ஆனிரை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

இரண்டாம் பத்து

ஆனிரை

பகவானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய எட்டு வகையான மலர்கள் கூறப்படுகின்றன. இம்மலர்களை அணிந்து அருள வேண்டும் என்று அழைக்கிறாள் யசோதை!பக்தியோடு மலர் ஸமர்ப்பித்தால், எல்லோரும் மணம் (புகழ்) பெற்று வாழ்வர்.

கண்ணனைப் பூச்சூட அழைத்தல்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆனிரை மேய்க்கும் பிரானுக்குச் சண்பகப் பூ

182. ஆனிரை மேய்க்கநீ போதி

அருமருந் தாவ தறியாய்,

கானக மெல்லாம் திரிந்துன்

கரிய திருமேனி வாட,

பானையிற் பாலைப் பருகிப்

பற்றாதா ரெல்லாம் சிரிப்ப,

தேனி லினிய பிரானே!

செண்பகப் பூச்சூட வாராய். 1

அழகிய மணவாளனுக்கு மல்லிகைப் பூ

183. கருவுடை மேகங்கள் கண்டால்

உன்னைக்கண் டாலொக்கும் கண்கள்,

உருவுடை யாய்!உல கேழும்

உண்டாக வந்து பிறந்தாய்,

திருவுடை யாள்மண வாளா!

திருவரங் கத்தே கிடந்தாய்,

மருவி மணம்கமழ் கின்ற

மல்லிகைப் பூச்சூட்ட வாராய். 2

திருவேங்கடத்தானுக்கு பாதிரிப் பூ

184. மச்சொடு மாளிகை யேறி

மாதர்கள் தம்மிடம் புக்கு,

கச்சொடு பட்டைக் கிழித்துக்

காம்பு துகிலவை WP,

நிச்சலும் தீமைகள் செய்வாய்

நீள்திரு வேங்கடத் தெந்தாய்,

பச்சைத் தமனகத் தொடு

பாதிரிப் பூச்சூட்ட வாராய். 3

அழகிய நம்பிக்கு மருவும் தமனகமும்

185. தெருவின்கண் நின்றிள வாய்ச்சி

மார்களைத் தீமைசெய் யாதே,

மருவும் தமனக மும்சீர்

மாலை மணம்கமழ் கின்ற,

புருவம் கருங்குழல் நெற்றி

பொலிந்த முகிற்கன்று போலே,

உருவ மழகிய நம்பீ!

உகந்திவை சூட்டநீ வாராய். 4

கரியின் கொம்பை ஒடித்தவனுக்குச் செங்கழுநீர்

186. புள்ளினை வாய்பிளந் திட்டாய்

பொருகரி யின்கொம் பொசித்தாய்,

கள்ள வரக்கியை மூக்கொடு

காவல னைத்தலை கொண்டாய்,

அள்ளிநீ வெண்ணெய் விழுங்க

அஞ்சா தடியே னடித்தேன்,

தெள்ளிய cK லெழுந்த

செங்கழு நீர்சூட்ட வாராய். 5

மல்லர்களை அழித்தவனுக்குப் புன்னைப் பூ

187. எருதுக ளோடு பொருதி

யேதுமு லோபாய்காண் நம்பீ,

கருதிய தீமைகள் செய்து

கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்,

தெருவின்கண் தீமைகள் செய்து

சிக்கென மல்லர்க ளோடு,

பொருது வருகின்ற பொன்னே!

புன்னைப்பூச் சூட்டிட வாராய். 6


திருக்குடந்தை ஆராவமுதுக்குக் குருக்கத்திப் பூ

188. குடங்க ளெடுத்தேற விட்டுக்

கூத்தாட வல்லவெங் கோவே,

மடங்கொள் மதிமுகத் தாரை

மால்செய்ய வல்லவென் மைந்தாய்,

இடந்திட் டிரணியன் நெஞ்சை

இருபிள வாகமுன் கீண்டாய்,

குடந்தைக் கிடந்தவெங் கோவே!

குருக்கத்திப் பூச்சூட்ட வாராய். 7

அணியரங்கனுக்கு இருவாட்சிப் பூ

189. சீமா விகனவ னோடு

தோழமை கொள்ளவும் வல்லாய்,

சாமா றவனைநீ யெண்ணிச்

சக்காத் தால்தலை கொண்டாய்,

ஆமா றறியும் பிரானே!

அணியரங் கத்தே கிடந்தாய்,

ஏமாற்ற மென்னைத் தவிர்த்தாய்

இருவாட்சிப் பூச்சூட்ட வாராய். 8

வடபத்ரசாயிக்குக் கருமுகைப் பூ

190. அண்டத் தமரர்கள் சூழ

அத்தாணி யுள்ளங்கி ருந்தாய்,

தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய்

தூமல ராள்மண வாளா,

உண்டிட் டுலகினை யேழும்

ஓரா லிலையில்துயில் கொண்டாய்,

கண்டுநா னுன்னை யுகக்கக்

கருமுகைப் பூச்சூட்ட வாராய். 9

அசோதையின் மகிழுரை

191 செண்பக மல்லிகை யோடு

செங்கழு நீரிரு வாட்சி,

எண்பகர் பூவும் கொணர்ந்தேன்

இன்றிவை சூட்டவா வென்று,

மண்பகர் கொண்டானை யாய்ச்சி

மகிழ்ந்துரை செய்தவிம் மாலை,

பண்பகர் வில்லிபுத் தூர்கோன்

பட்டர் பிரான்சொன்ன பத்தே. 10

(குழந்தைகளுக்குத் தலையில் பூச்சூட்டும்போதும், பெண்கள் மலரை அணிந்துகொள்ளும்போதும், பூச்சூடல் மகூர்த்த காலத்திலும் இத்திருமொழியை ஸேவித்தால் பகவானின் திருவருளைப் பெறலாம்.

அடிவரவு:ஆனிரை கரு மச்சொடு தெருவின்கண் புள்ளினை எருதுகளோடு குடங்கள் சீமாலிகன் அண்டத்து செண்பகம்- இந்திரன்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வேலிக்கோல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  இந்திரனோடு
Next