போய்ப்பாடு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

இரண்டாம் பத்து

போய்ப்பாடு

'கண்ணா! இன்று உனக்குக் காதணி விழா!காது குத்திக் கொள்ளவேண்டும்!அழகான காதணிகளை அணியவேண்டும், ஓடிவா!'என்று அழைக்கிறாள் அசோதை. 'காது நோகும்'என்று கண்ணன் பயப்படுகிறான். 'வர மாட்டேன்'என்று ஓடுகிறான். அசோதை சில ஆசை வார்த்தைகளைக் கூறி அவனை வசப்படுத்துகிறாள். 'எல்லோரும் வந்துவிட்டார்கள். வெற்றிலை பாக்குப் பழமெல்லாம் வைத்திருக்கிறேன் பார்'என்று அழைக்கிறாள். ஆழ்வாரும் அப்படியே அநுபவித்து மகிழ்கிறார்.

பன்னிரு நாமங்கள் : காது குத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கேசவ நம்பி கண்ணன்

139. போய்ப்பா டுடையநின் தந்தையும் தாழ்த்தான்

பொருதிறல் கஞ்சன் கடியன்,

காப்பாரு மில்லை கடல்வண்ணா!உன்னைத்

தனியேபோ யெங்கும் FKF,

பேய்ப்பால் முலையுண்ட பித்தனே!கேசவ

நம்பீ!உன் னைக்காது குத்த,

ஆய்ப்பாலர் பெண்டுக ளெல்லாரும் வந்தார்

அடைக்காய் திருத்திநான் வைத்தேன். 1

சிந்தை பிரியாத நாராயணன்

140. வண்ணப் பவள மருங்கினிற் சாத்தி

மலர்ப்பாதக் கிண்கிணி யார்ப்ப,

நண்ணித் தொழுவார் சிந்தை பிரியாத

நாராய ணா!இங்கே வாராய்,

எண்ணற் கரிய பிரானே!திரியை

எரியாமே காதுக் கிடுவன்,

கண்ணுக்கு நன்று மழகு முடைய

கனகக் கடிப்பு மிவையா. 2

ஆய்ச்சியர் உள்ளத்து உறையும் மாதவன்

141. வையமெல் லாம்பெறும் வார்கடல் வாழும்

மகரக் குழைகொண்டு வைத்தேன்,

வெய்யவே காதில் திரியை யிடுவன் c

வேண்டிய தெல்லாம் தருவன்,

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய

ஒண்சுட ராயர்கொ ழுந்தே,

மையன்மை செய்திள வாய்ச்சிய ருள்ளத்து

மாதவ னே!இங்கே வாராய். 3

சோத்தம்பிரான் கோவிந்தன்

142. வணநன் றுடைய வயிரக் கடிப்பிட்டு

வார்காது தாழப் பெருக்கி,

குணநன் றுடையர்இக் கோபால பிள்ளைகள்

கோவிந்தா!நீசொல்லுக் கொள்ளாய்,

இணைநன் றழகிய இக்கடிப் பிட்டால்

இனிய பலாப்பழம் தந்து,

சுணநன் றணிமுலை யுண்ணத் தருவன்நான்

சோத்தம் பிரானிங்கே!வாராய். 4

கருங்குழல்விட்டு (விஷ்ணு)

143. சோத்தம் பிரானென் றிரந்தாலும் கொள்ளாய்

சுரிகுழ லாரொடு நீபோய்,

கோத்துக் குரவை பிணைந்திங்கு வந்தால்

குணங்கொண் டிடுவனோ நம்பீ,

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்

பிரானே!திரியிட வொட்டில்,

வேய்த்தடந் தோளர் விரும்பு கருங்குழல்

விட்டுவே!நீயிங்கே வாராய். 5

கடல்வண்ணன் மதுசூதன்

144. விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டா யுன்வாயில்

விரும்பி யதனைநான் நோக்கி,

மண்ணெல்லாம் கண்டென் மனத்துள்ளே யஞ்சி

மதுசூத னேஎன்றி ருந்தேன்,

புண்ணேது மில்லைஉன் காது மறியும்

பொறுத்திறைப் போதிரு நம்பீ,

கண்ணாஎன் கார்முகி லேகடல் வண்ணா

காவல னே!முலை யுணாயே. 6


ஆயர்பாடிப்பிரான் திரிவிக்கிரமன்

145. முலையேதும் வேண்டேனென் றோடிநின் காதில்

கடிப்பைப் பறித்தெறிந் திட்டு,

மலையை யெடுத்து மகிழ்ந்துகல் மாரி

காத்துப் பசுநிரை மேய்த்தாய்,

சிலையன் றிறுத்தாய் திரிவிக் கிரமா!

திருவாயர் பாடிப் பிரானே,

தலைநிலாப் போதேஉன் காதைப் பெருக்காதே

விட்டிட்டேன் குற்றமே யன்றே?. 7

கருடக்கொடியோன் வாமனன்

146. என்குற்ற மேயென்று சொல்லவும் வேண்டா காண்

என்னைநான் மண்ணுண்டே னாக,

அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்

அனைவர்க்கும் காட்டிற் றிலையே,

வன்புற் றரவின் பகைக்கொடி வாமன

நம்பீ!உன் காதுகள் தூரும்,

துன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே!

திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே. 8

முறுவலிடும் சிரீதரன்

147. மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித்

தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று,

கையைப் பிடித்துக் கரையுர லோடென்னைக்

காணவே கட்டிற் றிலையே,

செய்தன சொல்லிச் சிரித்தங் கிருக்கில்

சிரீதரா!உன்காது தூரும்,

கையில் திரியை யிடுகிடா யிந்நின்ற

காரிகை யார்சிரி யாமே. 9

கன்றெறிந்த இருடீகேசன்

148. காரிகை யார்க்கு முனக்கு மிழுக்குற்றென்

காதுகள் வீங்கி யெரியில்,

தாரியா தாகில் தலைநொந்தி டுமென்று

விட்டிட்டேன் குற்றமே யன்றே,

சேரியில் பிள்ளைக ளெல்லாரும் காது

பெருக்கித் திரியவும் காண்டி,

ஏர்விடை செற்றிளங் கன்றெறிந் திட்ட

இருடீகே சா!என்றன் கண்ணே!. 10

சகடமுதைத்த பத்மநாபன்

149. கண்ணைக் குளிரக் கலந்தெங்கும் நோக்கிக்

கடிகமழ் பூங்குழ லார்கள்,

எண்ணத்து ளென்று மிருந்துதித் திக்கும்

பெருமானே!எங்க ளமுதே!

உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும்

நோவாமே காதுக் கிடுவன்,

பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட

பற்பநா பா!இங்கே வாராய். 11

வஞ்சமகள் சாவப் பாலுண்ட தாமோதரன்

150. வாவென்று சொல்லியென் கையைப் பிடித்து

வலியவே காதில் கடிப்பை,

நோவத் திரிக்கி லுனக்கிங் கிழுக்குற்றென்

காதுகள் நொந்திடும் கில்லேன்,

நாவற் பழங்கொண்டு வைத்தேன் இவைகாணாய்

நம்பீ!முன் வஞ்ச மகளை,

சாவப்பா லுண்டு சகடிறப் பாய்ந்திட்ட

தாமோத ரா!இங்கே வாராய். 12

துவாதச நாமங்களின் பயன்

151. வார்காது தாழப் பெருக்கி யமைத்து

மகரக் குழையிட வேண்டி,

சீரா லசோதை திருமாலைச் சொன்னசொல்

சிந்தையுள் நின்று திகழ,

பாரார் தொல்புக ழான்புது வைமன்னன்

பன்னிரு நாமத்தாற் சொன்ன,

ஆராத அந்தாதி பன்னிரண் டும்வல்லார்

அச்சுத னுக்கடி யாரே. 13

(நமது இல்லங்களில் குழந்தைகளுக்குக் காது குத்தும் விழா நடக்கும்போது, பன்னிரு நாமங்களை இட்டழைக்கும் இப்பாடல்களைப் பாடுவதும், குழந்தை காது கொண்டு கேட்பதும் மிகச் சிறந்ததாகும்.)

அடிவரவு:போய்ப்பாடு வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என்குற்றம் மெய் காரிகையார்க்கும் கண்ணை வா வார்க்காது- வெண்ணெயளைந்த.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is அரவணையாய்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வெண்ணெயளைந்த
Next