தாவளந்து

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

நான்காம் பத்து

தாவளந்து

திருக்காவளம்பாடி: கோபாலஸ்வாமி விஷயம்

இந்தத் திவ்விய தேசம் திருநாங்கூருக்குக் கிழக்கே சுமார் ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. சீர்காழியிலிருந்து பூம்புகாருக்குச் செல்லும் வழியில் இந்தத் திவ்விய தேசம் உள்ளது. இவ்வூருக்கு அருகில் திருமங்கையாழ்வார் அவதரித்த திருக்குறையலூர் உள்ளது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருக்காவளம்பாடிக் கண்ணனே கதி

1298. தாவளந் துலக முற்றும்

தடமலர்ப் பொய்கை புக்கு,

நாவளம் நவின்றங் கேத்த

நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்,

மாவளம் பெருகி மன்னும்

மறையவர் வாழும் நாங்கைக்,

காவளம் பாடி மேய

கண்ணனே! களைகண் நீயே. 1

மாவலி வேள்வியில் யாசித்தவன் ஊர் இது

1299. மண்ணிடந் தேன மாகி

மாவலி வலிதொ லைப்பான்,

விண்ணவர் வேண்டச் சென்று

வேள்வியில் குறையி ரந்தாய்,

துண்ணென மாற்றார் தம்மைத்

தொலைத்தவர் நாங்கை மேய,

கண்ணனே! காவ ளந்தண்

பாடியாய்! களைக ணீயே. 2

சுக்கிரீவனுக்கு அரசு அளித்தவன் இடம் இது

1300. உருத்தெழு வாலி மார்வில்

ஒருகணை யுருவ வோட்டி,

கருத்துடைத் தம்பிக் கின்பக்

கதிர்முடி யரச ளித்தாய்,

பருத்தெழு பலவும் மாவும்

பழம்விழுந் தொழுகும் நாங்கைக்,

கருத்தனே! காவ ளந்தண்

பாடியாய்! களைக ணீயே. 3

விபீஷணனுக்கு அரசு அளித்தவன் வாழும் இடம் இது

1301. முனைமுகத் தரக்கன் மாள

முடிகள்பத் தறுத்து வீழ்த்து,அங்

கனையவற் கிளைய வற்கே

அரசளித் தருளி னானே,

சுனைகளில் கயல்கள் பாயச்

சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,

கனைகழல் காவ ளந்தண்

பாடியாய்! களைக ணீயே. 4

காளியன்மீது நடனமாடியவன் தங்கும் இடம்

1302. படவர வுச்சி தன்மேல்

பாய்ந்துவல் நடங்கள் செய்து,

மடவரல் மங்கை தன்னை

மார்வகத் திருத்தி னானே,

தடவரை தங்கு மாடத்

தகுபுகழ் நாங்கை மேய,

கடவுளே! காவ ளந்தண்

பாடியாய்! களைக ணீயே. 5

பாரதப் போர் முடித்தவன் வாழ்விடம் இது

1303. மல்லரை யட்டு மாளக்

கஞ்சனை மலைந்து கொன்று,

பல்லர சவிந்து வீழப்

பாரதப் போர்மு டித்தாய்,

நல்லரண் காவின் நீழல்

நறைகமழ் நாங்கை மேய,

கல்லரண் காவ ளந்தண்

பாடியாய்! களைக ணீயே. 6

பாண்டவ தூதனானவன் உறைவிடம் இது

1304. மூத்தவற் கரசு வேண்டி

முன்பு தூதெழுந் தருளி,

மாத்தமர் பாகன் வீழ

மதகரி மருப்பொ சித்தாய்,

பூத்தமர் சோலை யோங்கிப்

புனல்பரந் தொழுகும், நாங்கைக்

காத்தனே! கால ளந்தண்

பாடியாய்! களைக ணீயே. 7

சத்தியபாமைக்காகக் கற்பகமரம் கொணர்ந்தவன் ஊர்

1305. ஏவிளங் கன்னிக் காகி

இமையவர் கோனைச் செற்று,

காவளம் கடிதி றுத்துக்

கற்பகம் கொண்டு போந்தாய்,

பூவளம் பொழில்கள் சூழ்ந்த

புரந்தரன் செய்த நாங்கைக்,

காவளம் பாடி மேய

கண்ணனே! களைக ணீயே. 8

திருக்காவளந்தண்பாடியானே நமக்குக் கதி

1306. சந்தமாய்ச் சமய மாகிச்

சமயவைம் பூத மாகி,

அந்தமா யாதி யாகி

அருமறை யவையு மானாய்,

மந்தமார் பொழில்க டோறும்

மடமயி லாலும் நாங்கை,

கந்தமார் காவ ளந்தண்

பாடியாய்! களைக ணீயே. 9

அரசர்க்கு அரசர் ஆவர்

1307. மாவளம் பெருகி மன்னும்

மறையவர் வாழும், நாங்கைக்

காவளம் பாடி மேய

கண்ணனைக் கலியன் சொன்ன,

பாவளம் பத்தும் வல்லார்

பார்மிசை யரச ராகி,

கோவிள மன்னர் தாழக்

குடைநிழல் பொலிவர் தாமே. 10

அடிவரவு: தாவளந்து மண் உருத்து முனை படவரவு மல்லர் மூத்தவற்கு ஏவிளம் சந்தம் மாவளம் -- கண்ணார்.







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தூம்புடை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கண்ணார் கடல்
Next