கள்ளம்மனம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

கள்ளம்மனம்

திருச்சிறுபுலியூர்

திருச்சிறுபுலியூர்ப் பெருமானின் திருப்பெயர் அருள்மா கடல். தாயார் திருமாமகள் நாச்சியார். அருள்மாகடல் நாயகளைத் தொழுது உய்யுமாறு நமக்கு ஆழ்வார் ஈண்டு அறிவுரை கூறியுள்ளார்.

சந்தக் கலிவிருத்தம்

யாவரும் அருள்மாகடல் நாயகனைத் தொழுமின்

1628. கள்ளம்மனம் விள்ளும்வகை சருதிக்கழல் தொழுவீர்

வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்

தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்

துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே. 1

யார் சொல்லையும் கேளாமல் சிறுபுலியூர் சேர்க

1629. தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி

மருவி,பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர்,

திருவில்பொலி மறையோர்சிறு புலியூர்ச்சல சயனத்து,

உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே. 2

அருள்மாகடலின் அடிகளையே நான் அறிவேன்

1630. பறையும் தொழுதுய்மின் நீர் பணியும்சிறு தொண்டீர்!

அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால்

சிறைவிண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத்

துறையும்,இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே. 3

வேறு யாருக்கும் நான் அடிமையாக மாட்டேன்

1631. வானார்மதி தொதியும்சடை மழுவாளிய டொரு பால்,

தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்

தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்

தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே. 4

அருள்மாகடலே!அருள் செய்

1632. நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்

எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச்

செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து

அந்தாமரை யடியாய்!உன தடியேற்கருள் புரியே. 5

இப்பரமனைத் தொழுவார்க்குத் துயரமே வராது

1633. முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி,

கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும்,

செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம்,

தொழுநீர்மைய துடையாரடி தொழுவார் துய ரிலரே. 6

மாயனே!நீ எங்கிருக்கிறாய்?

1634. சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும்

மாயா,எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ,

தீயோம்புகை மறையோர்சிறு புலியூர்ச்சல சயனத்

தாயோ,உன தடியார்மனத் தாயோவறி யேனே. 7

புலியூர்ச் சலசயனத்தானே!அருள் செய்

1635. மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,

உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்

செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,

ஐவாய்அர வணைமேலுறை அமலா!அரு ளாயே. 8

பரமனே!உன் திருவடிகளே எங்கள் கதி

1636. கருமாமுகி லுருவா!கன லுருவா!புன லுருவா,

பெருமால்வரை யுருவா!பிற வுருவா!நின துருவா,

திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,

அருமாகட லமுதே!உன தடியேசர ணாமே. 9

பாவம் பறந்துவிடும்

1637. சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து,

ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை,

காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை,

பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே. 10

அடிவரவு:கள்ளம் தெருவில் பறை வான் நந்தா முழு சேயோங்கு மையார் கரு சீரார் -- பெரும்புறம்.















 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is செங்கமலம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பெரும்புறக்கடலை
Next