கவளயானை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

நான்காம் பத்து

கவளயானை

திருப்பார்த்தன் பள்ளி

வருணனது வேண்டுகோளுக்கு இணங்கி ஸ்ரீமந் நாராயணன் பார்த்தசாரதி திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இடம் இது. அதனால் இந்தத் திவ்விய தேசத்திற்குப் பார்த்தன் பள்ளி என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூருக்குச் செல்வோர் சீர்காழி பூம்புகார்ச் சாலையில் இறங்கிச் செல்லவேண்டும். பெருமாள் தாமரையாள் கேள்வன்.

ஆழ்வார் தம்மை நாயகியாக அமைத்துக்கொண்டு, திருமாலினிடத்தே ஈடுபட்ட தம் செயல்களைக் கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் போல் ஈண்டுப் பாடியுள்ளார்.

நற்றாய் இரங்கல்

கலி விருத்தம்

என் மகள் பார்த்தன்பள்ளியையே பாடுவாள்

1318. கவளயானைக் கொம்பொசித்த

கண்ணனென்றும், காமருசீர்க்

குவளைமேக மன்னமேனி

கொண்டகோனென் னானையென்றும்,

தவளமாட நீடுநாங்கைத்

தாமரையாள் கேள்வனென்றும்,

பவளவாயா ளென்மடந்தை

பார்த்தன்பள்ளி பாடுவாளே. 1

கண்ணனின் செயல்களையே என் மகள் பாடுவாள்

1319. கஞ்சன்விட்ட வெஞ்சினத்த

களிறடர்த்த காளையென்றும்,

வஞ்சமேவி வந்தபேயின்

உயிரையுண்ட மாயனென்றும்,

செஞ்சொலாளர் நீடுநாங்கைத்

தேவதேவ னென்றென்றோதி,

பஞ்சியன்ன மெல்லடியாள்

பார்த்தன்பள்ளி பாடுவாளே. 2

என் மகளின் பாடல்களே மாறிவிட்டன

1320. அண்டர்கோனென் னானையென்றும்

ஆயர்மாதர் கொங்கைபுல்கு

செண்டனென்றும், நான்மறைகள்

தேடியோடும் செல்வனென்றும்,

வண்டுலவு பொழில்கொள்நாங்கை

மன்னுமாய னென்றென் றோதி,

பண்டுபோலன் றென்மடந்தை

பார்த்தன்பள்ளி பாடுவாளே. 3

இலங்கை யழித்த மாயனை என்மகள் பாடுவாள்

1321. கொல்லையானாள் பரிசழிந்தாள்

கோல்வளையார் தம்முகப்பே,

மல்லைமுந்நீர் தட்டிலங்கை

கட்டழித்த மாயனென்றும்,

செல்வம்மல்கு மறையோர்நாங்கை

தேவதேவ னென்றென்றோதி,

பல்வளையா ளென்மடந்தை

பார்த்தன்பள்ளி பாடுவாளே. 4

இராமன் வீரத்தையே என் மகள் பாடுவாள்

1322. அரக்கராவி மாளஅன்று

ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,

குரக்கரச னென்றும்கோல

வில்லியென்றும், மாமதியை

நெருக்குமாட நீடுநாங்கை

நின்மலன்தா னென்றென்றோதி,

பரக்கழிந்தா ளென்மடந்தை

பார்த்தன்பள்ளி பாடுவாளே. 5

பார்த்தன்பள்ளிப் பரமனையே என் மகள் பாடுவாள்

1323. ஞாலமுற்று முண்டுமிழ்ந்த

நாதனென்றும், நானிலம்சூழ்

வேலையன்ன கோலமேனி

வண்ணனென்றும், மேலெழுந்து

சேலுகளும் வயல்கொள்நாங்கைத்

தேவதேவ னென்றென்றோதி,

பாலின்நல்ல மென்மொழியாள்

பார்த்தன்பள்ளி பாடுவாளே. 6

நாங்கைத் தேவதேவனை என் மகள் பாடுவாள்

1324. நாடியென்ற னுள்ளங்கொண்ட

நாதனென்றும், நான்மறைகள்

தேடியென்றும் காணமாட்டாச்

செல்வனென்றும், சிறைகொள்வண்டு

சேடுலவு பொழில்கொள்நாங்கைத்

தேவதேவ னென்றென்றோதி,

பாடகம்சேர் மெல்லடியாள்

பார்த்தன்பள்ளி பாடுவாளே. 7

சக்கரக்கையனையே பாடுவாள் என் மகள்

1325. உலகமேத்து மொருவனென்றும்

ஒண்சுடரோ டும்பரெய்தா,

நிலவுமாழிப் படையனென்றும்

நேசனென்றும், தென்திசைக்குத்

திலதமன்ன மறையோர்நாங்கைத்

தேவதேவ னென்றென்றோதி,

பலருமேச வென்மடந்தை

பார்த்தன்பள்ளி பாடுவாளே. 8

பார்த்தன்பள்ளிப் பெருமானையே பாடுவாள் என் மகள்

1326. கண்ணனென்றும் வானவர்கள்

காதலித்து மலர்கள்தூவும்,

எண்ணனென்று மின்பனென்றும்

மேழுலகுக் காதியென்றும்,

திண்ணமாட நீடுநாங்கைத்

தேவதேவ னென்றென்றோதி,

பண்ணினன்ன மென்மொழியாள்

பார்த்தன்பள்ளி பாடுவாளே. 9

வைகுந்த இன்பம் பெறுவர்

1327. பாருள்நல்ல மறையோர்நாங்கைப்

பார்த்தன்பள்ளி செங்கண்மாலை,

வார்கொள்நல்ல முலைமடவாள்

பாடலைத்தாய் மொரிந்தமாற்றம்,

கூர்கொள்நல்ல வேல்கலியன்

கூறுதமிழ் பத்தும்வல்லார்,

ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள்

இன்பம்நாளு மெய்துவாரே. 10

அடிவரவு: கவளம் கஞ்சன் அண்டர் கொல்லை அரக்கர் ஞாலம் நாடி உலகம் கண்ணன் பாருள் --- நும்மை.



 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கண்ணார் கடல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  நும்மைத் தொழுதோம்
Next