ஆற்றிலிருந்து

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

இரண்டாம் பத்து

ஆற்றிலிருந்து

கண்ணனுடைய திருவிளையாடல்களினால் துன்புற்றார்கள் சில பெண்கள். யசோதையிடம் வந்து தாம் அடைந்த துன்பங்களை முறையிடுகிறார்கள். அன்பைக் காட்டியதற்கேற்றவாறு பரி மாற்றம் செய்யாத குறைகளை எடுத்துக் கூறுகிறார்கள்.

அயலகத்தார் முறையீடு

கலித்தாழிசை

காற்றிற் கடியன்

213. ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை,

சேற்றா லெறிந்து வளைதுகில் கைக்கொண்டு,

காற்றிற் கடியனாய் ஓடி யகம்புக்கு,

மாற்றமும் தாரானா லின்று முற்றும்,

வளைத்திறம் பேசானா லின்று முற்றும். 1

எண்டிசையோரால் இறைஞ்சப்படும் இறைவன்

214. குண்டலம் தாழக் குழல்தாழ நாண்தாழ,

எண்டிசை யோரு மிறைஞ்சித் தொழுதேத்த,

வண்டமர் பூங்குழ லார்துகில் கைக்கொண்டு,

விண்தோய் மரத்தானா லின்று முற்றும்,

வேண்டவும் தாரானா லின்று முற்றும். 2

காளியன்மீது நடமாடியவன்

215. தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி,

விடம்படு நாகத்தை வால்பற்றி யீர்த்து,

படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு,

உடம்பை அசைத்தானா லின்று முற்றும்,

உச்சியில் நின்றானா லின்று முற்றும். 3

மழை தடுத்து ஆனிரை காத்தவன்

216. தேனுக னாவி செகுத்து, பனங்கனி

தானெறிந் திட்ட தடம்பெருந் தோளினால்,

வானவர் கோன்விட வந்த மழைதடுத்து,

ஆனிரை காத்தான லின்று முற்றும்,

அவைஉய்யக் கொண்டானா லின்று முற்றும். 4

ஆய்ச்சியர் பிடியில் சிக்கியவன்

217. ஆய்ச்சியர் சேரி அளைதயிர் பாலுண்டு,

பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு,

வேய்த்தடந் தோளினார் வெண்ணெய்கொள் மாட்டாது, அங்கு

ஆப்புண் டிருந்தானா லின்று முற்றும்,

அடியுண் டழுதானா லின்று முற்றும். 5

தளர்நடையிட்ட இளம்பிள்ளை

218. தள்ளித் தளர்நடை யிட்டிளம் பிள்ளையாய்,

உள்ளத்தி னுள்ளே அவளை யுறநோக்கி,

கள்ளத்தி னால்வந்த பேய்ச்சி முலையுயிர்,

துள்ளச் சுவைத்தானா லின்று முற்றும்,

துவக்கற உண்டானா லின்று முற்றும். 6

மாணுருவாய வாமனன்

219. மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச்சென்று,

மூவடி தாவென் றிரந்தஇம் மண்ணினை,

ஓரடி யிட்ரண் டாமடி தன்னிலே

தாவடி யிட்டானா லின்று முற்றும்,

தரணி யளந்தானா லின்று முற்றும். 7

வேழம் துயர்கெடுத்த பெருமான்

220. தாழைதண் ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய்,

வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்,

வேழம் துயர்கெட விண்ணோர் பெருமானாய்,

ஆழிபணி கொண்டானா லின்று முற்றும்,

அதற்கருள் செய்தானா லின்று முற்றும். 8

வராகத்தின் உருவாகிய பெருமான்

221. வானத் தெழுந்த மழைமுகில் போல்,எங்கும்

கானத்து மேய்ந்து களித்து விளையாடி,

ஏனத் துருவா யிடந்தஇம் மண்ணினை,

தானத்தே வைத்தானா லின்று முற்றும்,

தரணி யிடந்தானா லின்று முற்றும். 9

துன்பமே இல்லை

222. அங்கம லக்கண்ணன் தன்னை அசோதைக்கு,

மங்கைநல் லார்கள்தாம் வந்து முறைப்பட்ட,

அங்கவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன்சொல்,

இங்கிவை வல்லவர்க் கேதமொன் றில்லையே. 10

அடிவரவு:ஆற்றில் குண்டலம் தடம் தேனுகன் ஆய்ச்சியர் தள்ளி மாவளி தாழை வானத்து அங்கமலம்-தன்னேராயிரம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வெண்ணெய் விழுங்கி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தன்னேராயிரம்
Next