்யும்
மெய்யும்இத் தரணி யோம்பும்,
பொங்கிய முகிலும் அல்லாப்
பொருள்களு மாய எந்தை,
பங்கய முகுத்த தேறல்
பருகிய வாளை பாய,
செங்கய லுகளும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே. 8
முனிவரும் தேவரும் வணங்கும் இடம் இது
1296. பாவமும் அறமும் வீடும்
இன்பமுந் துன்பந் தானும்
கோவமும் அருளும் அல்லாக்
குணங்களு மாய எந்தை,
'மூவரி லெங்கள் மூர்த்தி
இவன்', என முனிவ ரோடு,
தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே. 9
மண்ணுலகும் பொன்னுலகும் ஆள்வர்
1297. திங்கள்தோய் மாட நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானை,
மங்கையர் தலைவன் வண்டார்
கலியன்வா யலிகள் வல்லார்,
பொங்குநீ ருலக மாண்டு
பொன்னுல காண்டு, பின்னும்
வெங்கதிர்ப் பரிதி வட்டத்
தூடுபோய் விளங்கு வாரே. 10
அடிவரவு: தூம்புடை கவ்வை மாத்தொழில் தாங்கரு கருமகள் கெண்டை குன்றம் சங்கை பாவம் திங்கள் ---தாவளந்து.
.