இந்திரனோடு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

இரண்டாம் பத்து

இந்திரனோடு

எல்லோருடைய பார்வையும் நன்மை தரவல்லது என்று எண்ணுவதற்கில்லை. சிலர் பார்வ்வை தீமையும் தரும். திருஷ்டி தோஷத்தைக் கண்ணெச்சில் என்று கூறுவார்கள். அந்தி (மாலை) வேளையில் இளங்குழந்தையைத் தெருவிலும் சந்து பொந்துகளிலும் இருக்க விடலாகாது. "கண்ணா!அந்திப்போது!நாற்சந்திகளில் நில்லாதே வா!"என்று அழைத்துக் காப்பு இடுகிறாள் யசோதை. காப்பு:ரஷை. ஸ்ரீதேவிக்கு உகந்த இடம் திருவெள்ளறை. அங்கிருக்கும் பெருமானையே ஆழ்வார் இத்திரு மொழியில் கண்ணனாக அனுபவிக்கிறார்.

காப்பிடல்

( திருஷ்டி தோஷம் வராதபடி திருவந்திக்காப்பிடக் கண்ணனை அழைத்தல்)

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருவெள்ளறை அழகன்

192. இந்திர னோடு பிரமன்

ஈச னிமையவ ரெல்லாம்,

மந்திர மாமலர் கொண்டு

மறைந்துவ ராய்வந்து நின்றார்,

சந்திரன் மாளிகை சேரும்

சதுரர்கள் வெள்ளறை நின்றாய்,

அந்தியம் போதிது வாகும்

அழகனே!காப்பிட வாராய். 1

திருவெள்ளறை நின்றவனுக்கு அந்திக் காப்பு

193. கன்றுக ளில்லம் புகுந்து

கதறுகின் றபசு வெல்லாம்,

நின்றொழிந் தேனுன்னைக் கூவி

நேசமே லொன்றுமி லாதாய்,

மன் றில்நில் லேலந்திப் போது

மதில்திரு வெள்ளறை நின்றாய்,

நன்றுகண் டாயென்றன் சொல்லு

நானுன்னைக் காப்பிட வாராய். 2

திருவெள்ளறை எம்பிரான்

194. செப்போது மென்முலை யார்கள்

சிறுசோறு மில்லும் சிதைத்திட்டு,

அப்போது நானுரப் பப்போய்

அடிசிலு முண்டிலை யாள்வாய்,

முப்போதும் வானவ ரேத்தும்

முனிவர்கள் வெள்ளறை நின்றாய்,

இப்போது நானொன்றும் செய்யேன்

எம்பிரான்!காப்பிட வாராய். 3

திருவெள்ளறையான் கண்ணன்

195. கண்ணில் மணற்கொடு தூவிக்

காலினால் பாய்ந்தனை யென்றென்று

எண்ணரும் பிள்ளைகள் வந்திட்

டிவரால் முறைப்படு கின்றார்,

கண்ணனே!வெள்ளறை நின்றாய்!

கண்டாரோ டேதீமை செய்வாய்,

வண்ணமே வேலைய தொப்பாய்!

வள்ளலே!காப்பிட வாராய். 4

திருவெள்ளறை ஞானச்சுடர்

196. பல்லாயி ரவரிவ் வூரில்

பிள்ளைகள் தீமைகள் செய்வார்,

எல்லாமுன் மேலன்றிப் போகா

தெம்பிரான் நீயிங்கே வாராய்,

நல்லார்கள் வெள்ளறை நின்றாய்,

ஞானச்சு டரே!உன் மேனி,

சொல்லார வாழ்த்திநின் றேத்திச்

சொப்படக் காப்பிட வாராய். 5

மஞ்சுதவழ் மணிமாட வெள்ளறை நின்றவன்

197. கஞ்சன்க றுக்கொண்டு நின்மேல்

கருநிறச் செம்மயிர்ப் பேயை,

வஞ்சிப்ப தற்கு விடுத்தான்

என்பதோர் வார்த்தையு முண்டு,

மஞ்சு தவழ்மணி மாட

மதில்திரு வெள்ளறை நின்றாய்,

அஞ்சுவன் நீயங்கு நிற்க

அழகனே!காப்பிட வாராய். 6

ஒளியுடை வெள்ளறை நின்றவன்

198. கள்ளச் சகடும் மருதும்

கலக்கழி யவுதை செய்த,

பிள்ளை யரசே!நீ பேயைப்

பிடித்து முலையுண்ட பின்னை,

உள்ளவா றொன்று மறியேன்!

ஒளியுடை வெள்ளறை நின்றாய்,

பள்ளிகொள் போதிது வாகும்

பரமனே காப்பிட வாராய். 7

திருவெள்ளறை செல்வப்பிள்ளை

199. இன்ப மதனை யுயர்த்தாய்!

இமையவர்க் கென்று மரியாய்,

கும்பக் களிறட்ட கோவே!

கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!

செம்பொன் மதில்வெள் ளறையாய்!

செல்வத்தி னால்வளர் பிள்ளாய்,

கம்பக் கபாலிகா ணங்குக்

கடிதோடிக் காப்பிட வாராய். 8

அந்திப் போதினில் விளக்கேற்றுவேன், வா

200. இருக்கொடு நீர்ச்சங்கிற் கொண்டிட்

டெழில்மறை யோர்வந்து நின்றார்,

தருக்கேல்நம் பி!சந்தி நின்று

தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்,

திருக்காப்பு நானுன்னைச் சாத்தத்

தேகடை வெள்ளறை நின்றாய்,

உருக்காட்டு மந்தி விளக்கின்

றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய். 9

வினை போகும்

201. போதமர் செல்வக் கொழுந்து

புணர்திரு வெள்ளறை யானை,

மாதர்க்கு யர்ந்த அசோதை

மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்,

வேதப் பயன்கொள்ள வல்ல

விட்டுசித் தன்சொன்ன மாலை,

பாதப் பயன்கொள்ள வல்ல

பத்தருள் ளார்வினை போமே. 10.

(திருஷ்டி தோஷம் ஏற்படாதிருக்க ரஷை கட்டுதல், சில பொருள்களைச்

சுற்றிச் சுற்றிப் போடுதல் முதலியவற்றை நம் நாட்டில் வழக்கத்தில் இருக்கின்றன.

பெருமாள் திருவீதிகளில் புறப்பாடு கண்டருளியதும், கோவில் வாசலில் திருஷ்டி தோஷம் படாமலிருக்கக் காப்பு செய்வதைக் காணலாம். கருப்பூர ஆரத்தி, புதிய வஸ்திரம் கிழித்துச் சுற்றிப் போடுதல் முதலியன செய்வதைப் பார்க்கிறோம்.)

அடிவரவு:இந்திரனோடு கன்றுகள் செப்பு கண்ணில் பல்லாயிரவர் கஞ்சன் கள்ளம் இன்பமதனை இருக்கொடு போதமர்-வெண்ணெய்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is ஆனிரை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வெண்ணெய் விழுங்கி
Next