வெண்ணெயளைந்த

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

இரண்டாம் பத்து

வெண்ணெயளைந்த

அழகன் கண்ணனை நீராட்ட எண்ணினாள் அசோதை. திருமஞ்சனத்திற்காக (நீராட்ட) கொண்டு சேர்த்தாள். இலவங்கம் ஏலக்காய் முதலிய வாசனைப் பொருள்களை அதில் சேர்த்தாள். ஆனால் கண்ணன் வரவில்லை, ஓடுகிறான். புல்லைக் காட்டிப் பசுவை இழுப்பதுபோல் தாய் நல்ல வார்த்தைகளைக் கூறுகிறாள். பின்னால் ஓடுகிறாள். அவனும் ஓடுகிறான். 'நாரணா ஓடாதே வாராய்'என்று அன்போடு அழைக்கிறாள்.

நீராட்டம்

(கண்ணனை நீராட அழைத்தல்)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஸ்நானாஸனம்

152. வெண்ணெ யளைந்த குணுங்கும்

விளையாடு புழுதியும் கொண்டு,

திண்ணென இவ்விரா வுன்னைத்

தேய்த்துக் கிடக்கநா னொட்டேன்,

எண்ணெய் புளிப்பழங் கொண்டிங்

கெத்தனை போதுமி ருந்தேன்,

நண்ண லரிய பிரானே!

நாரணா!நீராட வாராய்!. 1

திருவோண நன்னாள்

153. கன்றுக ளோடச் செவியில்

கட்டெறு ¢,ம புபிடித் திட்டால்,

தென்றிக் கெடுமாகில் வெண்ணெய்

திரட்டி விழுங்குமா காண்பன்,

நின்ற மராமரம் சாய்த்தாய்!

நீபிறந் ததிரு வோணம்

இன்று,நீ நீராட வேண்டும்

எம்பிரான்!ஓடாதே வாராய். 2

திருமஞ்சனநீர்

154. பெய்ச்சி முலையுண்ணக் கண்டு

பின்னையும் நில்லாதென் னெஞ்சம்,

ஆய்ச்சிய ரெல்லாருங் கூடி

அழைக்கவும் நான்முலை தந்தேன்,

காய்ச்சின நீரொடு நெல்லி

கடாரத்தில் பூரித்து வைத்தேன்,

வாய்த்த புகழ்மணி வண்ணா!

மஞ்சன மாடநீ வாராய். 3

அலங்காராஸனம்

155. கஞ்சன் புணர்ப்பினில் வந்த

கடிய சகட முதைத்து,

வஞ்சகப் பேய்மகள் துஞ்ச

வாய்முலை வைத்த பிரானே,

மஞ்சளும் செங்கழு நீரின்

வாசிகை யும்நாறு சாந்தும்,

அஞ்சன மும்கொண்டு வைத்தேன்

அழகனே!நீராட வாராய். 4

போஜ்யாஸனம்

156. அப்பம் கலந்த சிற்றுண்டி

அக்காரம் பாலில் கலந்து,

சொப்பட நான்சுட்டு வைத்தேன்

தின்ன லுறுதியேல் நம்பி!

செப்பிள மென்முலை யார்கள்

சிறுபுறம் பேசிச் சிரிப்பர்,

சொப்பட நீராட வேண்டும்

சோத்தம் பிரான்!இங்கே வாராய். 5


பழங்கள் ஸமர்ப்பித்தல்

157. எண்ணெய்க் குட்த்தை யுருட்டி

இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பிக்

கண்ணைப் புரட்டி விழித்துக்

கழகண்டு செய்யும் பிரானே!

உண்ணைக் கனிகள் தருவன்

ஒலிகட லோ தநீர் போலே,

வண்ண மழகிய நம்பீ!

மஞ்சன் மாடநீ வாராய். 6

குறை கூறமாட்டேன்

158. கறந்தநற் பாலும் தயிரும்

கடைந்துறி மேல்வைத்த வெண்ணெய்,

பிறந்தது வேமுத லாகப்

பெற்றறி யேனெம்பி ரானே,

சிறந்தநற் றாயலர் தூற்றும்

என்பத னால்பிறர் முன்னே,

மறந்து முரையாட மாட்டேன்

மஞ்சன மாடநீ வாராய். 7

பிறந்த திருநன்னாள்

159. கன்றினை வாலோலை கட்டிக்

கனிக ளுதிர எறிந்து,

பின்தொடர்ந் தோடியோர் பாம்பைப்

பிடித்துக்கொண் டாட்டினாய் போலும்,

நின்திறத் தேனல்லேன் நம்பீ!

நீபிறந் ததிரு நன்னாள்,

நன்றுநீ நீராட வேண்டும்

நாரணா!ஓடாதே வாராய். 8

நப்பின்னை சிரிப்பாளே

160. பூணித் தொழுவினில் புக்குப்

புழுதி யளைந்தபொன் மேனி,

காணப் பெரிது முகப்பன்

ஆகிலும் கண்டார் பழிப்பர்,

நாணெத் தனியுமி லாதாய்!

நப்பின்னை காணில் சிரிக்கும்,

மாணிக்க மே!என் மணியே!

மஞ்சன மாடநீ வாராய். 9

கார்மேனிக் கண்ணபிரான்

161. கார்மலி மேனி நிறத்துக்

கண்ண பிரானை யுகந்து,

வார்மலி கொங்கை யசோதை

மஞ்சன மாட்டிய வாற்றை,

பார்மலி தொல்புது வைக்கோன்

பட்டர் பிரான்சொன்ன பாடல்

சீர்மலி செந்தமிழ் வல்லார்

தீவினை யாது மிலரே. 10

அடிவரவு:வெண்ணெய் கன்றுகள் பேய்ச்சி கஞ்சன் அப்பம் எண்ணெய் கறந்த கன்றினை பூணி கார்மலி- பின்னை.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is போய்ப்பாடு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பின்னை மணாளனை
Next