அட்டுக்குவி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

மூன்றாம் பத்து

அட்டுக்குவி

ஒரு நாள் திரு ஆய்பாடியில் இந்திர பூஜை!அவனுக்காகச் செய்து வைத்த உணவுகளை எல்லாம் கோவர்த்தனமலைக்கு இடச்செய்தான் கண்ணன். தானே அம்மாலையாக இருந்து அமுது செய்தான். இந்திரனுக்கு கோபம். கருமுகில்களை அழைத்து ஏழுநாள் பெரு மழை பெய்வித்தான். கண்ணனுக்கு ஆயர்கள் மீதும், ஆநிரைகள்மீதும் எவ்வளவு அன்பு!கோவர்த்தனமலையையே குடையாகப் பிடித்து ஆநிரை காத்தான். அவ்வரலாற்றை ஆழ்வார் மகிழ்கிறார்.

கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகக்கொண்டு மழை தடுத்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தல்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கடல் வண்ணன் பொறுத்த மலை

264. அட்டுக் குவிசோற் றுப்பருப் பதமும்

தயிர்வா வியும்நெய் யளறும் அடங்கப்

பொட்டத் துற்றி,மா ரிப்பகை புணர்த்த

பொரூமா கடல்வண் ணன்பொறுத் தமலை,

வட்டத் தடங்கண் மடமான் கன்றினை

வலைவாய் பற்றிக் கொண்டு,குற மகளிர்

கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும்

கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 1

மதுசூதன் எடுத்த மலை

265. வழுவொன் றுமில்லாச் செய்கைவா னவர்கோன்

வலிப்பட் டுமுனிந் துவிடுக் கப்பட்ட

மழைவந் தெழுநாள் பெய்துமாத் தடைப்ப

மதுசூ தனெடுத் துமறித் தமலை,

இழவு தரியா ததோரீற் றுப்பிடி

இளஞ்சீ யம்தொடர்ந் துமுடு குதலும்,

குழவி யிடைக்கா லிட்டெதிர்ந் துபொரும்

கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 2

இலங்கும் ஆழிக்கை எந்தை

266. அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும்

ஆனா யருமா நிரையும் அலறி,

எம்மைச் சரண்ஏன் றுகொள்ளென் றிரப்ப

இலங்கா ழிக்கைஎந் தையெடுத் தமலை,

தம்மைச் சரணென் றதம்பா வையரைப்

புனமேய் கின்றமா னினங்காண் மினென்று

கொம்பைப் புயக்குன் றர்சிலை குனிக்கும்

கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 3

தேவர் பெருமான் கொண்டு நின்ற மலை

267. கடுவாய்ச் சினவெங் கட்களிற் றினுக்குக்

கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்,

அடிவா யுறக்கை யிட்டெழப் பறித்திட்

டமரர் பெருமான் கொண்டுநின் றமலை,

கடல்வாய்ச் சென்றுமே கங்கவிழ்ந் திறங்கிக்

கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்

குடவாய் படநின் றுமழை பொழியும்

கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 4

பன்றியுருவாகிய ஈசன் எடுத்த மலை

268. வானத் திலுள்ளீர் வலியீ ருள்ளீரேல்

அறையோ வந்துவாங் குமினென் பவன்போல்,

ஏனத் துருவா கியஈஈ சனெந்தை

இடவ னெழவாங் கியெடுத் தமலை,

கானக் களியா னைதன்கொம் பிழந்து

கதுவாய் மதஞ்சோ ரத்தன்கை யெடுத்து

கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும்

கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 5

நெடுந்தோள் கொடுத்துத் தூக்கிப் பிடித்த மலை

269. செப்பா டுடைய திருமா லவன்தன்

செந்தா மரைக்கை விரலைந் தினையும்

கப்பா கமடுத் துமணி நெடுந்தோள்

காம்பா கக்கொடுத் துக்கவித் தமலை,

எப்பா டும்பரந் திழிதெள் ளருவி

இலங்கு மணிமுத் துவடம் பிறழ,

குப்பா யமென நின்றுகாட் சிதரும்

கோவர்த் தனமென்னும் கொற்றக்குடையே. 6

தாமோதரன் தாங்கிய தடவரை

270. படங்கள் பலவு முடைப்பாம் பரையன்

படர்பூ மியைத்தாங் கிக்கிடப் பவன்போல்,

தடங்கை விரலைந் தும்மல ரவைத்துத்

தாமோ தரன்தாங் குதட வரைதான்,

அடங்கச் சென்றிலங் கையையீ டழித்த

அனுமன் புகழ்பா டித்தங்குட் டன்களை,

குடங்கைக் கொண்டுமந் திகள்கண் வளர்த்தும்

கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 7

நாராயணன் காத்த மலை

271. சலமா முகில்பல் கணப்போர்க் களத்துச்

சரமா ரிபொழிந் தெங்கும்பூ சலிட்டு,

நலிவா னுறக்கே டகம்கோப் பவன்போல்

நாரா யணன்முன் முகங்காத் தமலை,

இலைவேய் குரம்பைத் தவமா முனிவர்

இருந்தார் நடுவே சென்றணார் சொறிய,

கொலைவாய்ச் சினவேங் கைகள்நின் றுறங்கும்

கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 8

முசுக்கணங்கள் குதி பயிற்றும் மலை

272. வன்பேய் முலையுண் டதோர்வா யுடையன்

வன்தூ ணெனநின் றதோர்வன் பரத்தை,

தன்பே ரிட்டுக்கொண் டுதர ணிதன்னில்

தாமோ தரன் தாங் குதட வரைதான்,

முன்பே வழிகாட் டமுசுக் கணங்கள்

முதுகில் பெய்துதம் முடைக்குட் டன்களை,

கொம்பேற் றியிருந் துகுதி பயிற்றும்

கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 9

கோவர்த்தனத்தை எடுத்தது இந்திர ஜாலமோ:

273. கொடியே றுசெந்தா மரைக்கை விரல்கள்

கோல முமழிந் திலவா டிற்றில,

வடிவே றுதிரு வுகிர்நொந் துமில

மணிவண் ணன்மலை யுமோர்சம் பிரதம்,

முடியே றியமா முகிற்பல் கணங்கள்

முன்னெற் றிநரைத் தனபோ ல,எங்கும்

குடியே றியிருந் துமழை பொழியும்

கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 10

வைகுந்தம் நண்ணுவர்

274. அரவில் பள்ளிகொண்ட டரவம் துரந்திட்

டரவப் பகையூர் தியவ முடைய,

குரவில் கொடிமுல் லைகள்நின் றுறங்கும்

கோவர்த் தனமென்னுங் கொற்றக் குடைமேல்,

திருவில் பொலிமா மறைவா ணர்புத்தூர்த்

திகழ்பட் டர்பிரான் சொன்னமா லைபத்தும்,

பரவு மனநன் குடைப்பத் தருள்ளார்

பரமா னவைகுந் தம்நண் ணுவரே. 11

அடிவரவு:அட்டு வழு அம்மை கடு வானத்தில் செப்பாடு படங்கள் சலம் வன்பேய் கொடி அரவில்-நாவலம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தழைகளும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  நாவலம்
Next