பேயாழ்வார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பன்னிரு ஆழ்வார்கள்

பேயாழ்வார்

தொண்டை நாட்டில், சென்னையைச் சார்ந்து சிறந்து விளங்கும் செல்வர்கட்கும்,கலையறிவிற் சிறந்த அறிஞர்கட்கும் இருப்பிடமாகவும், சைவ வைணவர்களின் கோயில்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தலமாகவும், தமிழகத்தின் பொதுமறை என யாவராலும் போற்றிப் புகழப்படும் தெய்வமறையாம் திருக்குறளை உலகிற்கு உதவிய திருவள்ளுவரின் திருக்கோயில் கொண்டு திகழும் தலமாகவும், செல்வர்கள் பலர் பூம்பொழில்களோடு கூடிய பெரிய பெரிய மாளிகைகளை அமைத்துக்கொண்டு வாழ்வதற்கு வகையுள்ள உறைவிடமாகவும் விளங்குவது திருமயிலை என்னும் நகரமாகும்.

இத்தகைய சீரும் சிறப்பும் ஒருங்கைமைந்த திருமயிலை என்னும் இந்நகரத்தில் வைணவர்களின் திருக்கோயிலாகத் திகழும் ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் திருக்கிணற்றில், செவ்வல்லி மலரின்கண் (A. H. 7- ஆம் நூற்றாண்டில்) சித்தாத்திரி ஆண்டு ஐப்பசித் திங்கள், வளர்பிறையில் (சுக்ல பட்சம்) பொருந்திய தசமி திதியில் வியாழக்கிழமையன்று சதய நாளில் எப்பெருமானின் ஐம்படைகளுள் ஒன்றாகிய நாந்தகம் என்னும் வாளின் அமிசம் உடையவராய்ப் பேயாழ்வார் அவதரித்தருளினார்.

பேயாழ்வார் மனம் இளமையிலேயே கல்வியில் சென்று பதிந்தது. எல்லா நூற்பொருள்களும் அவருக்கு இனிது விளங்குவனாயின. அவரது மனம் காந்தத்தில் ஊசி சென்று பொருந்துவதுபோலத் திருமாலின் திருவடித் தாமரைகளில் சென்று பொருந்தி அவற்றிலேயே நிலைத்துவிட்டது. அதனால் அவர் எப்பொழுதும் அருந்தமிழ்ப் பாக்களால் பரமன் புகழினைப் பாடிப் பாடி, அதனால் களிப்பு மிகக்வராய் ஆடி ஆடித் திரிவார். அவரைக் கண்டவர்கள், 'இவர் கருவிலேயே ஞானமாகிய திருவுடையராய் அவதரித்தவர்; மெய்ஞ்ஞானச் செல்வர்'என்று போற்றுவார்கள்;'அவரை வணங்கினால் நாம் மக்கட் பிறப்பை எய்தினால் அடைதற்குரிய பயனை அடைவோம்'என அவருடைய திருவடிகளை வணங்குவார்கள். இவ்விதம் கண்டோர் அனைவரும் வணங்கும் வாய்ப்புடையவராய் விளங்கினார் பேயாழ்வார்.

அவர் பாடியருளிய மூன்றாம் திருவந்ததாதியில்,

"தொட்ட படைஎட்டும் தோலாத வென்றியான்

அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துக்

கோள்முதலை துஞ்சக் குறித்தெழுந்த சக்கரத்தான்

தாள்முதலே நங்கட்குச் சார்வு"

என்னும் பாடல் ஒன்று. திருமாலின் திருவடிகளே மக்கட்குப் பற்றுககோடாகும் என்னும் கருத்தினை அப்பாடல் பகர்கின்றது.

இவரால் பாடப்பெற்ற தலங்கள். 1. திருவரங்கம், 2. திருக்குடந்தை, 3. திருவிண்ணகர், 4. திருமாலிருஞ்சோலைமலை, 5. திருக்கோட்டியூர் 6. அட்டபுயகரம் 7. திருவேளுக்கை, 8. திருப்பாடகம், 9. திருவெஃகா, 10. திருவல்லிக்கேணி, 11.திருக்கடிகை, 12. திருவேங்கடம், 13. திருப்பாற்கடல், 14. பரமபதம் முதலியனவாகும்.

முதலாழ்வார்கள் கூடுதலும், அந்தாதி பாடுதலும்

முதலாழ்வார்கள் என மக்களால் போற்றிப் புகழப்படும் பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூவரும் சம காலத்தவர்கள். அவர்கள் மாந்தருடன் கூடியிருத்தற்கு மனம் இயையாதவர்களாய், ஒருவரை ஒருவர் அறியாமல், ஒரு நாள் இருந்த ஊரில் மறு நாள் இராமல், ஊர் ஊராய்ச் சென்று இறைவனைச் சேவித்துக்கொண்டிருந்தார்கள். இவர்கள் இங்ஙனம் இருக்கையில் இறைவன் இம்மூவரையும் சேர்ப்பித்தல் வேண்டும் எனத் திருவுளங் கொண்டு, திருக்கோவலூருக்குச் செல்லவேண்டும் என்னும் எண்ணத்தை இம்மூவருக்கும் உண்டாக்கியருளினான். அதனால் இம்மூவரும் தனித் தனியாகத் திருக்கோவலூருக்குச் சென்று, அத்தலத்தில் உள்ள திருமகள்நாதனைச் சேவித்தார்கள்.

உலகத்து உயிர்களை உறங்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்த மாலைப் பொழுதும் வந்தது. எங்கும் இருள் கவிந்தது. இம்மூவருள் பொய்கையார் முதற்கண் ஒரு வைணவருடைய அழகிய இல்லத்தை அடைந்து, அவ்வில்லத்தின் இடைசுழியில் அந்த இல்லத்தாரின் இசைவு பெற்றுப் படுத்துக் கொண்டார். பின்பு பூதத்தாரும் பொய்கையார் பள்ளி கொண்டிருக்கும் வீட்டை அடைந்து, படுக்க இடம் கிடைக்குமோ என வினவ, அதனைச் செவிமடுத்த பொய்கையார் பூதத்தாரிடம் தாம் தங்கியுள்ள இடத்தில், 'ஒருவர் படுக்கலாம்;இருவர் இருக்கலாம்'என்று கூறி அவரையும் அவ்விடத்திற்கு எழுந்தருளும்படி அழைக்க, பூதத்தாரும் அவ்வாறே செல்ல அவ்விருவரும் அங்கு அமர்ந்தனர். அப்பொழுது ஆண்டவனின் அடியவராகிய பேயாரும் அங்குச் சென்று படுத்துக்கொள்ள இடம் கேட்க, பொய்கையார் பேயாரை நோக்கி, 'இங்கு உள்ள இடத்தில் ஒருவர் படுக்கலாம்;இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்'எனக் கூறி அவரையும் அழைப்பித்துக்கொண்டார். எனவே, முதலாழ்வார்களாகிய அம்மூவரும் அங்கு நிற்கலாயினர். பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் உசாவி உணர்ந்துகொண்டு, மிக்க மகிழ்ச்சியுடையவர்களாய் உரையாடிக்கொண்டிருக்கும் காலத்தே, திருமாலும் அவர்கள் நிற்கும் இடத்தின் இடையில் அவர்களோடு தாமும் ஒருவராய்ச் சென்று நின்றுகொண்டு, அவர்கட்கு நெருக்கத்தை உண்டாக்கினார்;வெளியிலும் செல்லமுடியாத பெருமழையையும் உண்டாக்கி அருளினார்.

இறைவரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கத்தினை ஞானச்சுடர் விளக்கின்மூலம் அறிந்த ஆழ்வார்கள், அவரது அழகிய மேனியை அகக்கண்களால் கண்டு, தம் தூய்மை பொருந்திய எண்ணத்தினால் திருமாலின் தெள்ளிய இயல்பினைத் தெவிட்டாத தீந்தமிழில் அவனியில் உள்ளோர் உய்யும்பொருட்டு அந்தாதிப் பாடலாக அறிவிக்கத் தொடங்கினர். முதற்கண் பொய்கையார்,

"வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குவே என்று"

எனத் தொடங்கி,

"ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்

ஈரடியும் காணலா மென்னெஞ்சே - ஓரடியில்

தாயவனைக் கேசவனைத் தண்துழாய் மாலைசேர்

மாயவனை யேமனத்து வை"

என முடியும் நூறு பாட்டுக்களைக் கொண்ட ஓர் அந்தாதியைப் பாடியருளினார்.

பொய்கையார்வார் முதற்கண் ஆரம்பித்து அந்தாதி பாடியதால் இவரது அந்தாதி முதல் திரு அந்தாதி என வழங்கப்பட்டது.பின்பு, பூதத்தார் இரண்டாவதாக இறைவன் மீது இரண்டாம் திரு அந்தாதி என வழங்கும் நூறு பாடல்களை,

"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்"

என்ற பாடல் ஆதியாகவும்,

"மாலே நெடியோனே கண்ணனே - விண்ணவர்க்கு

மேலா வியன்துழாய்க் கண்ணியனே - மேலால்

விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே - என்றன்

அளவன்றால் யானுடைய அன்பு"

என்ற பாடல் அந்தமாகவும் அமையப் பாடினார்.

மூன்றாவதாகப் பேயாழ்வார் பரமனின் பான்மையைப்பறை சாற்றும் பரந்த உள்ளத்துடன், தாம் கண்ட காட்சியை முதலிருவர் போன்றே அந்தாதியாகப் பாட அவா உள்ளவராய், திருமாலின் கோலத்தைத் தெரிவிக்கும் எண்ணத்தவராய் முதற்கண்,

"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று"

என்ற பாடலைப் பாடி, அந்தாதியின் நூறாவது செய்யுளாக,

"சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்துழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும் - காரார்ந்த

வான் அமரும் மின்னிமைக்கும் வண்தா மரைநெடுங்கண்

தேன்அமரும் பூமேல் திரு"

என்ற பாடலையும் பாடிப் பரந்தாமனின் பண்பினை மூன்றாந் திரு அந்தாதியாக மொழிந்தார்.

இங்ஙனம் முதலாழ்வார்கள் மூவரும் திருக்கோவலூரில் கூடிப் பரமனைச் சேவித்து அந்தாதி பாடினார்கள்.




 


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is பூதத்தாழ்வார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருமழிசையாழ்வார்
Next