முதற் பத்து

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரியாழ்வார் திருமொழி

(பெரியாழ்வார் அருளிச்செய்தது)

முதற் பத்து

திருப்பல்லாண்டு

மக்கள் தன்னலத்தையே விரும்புகிறார்களே!பிறர் நலத்தையும் எண்ண வேண்டாவோ!தம்முடைய நன்மையை விரும்பியே பகவானிடம் செல்லுகிறார்கள்:வேண்டியவற்றைக் கேட்டுப் பெறுகிறார்கள்;பகவானுக்கு ஒரு முறைகூடப் பல்லாண்டு பாடுவதில்லை!உலகின் தன்மையை அறிந்து பெரியாழ்வாரின் திருஉள்ளம் குமுறுகிறது. 'பல்லாண்டு பாடலாம் வாருங்கள்'என்று எல்லோரையும் அழைக்கிறார். பல்லாண்டு பாடுவதே (மங்களாசாஸனம் செய்வதே) அடியார்களின் கடமை!அவர் காட்டிய வழியைத்தான் பின்பற்றுவோமே!

காப்பு

பல்லாண்டு வாழ்க

குறள் வெண்செற்துறை

1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு,
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு! 1


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2. அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு.
வடிவார் சோதிவ லத்துறை யும்கூட
ராழியும் பல்லாண்டு,
படைபோர் புக்குமு ழங்கும் அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே 2.

இராமனைப் பாடு

3. வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து
மண்ணும் மணமும்கொண் மின்,
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள்
குழுவினில் புகுதலொட்டோம்,
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள்
இராக்கதர் வாழ்இலங்கை,
பாழா ளாகப் படைபொரு தானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே. 3

நமோ நாராயணாய

4. ஏடு நிலத்தி லிடுவதன் முன்னம்வந்
தெங்கள் குழாம்புகுந்து,
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி
வந்தொல்லைக் கூடுமினோ,
நாடு நகரமும் நன்கறி யநமோ
நாராய ணாயவென்று,
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து
பல்லாண்டு கூறுமினே 4


இருடீகேசனைப் பாடு

5. அண்டக் குலத்துக் கதிபதி யாகி
அசுரரி ராக்கதரை,
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த
இருடீகே, சன் தனக்கு,
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழு
தாயிரம் நாமம்சொல்லி,
பண்டைக் குலத்தைத் தவிர்த்துப்பல் லாண்டுபல்
லாயிரத் தாண்டென் மினே. 5

நரசிம்மனைப் பாடு

6. எந்ததை தந்தை தந்தைதம் மூத்தப்பன்
ஏழ்படி கால்தொடங்கி,
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்,திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி
அரியை யழித்தவனை,
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்
தாண்டென்று பாடுதுமே. 6

ஆழிவல்லானைப் பாடு

7. தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி
திகழ்திருச் சக்கரத்தின்,
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி யாட்செய்கின்றோம்,
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
தோளும் பொழிகுருதி,
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே. 7

கருடக் கொடியானைப் பாடு

8. 'நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
அத்தாணிச் சேவகமும்,
கையடைக் காயும் கழுத்துக்குப் பூனொடு
காதுக்குக் குண்டலமும்,
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்தென்னை
வெள்ளுயி ராக்கவல்ல,
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப்
பல்லாண்டு கூறுவனே. 8

நாகணையானைப் பாடு

9. உடுத்துக் களைந்தநின் பீதக வாடை
உடுத்துக் கலந்ததுண்டு,
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன
சூடுமித் தொண்டாகளோம்,
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு
வோணத் திருவிழவில்,
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே. 9

மதுரைப்பிரானைப் பாடு

10. எந்தா ளெம்பெரு மானுன்ற னக்கடி
யோமென் றெழுத்துப்பட்ட
அந்நா ளே, அடி யோங்கள டிக்குடில்
வீடுபெற் றுய்ந்ததுகாண்,
செந்நாள் தோற்றித் திருமது ரையுட்சிலை
குனித்து, ஐந்தலைய,
பைந்தா கத்தலைப் பாய்ந்தவ னே!உன்னைப்
பல்லாண்டு கூறுதுமே. 10

பவித்திரனைப் பாடு

11. அல்வழக் கொன்றுமில் லாவணி கோட்டியர்
கோன், அபி மானதுங்கன்,
செல்வனைப் போலத் திருமா லே!நானும்
உனக்குப் பழவடியேன்.
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று
நாமம் பலபரவி,
பல்வகை யாலும் பவித்திர னே!உன்னைப்
பல்லாண்டு கூறுவனே. 11

சார்ங்கபாணியைப் பாடு

12. பல்லாண் டென்று பவித்திர னைப்பர
மேட்டியை, சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத் தூர்விட்டு
சித்தன் விரும்பியசொல்,
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ
நாராய ணாவென்று,
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந்
தேத்துவர் பல்லாண்டே. 12

(இந்த 12 பாசுரங்களையும் உருக்கமாகப் பாராயணம் செய்பவர்கள் பக்தி ச்ரத்தையுடன் பல்லாண்டு வாழ்வார்)

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

அடிவரவு:பல் அடி வாழ் ஏடு அண்டம் எந்தை b நெய் உடுத்து எந்நாள் அல்வழக்கு பல்லாண்டு - வண்ணம்.

(ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின், அண்டம் என்மின், எந்தை பாடுவது, b உடுத்தெந்நாள் கூறுதும், நெய்யுமல்லும் கூறுவனே.)


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is முதலாயிரம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வண்ண மாடங்கள்
Next