ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
இரண்டாம் பத்து
அரவணையாய்
குழந்தை கண்ணபிரானுக்கு எப்போதுமே விளையாட்டு, பசியும் தெரியவில்லை!பொழுது போவதும் தெரியவில்லை! விளையாடினான். உறங்கிவிட்டான். தாயிடம் பால் குடிப்பதையும் மறந்தான். அறியாமையினால் உறங்குவோரை எழுப்பும் பகவானுக்கும் உறக்கம்!குழந்தை பட்டினியாக உறங்கினால் தாய் எப்படித் தரித்திருப்பாள்? யசோதை கண்ணனைப் பால் குடிக்க எழுப்புகிறாள். ஆழ்வார் யசோதையாகவே இருந்து கண்ணனை அழைக்கிறார்.
கண்ணனை முலையுண்ண அழைத்தல்
கலி விருத்தம்
அரவணையான் ஆயரேறு
128. அரவணையாய்!ஆயரேறே!
அம்மமுண்ணத் துயிலெழாயே,
இரவுமுண்ணா துறங்கிநீபோய்
இன் றுமுச்சி கொண்டதாலோ,
வரவுங்காணேன் வயிறசைந்தாய்
வனமுலைகள் சோர்ந்துபாய,
திருவுடைய வாய்மடுத்துத்
திளைத்துதைத்துப் பருகிடாயே. 1
முத்தனைய புன்முறுவல்
129. வைத்தநெய்யும் காய்ந்தபாலும்
வடிதயிரும் நறுவெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன்
எம்பிரான்!நீ பிறந்தபின்னை,
எத்தனையும் செய்யப்பெற்றாய்
ஏதும்செய்யேன் கதம்படாதே,
முத்தனைய முறுவல்செய்து
மூக்குறிஞ்சி முலையுணாயே. 2
வாழவைக்கும் வாசுதேவன்
130. தந்தம்மக்க ளழுதுசென்றால்
தாய்மாராவார் தரிக்கில்லார்,
வந்துநின்மேல் பூசல்செய்ய
வாழவல்ல வாசுதேவா!
உந்தையாருன் திறத்தரல்லர்
உன்னைநானொன் றுரப்பமாட்டேன்,
நந்தகோப னணிசிறுவா!
நான்சுரந்த முலையுணாயே. 3
அமரர்கோமான் கண்ணன்
131. கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட
கள்ளச்சகடு கலக்கழிய,
பஞ்சியன்ன மெல்லடியால்
பாய்ந்தபோது நொந்திடுமென்று,
அஞ்சினேன் கா ணமரர்கோவே!
ஆயர்கூட்டத் தளவன்றாலோ,
கஞ்சனையுன் வஞ்சனையால்
வலைப்படுத்தாய்!முலையுணாயே. 4
ஆயர்பாடி அணிவிளக்கு
132. தீயபுந்திக் கஞ்சனுன்மேல்
சினமுடையன் சோர்வுபார்த்து,
மாயந்தன்னால் வலைப்படுகில்
வாழகில்லேன் வாசுதேவா,
தாயர்வாய்ச்சொல் கருமங்கண்டாய்
சாற்றிச் சொன்னேன் போகவேண்டா,
ஆயர்பாடிக் கணிவிளக்கே!
அமர்ந்துவந்தென் முலையுணாயே. 5
யான்நோற்ற நோன்பின் பயன்
133. மின்னனைய நுண்ணிடையார்
விரிகுழல்மேல் நுழைந்தவண்டு,
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
இனிதமர்ந்தாய்!உன்னைக்கண்டார்,
என்னநோன்பு நோற்றாள்கொலோ
இவனைப்பெற்ற வயிறுடையாள்,
என்னும்வார்த்தை யெய்துவித்த
இருடீகேசா!முலையுணாயே. 6
நின் பவளவாயின் இன்னமுதம்
134. பெண்டிர்வாழ்வார் நின்னொப்பாரைப்
பெறுதுமென்னு மாசையாலே,
கண்டவர்கள் போக்கொழிந்தார்
கண்ணிணையால் கலக்கநோக்கி,
வண்டுலாம்பூங் குழலினாருன்
வாயமுத முண்ணவேண்டி,
கொண்டுபோவான் வந்துநின்றார்
கோவிந்தா!நீ முலையுணாயே. 7
மல்லர் இருவரை அழித்தவன்
135. இருமலைபோ லெதிர்ந்தமல்லர்
இருவரங்க மெரிசெய்தாய்,உன்
திருமலிந்து திகழுமார்வு
தேக்கவந்தென் னல்குலேறி,
ஒருமுலையை வாய்மடுத்
தொருமுலையை நெருடிக்கொண்டு,
இருமுலையும் முறைமுறையா
ஏங்கியேங்கி யிருந்துணாயே. 8
அமரர்க்கு அமுதளித்தவன்
136. அங்கமலப் போதகத்தில்
அணிகொள்முத்தம் சிந்தினாற்போல்,
செங்கமல முகம்வியர்ப்பத்
தீமைசெய்திம் முற்றத்தூடே,
அங்கமெல்லாம் புழுதியாக
அளையவேண்டா அம்ம!விம்ம
அங்மரக் கமுதளித்த
அமரர்கோவே!முலையுணாயே. 9
கூத்தாடும் உத்தமன்
137. ஓடவோடக் கிண்கிணிகள்
ஒலிக்குமோசைப் பாணியாலே,
பாடிப்பாடி வருகின்றாயைப்
பற்பநாப னென் றிருந்தேன்,
ஆடியாடி யசைந்தசைந்திட்
டதனுகேற்ற கூத்தையாடி,
ஓடியோடிப் போய்விடாதே
உத்தமா c முலையுணாயே. 10
செங்கண்மால் சிந்தை பெறுவர்
138. வாரணிந்த கொங்கையாய்ச்சி
மாதவாஉண் ணென்றமாற்றம்
நீரணிந்த குவளைவாசம்
நிகழநாறும் வில்லிபுத்தூர்,
பாரணிந்த தொல்புகழான்
பட்டர்பிரான் பாடல்வல்லார்,
சீரணிந்த செங்கண்மால்மேல்
சென்றசிந்தை பெறுவர் தாமே. 11
அடிவரவு:அரவணையாய் வைத்த தந்தம் கஞ்சன் தீய மின் பெண்டிர் இருமலை அங்கமலம் ஓட வாரணிந்த - போய்ப்பாடு.