வெண்ணெய் விழுங்கி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

இரண்டாம் பத்து

வெண்ணெய் விழுங்கி

கண்ணனின் தீம்புகளும் விளையாட்டுகளும் தனிப்பட்டவை. சுவை மிக்கவை!குழந்தை கண்ணனை அருகில் படுக்கவைத்து உறங்கச் செய்கிறாள். உறங்கி விட்டான் என்று நினைத்து எழுந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கச் செல்கிறாள் அசோதை. கண்ணனும் எழுந்தான். பல வீடுகளுக்குச் செல்லுகிறான். வெண்ணெயைக் களவு செய்கிறான். பாலைக் காய்ச்சிக் குடிக்கிறான். பாத்திரங்களை உருட்டித் தள்ளி உடைக்கிறான். எல்லாப் பெண்களும் அசோதையிடம் ஓடி வருகிறார்கள். கண்ணனின் ஒவ்வொரு தீம்பையும் சொல்லி முறையிடுகிறார்கள். "கண்ணா!உன்மீது கூறப்படும் பழிச் சொற்களைக் கேட்கமுடியவில்லை. இங்கே வா"என்றழைக்கிறாள் அசோதை.

பாலக்கிரீடை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அண்ணற் கண்ணான்

202. வெண்ணெய் விழுங்கி வெறுங்க லத்தை

வெற்பிடை யிட்டத னோசை கேட்கும்,

கண்ண பிரான்கற்ற கல்வி தன்னைக்

காக்ககில் லோமுன் மகனைக் காவாய்,

புண்ணிற் புளிப்பெய்தா லொக்குந் தீமை

புரைபுரை யாலிவை செய்ய வல்ல,

அண்ணற்கண் ணானோர் மகனைப் பெற்ற

அசோதை நங்காய்!உன் மகனைக் கூவாய். 1

வாமனவே காகுத்தன்

203. வருக வருக வருக இங்கே

வாமன நம்பீ!வருக இங்கே,

கரிய குழல்செய்ய வாய்மு கத்துக்

காகுத்த நம்பீ!வருக இங்கே,

அரிய னிவனெனக் கின்று நங்காய்!

அஞ்சன வண்ணா!அசல கத்தார்,

பரிபவம் பேசத் தரிக்க கில்லேன்

பாவியே னுக்கிங்கே போத ராயே. 2

திருவுடைப் பிள்ளை

204. திருவுடைப் பிள்ளைதான் தீய வாறு

தேக்கமொன் றுமிலன் தேசு டையன்,

உருக வைத்த குடத்தொடு வெண்ணெய்

உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்,

அருகிருந் தார்தம் மைஅநி யாயஞ்

செய்வது தான்வ ழக்கோ அசோதாய்!

வருகவென் றுன்மகன் தன்னைக் கூவாய்

வாழ வொட்டான் மதுசூ தனனே. 3

கொண்டல் வண்ணன் கோயில் பிள்ளை

205. கொண்டல்வண் ணா!இங்கே போத ராயே

கோயிற்பிள் ளாய்!இங்கே போதராயே,

தெண்டிரை சூழ்திருப் பேர்க்கி டந்த

திருநார ணா!இங்கே போத ராயே,

உண்டுவந் தேனம்ம மென்று சொல்லி

ஓடி அகம்புக ஆய்ச்சி தானும்,

கண்டேதி ரேசென்றெ டுத்துக் கொள்ளக்

கண்ணபி ரான்கற்ற கல்வி தானே. 4

காளக்கிராமமுடைய நம்பி

206. பாலைக் கறந்தடுப் பேற வைத்துப்

பல்வளை யாளென் மகளி ருப்ப,

மேலைய கத்தே நெருப்பு வேண்டிச்

சென்றிறைப் பொழுதங்கே பேசி நின்றேன்,

சாளக்கி ராம முடைய நம்பி

சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்,

ஆலைக்க ரும்பின் மொழி யனைய

அசோதைநங் காய்!உன் மகனைக் கூவாய். 5

குடமாடு கூத்தன்

207. போதர்கண் டாயிங்கே போதர் கண்டாய்

போதரே னென்னாதே போதர் கண்டாய்,

ஏதேயும் சொல்லி அசல கத்தார்

ஏதேனும் பேசநான் கேட்க மாட்டேன்,

கோது கலமுடைக் குட்ட னேயோ!

குன்றெடுத் தாய்!குட மாடு கூத்தா!

வேதப் பொருளே!என் வேங் கடவா!

வித்தக னே;இங்கே போத ராயே. 6

பன்னிரு ச்ரவண விரதம்

208. செந்நெ லரிசி சிறுப ருப்புச்

செய்தஅக் காரம் நறுநெய் பாலால்,

பன்னிரண் டுதிரு வோண மட்டேன்,

பண்டு மிப்பிள் ளைபரி சறிவன்,

இன்னமு கப்பன்நா னென்று சொல்லி

எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்,

உன்மகன் தன்னை அசோதை நங்காய்!

கூவிக் கொள்ளா யிவையும் சிலவே. 7

தாய் சொல் கொள்வது தருமம்

209. கேசவ னே!இங்கே போத ராயே

கில்லேனென் னாதிங்கே போத ராயே,

நேசமி லாதார் அகத்தி ருந்து

நீவிளை யாடாதே போத ராயே,

தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும்

தொண்டரும் நின்ற விடத்தில் நின்று,

தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்

தாமோத ரா!இங்கே போத ராயே. 8

உறியிலேயே குறி

210. கன்னல் இலட்டுவத் தோடு சீடை

காரெள்ளி ணுண்டை கலத்தி லிட்டு,

என்னக மென்றுநான் வைத்துப் போந்தேன்

இவன்புக் கவற்றைப் பெறுத்திப் போந்தான்,

பின்னு மகம்புக் குறியை நோக்கிப்

பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான்,

உன்மகன் தன்னை அசோதை நங்காய்!

கூவிக் கொள்ளா யிவையும் சிலவே. 9

என் மகள் வளைவிற்று நாவற்பழம் வாங்கினான்

211. சொல்லி லரசிப் படுதி நங்காய்!

சூழ லுடையனுன் பிள்ளை தானே,

இல்லம் புகுந்தென் மகளைக் கூவிக்

கையில் வளையைக் கழற்றிக் கொண்டு,

கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற

அங்கொருத் திக்கவ் வளைகொ டுத்து

நல்லன நாவற் பழங்கள் கொண்டு

நானல் லேன்என்று சிரிக்கின் றானே. 10

கோவிந்தன் அடியார்களாவர்

212. வண்டுக ளித்திரைக் கும்பொ ழில்சூழ்

வருபுனல் காவிரித் தென்ன ரங்கன்,

பண்டவன் செய்த கிரீடை யெல்லாம்

பட்டர்பி ரான்விட்டு சித்தன் பாடல்,

கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார்

கோவிந்தன் தன்னடி யார்க ளாகி,

எண்டிசைக் கும்விளக் காகி நிற்பார்

இணையடி யென்தலை மேல னவே. 11

(இந்த 11 பாசுரங்களையும் பத்தியுடன் அநுஸ்தானம் செய்வோர் எட்டுத் திசைக்கும் இருள் நீக்கும் விளக்காகி நிற்பர்.)

அடிவரவு:வெண்ணெய் வருக திரு கொண்டல் பாலை போதர் செந்நெல் கேசவனே கன்னல் சொல்லில் வண்டு-ஆற்றில்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is இந்திரனோடு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஆற்றிலிருந்து
Next