செங்கமலம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

செங்கமலம்

திருவழுந்தூர்-4

திருவழுந்தூர் மேவிய ஆமருவியப்பனே தசாவதாரங்களை எடுத்த திருமால் என்று கூறி உள்ளம் உருகிப் பாடுகிறார் ஆழ்வார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாம்பணையில் பள்ளிகொண்டவனே ஆமருவியப்பன்

1618. செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்

திருவடியி னிணைவருட முனிவ ரேத்த,

வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும்

வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,

எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து

வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை

அங்கமலத் தயனைனையார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. 1

வேதப்பொருளை அருளியவன் ஆ மருவியப்பன்

1619. முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண

முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து

பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம்

பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின்,

செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம்

அவைமுரலச் செங்கமல மலரை யேறி,

அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. 2

கஜேந்திரனுக்கு அருளியவன் இவனே

1620. குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்

கோள்முதலை பிடிக்கஅதற் கனுங்கி நின்று,

'நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ!'என்ன

நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மிண்,

மலைத்திகழ்சந் தகில்கனக மணியும்,கொண்டு

வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய,

அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. 3

வராகாவதாரம் எடுத்தவன் இவனே

1621. சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம்

திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி,

இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி

எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின்,

புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க

பொழில்கடொறும் குயில்கூவ மயில்க ளால

அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. 4

நரசிம்மாவதாரம் எடுத்தவன் இவனே

1622. சினமேவும் அடலரியி னுருவ மாகித்

திறல்மேவு மிரணியன தாகம் கீண்டு,

மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி

மாளவுயிர் வவ்வியவெம் மயோன் காண்மின்,

இனமேவு வரிவளைக்கை யேந்தும் கோவை

ஏய்வாய மரதகம்போல் AOJ னின்சொல்,

அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. 5

வாமனாவதாரம் எடுத்தவன் இவனே

1623. வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி

மாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி,

தானமர வேழுலகு மளந்த வென்றித்

தனிமுதல்சக் கரப்டையென் தலைவன் காண்மின்,

தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச்

செழுமாட மாளிகைகள் கூடந் தோறும்,

ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. 6

இராமாவதாரம் எடுத்தவன் இவனே

1624. பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப்

பகலவன் e தியங்காத இலங்கை வேந்தன்,

அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ

அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின்,

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்

திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க,

அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. 7

கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் இவனே

1625. கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு

பறித்துமழ விடையடர்த்துக் குரவை கோத்து,

வம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த

தயிர்வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின்,

செம்பவள மரகதநன் முத்தம் காட்டத்

திகழ்பூகம் கதலிபல வளம்மிக் கெங்கும்,

அம்பொன்மதிள் பொழில்புடைசூழ்ந் தழகார் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. 8

சக்கரபாணி ஆமருவியப்பன்தான்

1626. ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும்

ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற,

நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி

நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின்,

சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித்

திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும்

ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. 9

இவற்றைப் பாடினால் உலகை ஆளலாம்

1627. பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப்

படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை,

அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும்

அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை,

கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன்

கலிகன்றி யலிசெய்த வின்பப் பாடல்,

ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார்

ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே. 10

அடிவரவு: செங்கமலம் முன் குலத்தலைய சிலம்பு சின வானவர் பத்து கும்பம் ஊடேறு பன்றி -- கள்ளம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திருவுக்கும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கள்ளம்மனம்
Next