ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
மூன்றாம் பத்து
நாவலம்
பிருந்தாவனத்தில் கண்ணன் புல்லாங்குழல் இசைத்தான். அக்குழலோசையை ஆயர் பெண்கள், வேதமாதர்கள் கேட்டுத் தம் செயல்களை மறந்தனர். ஆநிரைகள் இசையிலே ஈடுபட்டு அசையாமல் நின்றன. செடி கொடிகளும் மரங்களும் மகிழ்ந்தன. அவ்வளவு என்ன? உலகத்தையே இசை மயக்கியது.
கண்ணன் வேய்ங்குழலூதிய சிறப்பு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
குழலிசையில் மயங்கிய கோவலர் சிறுமியர்
275. நாவலம் பெரிய தீவினில் வாழும்
நங்கை மீர்களிதோ ரற்புதங் கேளீர்,
தூவ லம்புரி யுடைய திருமால்
தூய வாயிற் குழலோசை வழியே,
கோவ லர்சிறுமி யரிளங் கொங்கை
குதுக லிப்பஉட லுளவிழ்ந்து,எங்கும்
காவ லுங்கடந் துகயிறு மாலை
யாகி வந்து கவிழ்ந்துநின் றனரே. 1
கோவிந்தன் குழலூதியதன் விளைவு
276. இடவ ணரைஇடத் தோளடு சாய்த்து
இருகை கூடப் புருவம்நெரிந் தேற,
குடவ யிறுபட வாய்கடை கூடக்
கோவிந்தன் குழல்கொ டூதின போது,
மடம யில்களடு மான்பிணை போலே
மங்கை மார்கள் மலர்க்கூந்த லவிழ,
உடைநெ கிழவோர் கையால் துகில்பற்றி
ஒல்கி யோடரிக்க ணோடநின் றனரே. 2
வாசுதேவன் நந்தகோன் இளவரசு
277. வானிள வரசு வைகுந்தக் குட்டன்
வாசுதே வன்மது ரைமன்னன்,நந்த
கோனிள வரசு கோவலர் குட்டன்
கோவிந்தன் குழல்கொ டூதின போது,
வானிளம் படியர் வந்துவந் தீண்டி
மனமுரு கிமலர்க் கண்கள் பனிப்ப,
தேனள வுசெறி கூந்த லவிழச்
சென்னிவேர்ப் பச்செவி சேர்த்துநின் றனரே. 3
குழலிசையில் மயங்கிய அரம்பையர்
278. தேனுகன் பிலம்பன் காளிய னென்னும்
தீப்பப் பூடுக ளடங்க உழக்கி,
கான கம்படி யுலாவி யுலாவிக்
கருஞ்சிறுக் கன்குழ லூதின போது,
மேனகை யடுதி லோத்தமை அரம்பை
உருப்பசி யரவர் வெள்கி மயங்கி,
வானகம் படியில் வாய்திறப் பின்றி
ஆடல் பாடலவை மாறினர் தாமே. 4
குழலோசை கேட்ட தும்புரு நாரதர் நிலை
279. முன்நர சிங்கம தாகி அவுணன்
முக்கி யத்தை முடிப்பான்மூ வுலகில்
மன்னரஞ் சும்மது சூதனன் வாயில்
குழலி னோசைசெவி யைப்பற்றி, வாங்க
நன்ன ரம்புடைய தும்புரு வோடு
நாரதனும் தம்தம் வீணை மறந்து,
கின்ன ரமிது னங்களும் தம்தம்
கின்ன ரம்தொடு கிலோமென் றனரே. 5
குழலின் அமுதகீதத்தில் தந்தருவர் மயங்கினர்
280. செம்ப ருந்தடங் கண்ணன்திரள் தோளன்
தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்,
நம்பர மன்இந் நாள்குழ லூதக்
கேட்டவர் கள்இட ருற்றன கேளீர்,
அம்பரந் திரியும் காந்தப்ப ரெல்லாம்
அமுத கீதவலை யால்சுருக் குண்டு,
நம்பர மன்றென்று நாணி மயங்கி
நைந்து சோர்ந்துகைம் மறித்துநின் றனரே. 6
குழலிசையில் மயங்கிய தேவர்களின் நிலை
281. புவியுள்நான் கண்டதோ ரற்புதங் கேளீர்
பூணி மேய்க்குமிளங் கோவலர் கூட்டத்து
அவையுள், நாகத் தணையான்குழ லூத
அமர லோகத் தளவுஞ்சென் றிசைப்ப,
அவியுணா மறந்து வானவ ரெல்லாம்
ஆயர் பாடி நிறையப்புகுந் தீண்டி,
செவியுள் நாவின் சுவைகொண்டு மகிழ்ந்து
கோவிந்த னைத்தொடர்ந் தென்றும்வி டாரே. 7
குழலிசையில் பறவைகளும் கறவைகளும் மயங்கின
282. சிறுவி ரல்கள் தடவிப்பரி மாறச்
செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப,
குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக்
கோவிந்தன் குழல்கொ டூதின போது,
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப,
கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக்
கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே. 8
குழலிசை கேட்ட மான்களின் நிலை
283. திரண்டெ ழுதழை மழைமுகில் வண்ணன்
செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே,
சுருண்டி ருண்டகுழல் தாழ்ந்த முகத்தான்
ஊது கின்றகுழ லோசை வழியே,
மருண்டுமான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும்கடை வாய்வழி சோர,
இரண்டு பாடும்துலுங் காப்புடை பெயரா
எழுதுசித் திரங்கள் போலநின் றனவே. 9
குழலிசை கேட்ட மரங்களின் செயல்
284. கருங்கண் தோகையிற் dL யணிந்து
கட்டிநன் குடுத்த பீதக ஆடை,
அருங்கல வுருவின் ஆயர் பெருமான்
அவனொரு வன்குழ லூதின போது
மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும்
மலர்கள் வீழும்வளர் கொம்புகள் தாழும்,
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற
பக்கம் நோக்கிஅவை செய்யும் குணமே. 10
சாதுக்களின் கோஷ்டியில் சேர்வர்
285. குழலி ருண்டுசுருண் டேறிய குஞ்சிக்
கோவிந்த னுடைய கோமள வாயில்,
குழல்மு ழைஞ்சுகளி னூடு குமிழ்த்துக்
கொழித்தி ழிந்தஅமு தப்புனல் தன்னை,
குழல்முழ வம்விளம் பும்புது வைக்கோன்
விட்டு சித்தன் விரித்ததமிழ் வல்லார்,
குழலை வென்றகுளிர் வாயின ராகிச்
சாது கோட்டியுள் கொள்ளப்படு வாரே. 11
(இந்த பாசுரங்களை நம்பிக்கையோடு பாராயணம் செய்வோர் தெய்வீக சங்கீதத் துறையில் புகழுடன் விளங்குவர்)
அடிவரவு:நாவலம் இட வான் தேனுகன் முன் செம் புவியுள் சிறு திரண்டு கருங்கண் குழல்- ஐய.