கண்ணார் கடல்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

நான்காம் பத்து

கண்ணார் கடல்

திருவெள்ளக்குளம்

இந்தத் திவ்விய தேசத்திற்கு அண்ணன் கோயில் என்றும் பெயர். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஸ்ரீநிவாஸன். திருமங்கைமன்னனின் நாடு ஆலி நாடு. அதன் ஒரு பகுதி திருநாங்கூர். திருமங்கையாழ்வாரின் மனைவியான குமுதவல்லித் தாயார் இங்குத் தோன்றினார். திருமங்கையாழ்வாருக்கு இவ்வூரில் மிக்க ஈடுபாடு. சீர்காழி--தரங்கம்பாடிச் சாலையில் இவ்வூர் இருக்கிறது.

கலி விருத்தம்

திருவெள்ளக்குளத்து அண்ணா! என் துன்பம் துடை

1308. கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,

நண்ணார்முனை வென் றிகொள் வார்மன்னு நாங்கூர்,

திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்

அண்ணா, அடியே னிடரைக் களையாயே. 1

எம் தந்தையே! என் துன்பத்தைக் களை

1309. கொந்தார் துளவ மலர்கொண் டணிவானே,

நந்தா தபெரும் புகழ்வே தியர்நாங்கூர்,

செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்

எந்தாய், அடியே னிடரைக் களையாயே. 2

மலையால் மழை தடுத்தவனே! இடர்களை நீக்கு

1310. குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,

நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்

சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்

நின்றாய்,நெடியாய்! அடியே னிடர்நீக்கே. 3

குவலயாபீடத்தின் தந்தத்தை முறித்தவனே! அருள்புரி

1311. கானார் கரிகொம் பதொசித்த களிறே,

நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,

தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்

ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே. 4

திருவெள்ளக்குளத்தாய்! என் வினையை அகற்று

1312. வேடார் திருவேங் கடம்மேய விளக்கே,

நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்,

சேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய்,

பாடா வருவேன் வினையா யினபாற்றே. 5

மலையதனால் அணைகட்டியவனே! அருள்செய்

1313. கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,

நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்

செல்வா, திருவெள்ளக் குளக்துறை வானே,

எல்லா இடரும் கெடுமா றருளாயே. 6

கோபாலா! என் விளைகளைத் தீர்த்துவிடு

1314. கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,

நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,

சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்

மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே. 7

ஆராவமுதே! அடியேனுக்கு அருள்

1315. வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,

நாரா யணனே! நல்லவே தியர்நாங்கூர்,

சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்

ஆரா வமுதே, அடியேற் கருளாயே. 8

திருமருவிய மார்பா! என்னை அடிமை கொள்

1316. பூவார் திருமா மகள்புல் லியமார்பா,

நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த்

தேவா! திருவெள்ளக் குளத்துறை வானே,

'ஆவா! அடியா னிவன்,'என் றருளாயே. 9

இவற்றைப் படித்தோர் தேவபதவி அடைவர்

1317. நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச்

செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை,

கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை,

வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே. 10

அடிவரவு: கண்ணார் கொந்து குன்று கான் வேடு கல் கோல் வாராகம் பூவார் நல்லன்பு -- கவளம்.


 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தாவளந்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கவளயானை
Next