அறிவது

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

அறிவது

திருப்புள்ளம்பூதங்குடி

பெரிய வுடையாருக்கு (ஜடாயுவுக்கு) மோட்சம் கொடுத்த நிலையில் பெருமாள் வல்விலிராமன் ஈண்டு முனிவர்களுக்குக் காட்சி தருகிறார். தாயார் பொற்றாமைரையாள், பறவையைக் குறிக்கும் 'புள்' என்ற சொல்லைத் தாங்கி நிற்கும் திவ்வியதேசம் இது. இவ்வூர் கும்பகோணம் - திருவையாறு சாலைக்கு அருகில் இருக்கிறது.

அறுசீர்க் கடிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாமனன் வாழும் இடம் திருப்புள்ளம்பூதங்குடி

1348. அறிவ தரியா னனைத்துலகும்

உடையா னென்னை யாளுடையான்

குறிய மாணி யுருவாய

கூத்தன் மன்னி யமருமிடம்,

நறிய மலர்மேல் சுரும்பார்க்க

எழிலார் மஞ்ஞை நடமாட,

பொறிகொள் சிறைவண் டிசைபாடும்

புள்ளம் பூதங் குடிதானே. 1

யனையின் துயர் தீர்த்தவன் வாழும் இடம்

1349. கள்ளக் குறளாய் மாவலியை

வஞ்சித் துலகம் கைப்படுத்து,

பொள்ளைக் கரத்த போதகத்தின்

துன்பம் தவிர்த்த புனிதனிடம்,

பள்ளச் செறுவில் கயலுகளப்

பழனக் கழனி யதனுள்போய்,

புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும்

புள்ளம் பூதங் குடிதானே. 2

மருதம் சாய்ந்த மால் மருவும் இடம்

1350. மேவா வரக்கர் தென்னிலங்கை

வேந்தன் வீயச் சரம்துரந்து,

மாவாய் பிளந்து மல்லடர்த்து,

மருதம் சாய்த்த மாலதிடம்,

காவார் தெங்கின் பழம்வீழக்

கயல்கள் பாயக் குருகிரியும்,

பூவார் கழனி யெழிலாரும்

புள்ளம் பூதங் குடிதானே. 3

வல்வில் இராமன் வாழும் இடம்

1351. வெற்பால் மாரி பழுதாக்கி

விறல்வா ளரக்கர் தலைவன்றன்,

வற்பார் திரள்தோ ளைந்நான்கும்

துணித்த வல்வில் இராமனிடம்,

கற்பார் புரிசை செய்குன்றம்

கவினார் கூடம் மாளிகைகள்,

பொற்பார் மாட மெழிலாரும்

புள்ளம் பூதங் குடிதானே. 4

மாயன் மன்னும் இடம்

1352. மையார் தடங்கண் கருங்கூந்தல்

ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,

நெய்யார் பாலோ டமுதுசெய்த

நேமி யங்கை மாயனிடம்,

செய்யார் ஆரல் இரைகருதிச்

செங்கால் நாரை சென்றணையும்,

பொய்யா நாவில் மறையாளர்

புள்ளம் பூதங் குடிதானே. 5

ஏழு எருதுகளை அடக்கியவன் எழுந்தருளிய இடம்

1353. மின்ன னன்ன நுண்மருங்குல்

வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,

மன்னு சினத்த மழவிடைகள்

ஏழன் றடர்த்த மாலதிடம்,

மன்னு முதுநீ ரரவிந்த

மலர்மேல் வரிவண் டிசைபாட,

புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்

புள்ளம் பூதங் குடிதானே. 6

வாணன் தோள் துணித்தவன் வாழும் இடம்

1354. குடையா விலங்கல் கொண்டேந்தி

மாரி பழுதா நிரைகாத்து,

சடையா னோட அடல்வாணன்

தடந்தோள் துணித்த தலைவனிடம்,

குடியா வண்டு கள்ளுண்ணக்

கோல நீலம் மட்டுகுக்கும்,

புடையார் கழனி யெழிலாரும்

புள்ளம் பூதங் குடிதானே. 7

அருச்சுனனின் தேரை ஓட்டியவன் அமரும் இடம்

1355. கறையார் நெடுவேல் மறமன்னர்

வீய விசயன் தேர்கடவி,

இறையான் கையில் நிறையாத

முண்டம் நிறைத்த எந்தையிடம்,

மறையால் முத்தீ யவைவளர்க்கும்

மன்னு புகழால் வண்மையால்,

பொறையால் மிக்க அந்தணர்வாழ்

புள்ளம் பூதங் குடிதானே. 8

அருமறைகள் அருளியவன் அமரும் இடம்

1356. துன்னி மண்ணும் விண்ணாடும்

தோன்றா திருளாய் மூடியநாள்,

அன்ன மாகி யருமறைகள்

அருளிச் செய்த அமலனிடம்,

மின்னு சோதி நவமணியும்

வேயின் முத்தும் சாமரையும்,

பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும்

புள்ளம் பூதங் குடிதானே. 9

துயர்கள் விலகிவிடும்

1357. கற்றா மறித்துக் காளியன்றன்

சென்னி நடுங்க நடம்பயின்ற,

பொற்றா மரையாள் தன்கேள்வன்

புள்ளம் பூதங் குடிதன்மேல்

கற்றார் பரவும் மங்கையர்கோன்

காரார் புயற்கைக் கலிகன்றி,

சொற்றா நீரைந் திவைபாடச்

சோர நில்லா துயர்தாமே. 10

அடிவரவு: அறிவது கள்ளம் மேவா வெற்பால் மையார் மின்னின் குடை கறை துன்னி கற்றா -- தாந்தம்.





 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is ஆய்ச்சியர்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தாந்தம்
Next