திருமழிசையாழ்வார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பன்னிரு ஆழ்வார்கள்

திருமழிசையாழ்வார்

" தொண்டை நன்னாடு சான்றோருடைத்து " என்று தமிழகம் தழைக்க cF நூல் வகுத்த ஒளவையாரால் பாராட்டப்பெற்ற தொண்டை நாட்டில், கடலுக்கு மேற்கில் காஞ்சீபுரத்திற்குக் கிழக்கில் ஓர் தலம் உளது. அது பூமிக்கு அணியாக விளங்குவது. திருமழிசை என்று பெயர் பெற்ற அப்பதி அந்தணர்கள் பரிவுடன் பயிலும் வேத ஒலிகளைக் கொண்ட தலமாக மட்டுமின்றி, பார்க்கவர் என்னும் முனிவர் திருமாலைக் குறித்து "தீர்க்க சத்திர யாகம்"செய்யும் இடமாகவும் அமைந்திருந்த காலத்தே, அம்முனிவரது மனைவியார் கருவுற்றுப் பன்னிரண்டு திங்கள் கழித்து (A. H. 7 -ஆம் நூற்றாண்டு) சித்தாத்திரி ஆண்டு தைத் திங்கள் தேய்பிறையில் (கிருஷ்ண பட்சம்) பொருந்திய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆழி அமிசமாய், கை கால் முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப் பெற்றெடுத்தார். பார்க்கவ முனிவரும் அவர் மனைவியாகிய கனகாங்கி என்னும் தேவமாதும் மன வருத்தம் கொண்டு அப்பிண்டத்தை ஒரு பிரம்புப் புதரின்கீழே போட்டுவிட்டுப் போனார்கள். பிறகு ஆழியங்கையனாகிய திருமால் திருமகள் சமேதராய் அவண் எழுந்தருளி அப்பிண்டத்தை அன்புடன் நோக்கி அருள் புரிய அதனால் அப்பிண்டம் ஓர் அழகிய ஆண் மகவாகும் உறுப்புக்கள் அமையப்பெற்றது. இஃது,

"சிக்கென்று சின்னக்கால் சீருடைப்பின் கண்ணுயிராய்

ஒக்கஉறுப் பாய்ந்தறிவார் உண்ணிறைந்தான்"

என்கிறபடியே, எல்லா அவயங்களும் அமைந்த அழகுள்ள ஆண் குழவியாகி அழத் தொடங்கிற்று.

இறைவனின் திருவருளால் உயிர் அமையப்பெற்று, பசி தாகங்களில் ஈடுபட்டு, மக்கள் இல்லாத பிரம்புப் புதரில் அழுதுகொண்டிருந்த அக்குழந்தையின்முன் எம்பெருமான் எழுந்தருளி, இவருடைய பசி தாகம் தீரும்படி அருள்பாலித்து, ஆராவமுதான தம் திருக்கோலத்தைக் காட்டி மறைந்தார். குழந்தையாகிய திருமழிசையாழ்வாரும் அவரை விட்டுப் பிரிந்து ஆற்றமாட்டாமல் மீண்டும் அழத் தொடங்கினார்.

அங்கு அப்பொழுது, திருவாளன் என்றொருவன் பிரம்பு அறுக்கப் போய்,அவ்விடத்தில் இக்குழந்தையின் அழுகுரலைக் கேட்டுத் தேடிச் சென்று அக்குழந்தையைக் கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் அதனை எடுத்து, பெற்றோர்கள் எங்கேனும் உளரோ எனத் தேடிப் பார்த்தான். அங்கு ஒருவரும் காணப்பட்டிலராதலைக் கண்ட அவன் 'மகப்பேறு இல்லாத குறையைத் தீர்க்கக் கருதிய திருமகள் நாதன் இக்குழவியை நமக்களித்தனன்'என்னும் உவகை கொண்டு, இல்லம் நோக்கிச் சென்று, தனது மனைவியான பங்கயச் செல்வியார் கையில் கொடுத்து, கிடைத்த வரலாற்றையும் அவளிடம் கூறினான்.

அந்நங்கை நல்லாளும் அக்குழந்தையை அன்புடன் வாங்கி முத்தமளித்து, தானே பெற்றவர் எனக் கண்டோர் கூறும் தன்மையில் மார்புடன் மகழ்வோடு அணைத்துக்கொள்ள, அவள் மார்பிலும் பால் சுரந்தது. ஆயினும், அப்பாலை மகவு உண்டிலது. இக்குழந்தையாகிய திருமழிசையாழ்வார் பாலுண்ணல் முதலானவற்றில் ஆசையற்று, எம்பெருமானுடைய குணங்களையே தாரகமாகவுடையராய் பேசுவது அழுவது ஒன்றுமின்றி, சிறுநீர் கழித்தல் முதலியனவுமில்லாமல், எல்லா உறுப்புக்களும் பரிபூரணமாகப் பெற்றவராய் எழுந்தருளியிருந்தார்.

இத்தகு வியப்பான செய்தியைக் கேட்டு, திருமிழிசையில் வாழ்பவரும், திருமகள்நாதன்பால் பேரன்பு உடையவரும், கற்றுணர்ந்தவருமான ஒரு முதியவர், அக்குழவிக்குக் கொடுக்கப் பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு வந்து அம்மகவின்முன் வைத்து, "இதை அமுது செய்தருளவேண்டும்"என்று வேண்ட, அக்குழவியும் அப்பாலமுதை அருந்திற்று. அதனைக் கண்ணுற்ற பங்கயச் செல்வியாரும் திருவாளனும், நாள்தோறும் பாலமுது கொணர்ந்து பாலகனைப் பருகுவிக்கச் செய்யவேண்டும் என்று அம்முதியவரைப் பரிவுடன் வேண்ட, அம்முதியவரும் அவ்வாறே நாள்தோறும் தம்முடைய மனைவியாரோடு பாலமுதைக் கொணர்ந்து அக்குழவியை உண்பிக்க, அவ்வருமை மகவும் அப்பாலை உண்டு வந்தது. ஒருநாள் இவர்களது எண்ணத்தை அக்குழந்தை அறிந்து, அன்று அவர்கள் கொணர்ந்த பாலமுதில் சிறிது நிற்கும்படி வைத்து எஞ்சியதை உண்டது. இதனை அம்முதியவர்கள் அருந்த, அவர்கள் இளமைப் பருவத்தினையுடையவர்களாகி, பின் அவரது மனைவியார் கர்ப்பவதியாகிப் பத்துத் திங்கள் நிறைந்தபின், ஒரு ஆண் மகவைப் பெற்றாள். அப்பிள்ளைக்குக் கணிகண்ணன் எனப் பெயரிட்டு, மக்களுக்கு மாட்சியளிக்கும் கலைகள் யாவற்றையும் அவர்கள் கற்பித்தார்கள். பார்க்கவ முனிவருக்கும் அவரது மனைவியாகிய கனகாங்கிக்கும் மகவாகி, திருவாளன், பங்கயச் செல்வி ஆகிய இருவரின் செல்வ மைந்தராகி, திருமழிசை என்னும் தலத்தில் அவதரித்த காரணத்தினால் திருமழிசையாழ்வார் என்ற திருநாமத்தோடு வளர்ந்த இவர், ஏழு ஆண்டுகள் கழிந்தபின், அஷ்டாங்க யோகம் புரியும் கருத்தினர் ஆகி, அதற்குப் பரம்பொருளின் தியானம் இன்றியமையாதது என நூல்களின் வாயிலாக உணர்ந்தார். உலக காரணனாக விளங்கும் பரம்பொருளாம் முதற்பொருளின் தத்துவத்தை உணரப் பற்பல சமயங்களிலும் புகுந்து ஆராயவேண்டுமென்னுங் கருத்தினைக் கொண்ட அவர் சாக்கியம், சமணம் என்னும் சமயங்களில் உள்ள நூல்களை ஓதியுணர்ந்தார். ஆனால், அவற்றில் பசையில்லாமல், பின் சைவ சமயத்தை அடைந்து, சிவவாக்கியர் என்னும் திருநாமத்துடன சைவராய் விளங்கி அச்சமய நூல்களை ஆராய்ந்தவாறே அவர் பல தலங்களுக்குச் சென்று, சிவபிரானைச் சேவித்து விட்டுத் திருமயிலையை அடைந்தார். அங்குப் பூஞ்சோலையில் இருந்த பேயாழ்வார், சிவவாக்கியர் என்ற பெயருடன் சைவராக விளங்கும் திருமழிசையாழ்வரைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்துடன் அவரிடம் மரங்கள் தோன்றுவதற்கு விதை காரணமாக இருப்பதுபோல் சத்துவ குணம் உடைய பொருள் எதுவோ அதுவே உலகத்து எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் காரணமாகின்ற முதற் பொருள் ஆகும் என்ற உண்மையினை உணர்த்தினார்;மேலும், அம்முதற் பொருளை உணர்ந்துஅடைந்து வீடு பெறுதலே ஞானத்தின் பயன் ஆகும் என்று எண்ணம் சிவவாக்கியரின் மனத்தில் எழச் செய்து, அத்தகைய முதற்பொருளாய் விளங்கி முத்தி நிலை அளிக்கும் முதல்வன் திருமகள்நாதனாகிய திருமாலே என்று நிலைநாட்டி இதர சித்தாந்தங்கள் நிலையற்றவை என்றும் விளக்கினார். இவ்வாறு சைவராக இருந்து, சைவ மதத்தில் சிவவாக்கியர் என்னும் பெயருடன் விளங்கிய திருமழிசையாழ்வாருக்குப் பேயாழ்வார் நாராயணனின் திருமந்திரத்தை முறைப்படி உபதேசிக்க, திருமழிசையார் ஸ்ரீவைணவர் ஆனார்.

திருமழிசையாழ்வார் ஜகந்நாதனாக ஸ்ரீமந் நாராயணனைத் தியானம் செய்துகொண்டு திருமழிசையில் உள்ள "கஜேந்திர ஸரஸ்" என்னும் குளத்தின் கரையில் பல்லாண்டுகள் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.

பிறகு தருமழிசைப் பிரானார் அவ்விடத்தினின்றும் அகன்று ஒரு மலைக்குகையை அடைந்து, அங்கு யோகத்தில் அமர்ந்திருந்தார். அந்நிலையில் பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார்கள் மூவரும் பல தலங்களுக்குச் சென்றுவருகையில், ஓரிடத்தில், இவ்வுலகில் காணப்படாததாகிய பேரொளியைக் கண்டு வியப்பெய்தி, 'இதை ஆராயக் கடவோம்' என்று எங்கும் திரிந்து வந்து குகையில் எழுந்தருளியிருந்த பக்திசாரரை நெஞ்சென்னும் உட்கண்ணால் கண்டுகொண்டு, அவரை நோக்கி, 'பார்க்கவரின் அருந்தவப் பேறானவரே!தங்கள் நலம் பொலிந்து விளங்குகின்றதோ?'என்று கேட்டார்கள். திருமழிசையார், 'தாமரை, குருக்கத்தி, செவ்வல்லி என்னும் முப்பூக்களும் உலகில் புகழ் எய்த வந்த மெய்ஞ்ஞானச் செல்வர்களே!உங்கள் அருள் நலம் பெற்றவனாகிய என் நலம் பொலிந்து விளங்குதற்குத் தடையாவது யாதுளது?'என்றார். அவர்கள் அன்பின் மிகுதியால் கண்களில் நீர் மல்க ஒருவரையருவர் ஆலிங்கித்துக்கொண்டு, மிகவும் பக்தியுடன் யோகத்தில் எழுந்தருளியிருந்து பின்பு யாவரும் திருமயிலைக்கு எழுந்தருளி, பேயாழ்வார் திருவவதரித்தருளின கைரவ தீர்த்தத்தின் கரையில் சில காலம் யோகத்தில் எழுந்தருளியிருந்தனர். பின் முதலாழ்வார்கள் மூவரும் திருமழிசைப் பிரானிடம் விடை பெற்றுக்கொண்டு அவரை அரிரிற் பிரிந்து சென்றார்கள்.

பின்பு ஆழ்வார் தம்முடைய திருவவதாரத் தலமான திருமழிசைக்கு எழுந்தருளி, சாத்துகைக்குத் திருமண் வேண்டி கல்லிச் சோதித்த இடத்தில் திருமண் அகப்படாமல் வருந்தித் துயில் கொள்ள, அவரது கனவில் திருவேங்கடநாதன் எழுந்தருளி, திருமண் உள்ள இடத்தைக் குறிப்பிட்டுக் கூறியருளினான். இவரும் அங்கே திருமண் கண்டு எடுத்துப் பன்னிரண்டு திருநாமம் அணிந்துகொண்டு,

"ஆல நிழல்கீழ் அறநெறியை நால்வர்க்கு

மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் - ஞாலம்

அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்

வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு"

என வணங்கினார்.

இப்படியாகச் சில நாள் சென்ற பின்பு, கச்சியில் உள்ள திருவெஃகாவுக்குச் சென்று, அப்பதியில் அரவணையில் துயில் அமர்ந்துள்ள இறைவனைச் சேவித்து, பொய்கையாழ்வார் அவதரித்தருளின பொய்கைக் கரையில் தியானம் செய்து கொண்டு, யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.

அக்காலத்தில் இவரருளால் பிறந்த கண்கண்ணர் வந்து, இவருடைய திருவடிகளில் வணங்கி, அவர் திருவருளைப் பெற்று, அவருக்குச் சீடர் ஆகிடப் பல தொண்டுகள் செய்து வரலாயினார்.

அப்பொழுது அங்கு வாழ்ந்து வந்த ஒரு முதியவள் திருமழிசையாழ்வாரின் மாட்சியை உணர்ந்து வந்து, நாள்தோறும் அவர் உள்ள இடத்தை அலகு கொண்டு தூய்மைப்படுத்திக் கோலமிட்டு அலங்கரித்து வரலானாள். ஒரு நாள் ஆழ்வார் யோகத்திலிருந்து திருக்கண்களை விழித்துப் பார்த்து, முதியாள் செய்யும் தொண்டிற்குகந்து, அம்முதியவளை நோக்கி, 'உனக்கு வேண்டியதைக் கேள். ஒரு வரம் தருகிறேன்'என்றருளிச் செய்ய, அவளும் ஆழ்வாரைக் குறித்து, 'அடியேனுக்கு இக்கிழத்தனம் போகும்படி அருள் பாலிக்கவேண்டும்'என, ஆழ்வாரும், 'அப்படியேயாகக் கடவது' என்று அவளுக்கு அருள, தேவமாதர்களும் 'இவ்வுரு பொற்பாவையோ? பொன்தானோ?'என்று ஐயுறும்படி அவளும் அழகு மிக்க இளநங்கையாகிப் பக்திசாரரை வணங்கித் தன் இருப்பிடம் அடைந்தாள். அவளது அழகைக் கண்ணுற்ற பல்லவ வேந்தன் அவளது அழகில் மனத்தைப் பறி கொடுத்து ஏக்கமுற்றவனாய் உறக்கமின்றி அவளையே எண்ணி, பின் அமைச்சர்கள் மூலம் அவளது விருப்பத்தையும் அறிந்து, அவளைத் தனது கருத்திற்கிசைந்த மனைவியாகப் பெற்றான். பல்லவராயனும் நாளுக்கு நாள் கிழத்தனத்தை அடையலானான். பின் ஒரு நாள் மனைவியிடம் அவளுக்கு ஆழ்வாரால் ஏற்பட்ட அருளை உணர்ந்தான். கணவனாகிய காவலனுக்குத் தனக்கு இளமைத் தன்மை ஏற்பட்ட வரலாற்றினை உணர்த்தியதோடு அமையாத அம்மையார், 'ஆழ்வாரின் சீடரும், நாள்தோறும் அரண்மனைக்குப் பிச்சை ஏற்றற்காக வருகின்றவரும் ஆகிய கணிகண்ணரின் துணை கொண்டு ஆழ்வாரின் அருளைப் பெறுவீராயின் தங்களுக்கும் இளம்பருவம் எய்தும்'எனக் கூறினாள்.

அங்ஙனமே அம்மன்னனும் மறுநாள் கணிகண்ணர் வந்ததும் அவரிடம் அவரது குரவரை அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று வேண்ட, அதற்கவர், 'எம் குரவர் எவர் மனைக்கும் வாரார்'என்ன, அரசன், 'அங்ஙனமாயின் நீரே நம்மீது ஒரு பாட்டுப் பாடுதல் வேண்டும்'என்று கேட்டான். அதற்கு கணிகண்ணர், 'யான் வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியல்லேன்'என்ன, அரசன் அவரை நோக்கி 'திருமாலின் அமிசம் பெற்றவர்கள் அரசர்களாதலினால் அரசரைப் பாடுதல் குற்றமாகாது;ஆதலினால் பாடுதல் வேண்டும்'என்று வற்புறுத்திக் கூறினான். கணிகண்ணரும்,

"ஆடவர்கள் எங்ஙன் அகல்வார் அருள்சுரந்து

பாடகமும் ஊரகமும் பாம்பணையும் - நீடியமால்

நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ

மன்றார் பொழிற்கச்சி மாண்பு"

என்று பாடினார். அரசன் கணிகண்ணரை நோக்கித் திருமாலைப் பாடியதன் காரணத்தை வினவ, அதற்குக் கணிகண்ணனார் அரசனிடம், 'தாங்களே அரசர்கள் திருமாலின் அமிசம் என அறிவித்ததால் திருமாலைப் பாடுவதும் அரசரைப் பாடுவதே அன்றோ? ஆதலின் திருமாலைப் பாடினேன்'என்றார். மன்னன் அதனைச் செவியேற்றுச் சினங்கொண்டு, 'இன்றே நீர் நமது நகரைவிட்டுச் செல்வீராக'எனக் கடிந்து கூறினான்.

கணிகண்ணரும் சடக்கெனப் புறப்பட்டுத் தமது குரவரான பக்திசார முனிவராகிய திருமழிசையாழ்வார் முன் சென்று வண்ங்கி, நடந்த செய்தியை அறிவித்து, 'அடியேன் இவ்விடத்தினின்றும் விடை கொள்ளுகிறேன்'என்று கூற, ஆழ்வாரும் அவரிடத்து, 'நானும் எம்பெருமானை எழுப்பிக் கொண்டு வருகிறேன். அதுவரையிலும் இங்கு இருப்பீர்'என்று சொல்லிக் கோயிலுக்குச் சென்று, அரவணைச் செல்வனாகிய வைகுந்தவாசனை நோக்கி,

"கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி

மணிவண்ணா நீகிடந்த வேண்டா - துணிவுடைய

செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்"

என்று பாடினார். அப்பெருமானும் திருமழிசையார் பின்னால் தம் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு எழுந்தருள, மற்றும் அத்தலத்து ஆலயங்களில் பொருந்தியுள்ள தேவர்களும் பின்தொடர எழுந்தருள்கின்ற காலத்து, அக்காஞ்சிமாநகரம், கோசல நாட்டுக் குரிசில் கானகம் நோக்கிச் செல்கின்ற காலத்து இராமனைவிட்டுப் பிரிந்தமையால் எழில் இழந்த அயோத்தியைப்போன்று பொலிவு அற்று இருள் சூழப்பெற்றது. அந்நகரக் காவலனாகிய பல்லவராயன் அமைச்சர்களை அழைப்பித்துத் தனது நகரம் பொலிவிழந்நது காண்பதற்குக் காரணம் கேட்க, அமைச்சர்களும் ஒற்றர்கள்மூலம் நிகழ்ந்த செய்தியை அறிந்து அரசனுக்குக் கூறினர். அரசனும் மிக வருந்தி அமைச்சர்கள் முதலியவருடன் கணிகண்ணரைத் தேடிச் சென்று, அவரது காலில் விழுந்து வணங்கி, அறியாமையால் தான் கூறிய கொடுமொழியைப் பொறுத்து மீண்டும் கச்சிப்பதிக்கு எழுந்தருளவேண்டும் என வேண்டினார். கணிண்ணரும் திருமழிசையார்வாரை மீண்டும் எழுந்தருளவேண்டும் என வேண்ட, ஆழ்வாரும் வைகுந்தநாதராகிய சொன்னவண்ணம் செய்த பெருமாளைப் பார்த்து,

"கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி

மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய

செந்நாப் புலவனும் கோக்கொழிந்தேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"

என்று விண்ணப்பம் செய்ய, திருமாலும் தேவர்களும் மீண்டும் கச்சிப்பதியை அடைந்து, தம் பைந்நாகப் பாயை விரித்துப் பள்ளி கொண்டருளினார். அம்முதல்வன் கணிகண்ணர் முதலியவர்களுடன் சென்று ஓர் இரவு தங்கிய இடத்திற்கு 'ஓரிரவிருக்கை'என்பது பெயராயிற்று. காஞ்சி நகரம் முற்றும் முன்போல் பொலிவுற்று விளங்கியது. அரசன் முதலான அனைவரும் மகிழ்வெய்தினார்கள். திருமழிசையாழ்வாரும் அவ்விடத்திலே பின்னையுஞ் சில காலம் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.

பின்பு திருமழிசையாழ்வார், வைகுந்தமாநகரைத் தரத்தக்க பெருமையுடைய கும்போகணம் என்னும் திருக்குடந்தையில், ஏரார் கோலம் திகழக் கிடக்கும் ஆராவமுதனைக் கண்டு சேவிக்க எண்ணமுடையராய், காஞ்சியினின்றும் எழுந்தருளும்பொழுது, இடையில் உள்ள பெரும்பிலியூர் என்கிற கிராமத்தில் சென்று, ஒரு திண்ணையில் எழுந்தருளியிருந்தார். அத்திண்ணையிலேதயிருந்து வேதம் ஓதிக்கொண்டிருந்த பார்ப்பனர்கள் இவரைக் கண்டு, 'நான்காம் வருணத்தினனாகிய இவன் கேட்க நாம் வேதம் ஓதுதல் தகாது'என கண்ணித் தவிர்ந்திருக்க, ஆழ்வாரும் அவர்கள் கருத்தை அறிந்து திண்ணையை விட்டிறங்கினார். மறையவர்கள் உடனே வேதம் ஓதத் தொடங்கி, விட்ட வாக்கியம் தோன்றாமையால் தவறித் தடுமாற, ஆழ்வாரும் அதைக் கண்டு, கருநெல்லை நகத்தால் பிளந்து குறிப்பால் காட்டியருள, பின்பு அவர்களுக்குவிடுபட்ட வாக்கியம் தோன்றி, அவர்கள் தெளிந்து வந்து ஆழ்வாரை வணங்கி, பிழையைப் பொறுத்தருள்க என வேண்ட, பக்திசாரரும் அவர்களுக்குப் பல இன்மொழிகளைக் கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

பின்னர் அப்பதியில் பக்திசாரர் பிச்சை ஏற்றுச் செல்லுங்காலத்து, அவ்வூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் இவ்வாழ்வார் எழுந்தருளுகிற திருவீதிகள்தோறும் தம் திருமுகத்தைத் திருப்பி அருளுவார் ஆயினார். இந்தச் செயலை அக்கோயில் அர்ச்சகராகிய நம்பியார் கண்டு, சில பார்ப்பனருக்குக் காட்டினார். அவர்கள் அந்தக் கிராமத்தில் யாகம் செய்யும் பெரும்புலியூர் அடிகளுக்கு யாகசாலையில் சென்று இவரது பெருமையைக் கூற, அவரும் உடனே அங்கு வந்து, பக்திசாரரை யாகசாலைக்கு எழுந்தருளவேண்டும் என்று வணங்கிப் போற்றி விண்ணப்பம் செய்து அழைத்துச் சென்று உபசரித்துச் சிறந்ததோர் பீடத்தில் வீற்றிருக்கச் செய்தார். பின்னர் யாகத் தலைவர் யாகத்தில் செய்யும் அக்கிர பூசையை ஆழ்வாருக்குச் செய்யுங்காலத்து, வேள்விச் சடங்கர்கள் பக்திசாரரை இழிவுபடுத்திக் பேச யாகத் தலைவர் ஆழ்வாரை நோக்கி, 'இவர்கள் இப்படிப் பேச நான் கேட்க மாட்டேன்'என்று மிகவும் வருந்தி விண்ணப்பம் செய்தார். ஆழ்வாரும் அச்சடங்கர்களுக்கு நல்லறிவு உண்டாகும்படி செய்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் எம்பெருமானை எண்ணி,

"அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவ தென்கொலோ

இக்குறும்மை நீக்கியென்னை ஈசனாக்க வல்லையேல்

சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட

உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே"

என்று பாடியருளினார். திருமாலும் யாவரும் காணும்படி ஆழ்வாருடைய திருமேனியில் திருப்பாற்கடலின்கண் தாம் பள்ளிகொண்டுள்ள காட்சியைக் காண்பிக்க பக்திசாரரும் அச்சாரூப நிலையைப் பெற்று யாவரும் காண இருக்கும்படி அருளினார். முன்பு கண்டபடி பேசிய சடங்கர்கள் எல்லோரும் இக்காட்சியினால் உள்ளம் மாறி ஆழ்வாரது திருவடிகளில் விழுந்து வணங்கி, ஆழ்வாரே அக்கிர பூசைக்கு உரியவர் எனப்

பன்முறை போற்றி, தான் செய்த செயல்களை மன்னித்தருளுமாறு வேண்டினர். பத்திசாரரும் அவர்களுக்குப் பல நன்மொழிகளைக் கூறி, பெரும்புலியூர் அடிகளிடத்தும், அவர்களிடத்தும் விடை பெற்றுக்கொண்டு திருக்குடந்தைக்கு எழுந்தருளினார்.

திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தை அடைந்த ஆழ்வார் ஆராவமுதனைச் சேவித்து, பின் தாம் அதுவரையில் பாடிய பாசுரங்களையெல்லாம் காவிரி நீரில் விட்டார். அவற்றுள் நான்முகன் திருவந்தாதிப் பாசுரங்களும், திருச்சந்தவிருத்தப் பாசுரங்களும் எதிர்த்து வர, அவற்றை எடுத்துக் கொண்டு ஆராவமுதனைச் சேவித்தார்;பிறகு அவ்விரண்டு நூல்களையும் உலகத்திற்கு உதவி அப்பதியில் பல்லாண்டுகள் எழுந்தருளியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இங்ஙனம் திருமழிசையாழ்வார், அன்ன ஆகாரங்களை விட்டு, காய் கிழங்குகளைச் சிறிது அமுது செய்து, நெடுங்காலம் நானிலத்தில் நாடுய்யும் நல்வழியினைப் பாசுரங்கள்மூலம் உணர்த்தியருளினார் என்பர் அறிஞர். இவருடைய பாசுரங்கள் யாவும் தத்துவப் பொருளை உணர்த்துவதோடு, வைகுந்தநாதனின் அன்பை உண்டாக்கி, இயற்கை வருணனைகள் எழிலாக அமையப் பெற்று பொருட் செறிவும், மிடுக்கும், இன்பமும் வாய்ந்தனவாய் விளங்குகின்றன.

திருமழிசையாழ்வாரால் பாடப்பெற்ற பாடல் தலங்கள்:1. திருவரங்கம், 2.அன்பில், 3. திருப்பேர் நகர், 4. கும்பகோணம், 5. கவித்தலம், 6. திருக்கோட்டியூர், 7.திருக்கூடல், 8.திருக்குறுங்குடி, 9. திருப்பாடகம், 10. திருவூரகம், 11. திருவெஃகா, 12.திருவெவ்வுளூர், 13. திருவேங்கடம், 14. திருப்பாற்கடல், 15. துவாரகை, 16. பரமபதம் முதலியனவாம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is பேயாழ்வார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  நம்மாழ்வார்
Next