கதிராயிரம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாம் பத்து

கதிராயிரம்

ஸ்ரீமந் நாராயணனே இராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்தான்:பல அரிய செயல்களைச் செய்தான், 'அவர்களை நேரில் காணவில்லையே!அக்காலத்தில் பிறந்திருக்கக்கூடாதா!என்று நினைக்கத் தோன்றுகிறது!அவர்களை நேரில் கண்டவர்கள் உண்டோ என்று நினையாதீர். பலர் நேரில் கண்டு களித்தார்கள்'என்று ஆழ்வார் கூறுகிறார்.

பகவானைக் காண்பதற்குத் தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்

கலிநிலைத்துறை

நரசிம்மனே இராமன்

328. கதிரா யிரமிரவி கலந்தெறித்

தாலொத்த நீள்முடியன்,

எதிரில் பெருமை இராமனை

இருக்குமிடம் நாடுதிரேல்,

அதிரும் கழல்பொருதோள் இரணிபன்

ஆகம் பிளந்து,அரியாய்

உதிர மளைந்தகையோ டிருந்தானை

உள்ளவா கண்டாருளர். 1

சனகனின் வேள்விச்சாலை இராமன்

329. நாந்தகம் சங்குதண்டு நாணொலிச்

சார்ங்கம் திருச்சக்கரம்,

ஏந்து பெருமை இராமனை

இருக்குமிடம் நாடுதிரேல்,

காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக்

கடுஞ்சிலை சென்றிறுக்க,

வேந்தர் தலைவன் சனகராசன்தன்

வேள்வியிற் கண்டாருளர். 2

கடற்கரையில் இராமன்

330. கொலையானைக் கொம்புபறித்துக் கூடலர்

சேனை பொருதழிய

சிலையால் மராமர மெய்ததேவனைச்

சிக்கென நாடுதிரேல்,

தலையால் குரக்கினம் தாங்கிச்சென்று

தடவரை கொண்டடைப்ப

அலையார் கடறகரை வீற்றிருந்தானை

அங்குத்தைக் கண்டாருளர். 3

நப்பின்னைக்காக ஏழுவிடைகளையும் அடக்கிய கண்ணன்

331. தோயம் பரந்த நடுவுசூழலில்

தொல்லை வடிவுகொண்ட,

மாயக் குழவியதனை நாடுறில்

வம்மின் சுவடுரைக்கேன்,

ஆயர் மடமகள் பின்னைக்காகி

அடல்விடை யேழினையும்,

வீயப் பொருது வியர்த்துநின்றானை

மெய்ம்மையே கண்டாருளர். 4

ருக்மிணியைத் தேரேற்றிக் கொண்டு வந்த கண்ணன்

332. நீரேறு செஞ்சடை நீலகண்டனும்

நான்முகனும், முறையால்

சீரேறு வாசகஞ் செய்யநின்ற

திருமாலை நாடுதிரேல்,

வாரேறு கொங்கை உருப்பிணியை

வலியப் பிடித்துக்கொண்டு

தேரேற்றி, சேனை நடுவுபோர்

செய்யச் சிக்கெனக் கண்டாருளர். 5

துவாரகையிலே அரியணையில் கண்ணன்

333. பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்

புணர்முலை வாய்மடுக்க

வல்லாணை, மாமணி வண்ணனை

மருவுமிடம் நாடுதிரேல்,

பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு

பௌவ மெறிதுவரை,

எல்லாரும் சூழச்சிங் காசனத்தே

இருந்தானைக் கண்டாருளர். 6

அருச்சுனன் தேர்மிசை நின்ற கண்ணன்

334. வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த்

திருச்சக்கர மேந்துகையன்,

உள்ள இடம்வினவி லுமக்கிறை

வம்மின் சுவடுரைக்கேன்,

வெள்ளைப் புரவிக்குரங்கு வெல்கொடித்

தேர்மிசை முன்புநின்று,

கள்ளப் படைத்துணை யாகிப்பாரதம்

கைசெய்யக் கண்டாருளர். 7

ஆழிகொண்டு சூரியனை மறைத்த ஆயன்

335. நாழிகை கூறிட்டுக் காத்துநின்ற

அரசர்கள் தம்முகப்பே,

நாழிகை போகப் படைபொருதவன்

தேவகி தன்சிறுவன்,

ஆழிகொண் டன்றிரவி மறைப்பச்

சயத்திர தன் தலையை,

பாழி லுருளப் படைபொருதவன்

பக்கமே கண்டாருளர். 8

பூமிப்பிராட்டியோடு வராகப் பெருமாள்

336. மண்ணும் மலையும் மறிகடல்களும்

மற்றும் யாவுமெல்லாம்,

திண்ணம் விழுங்கியுமிழ்ந்ததேவனைச்

சிக்கென நாடுதிரேல்,

எண்ணற் கரியதோ ரேனமாகி

இருநிலம் புக்கிடந்து,

வண்ணக் கருங்குழல் மாதரோடு

மணந்தானைக் கண்டாருளர். 9

பரமனடி சேர்வர்

337. கரிய முகில்புரை மேனிமாயனைக்

கண்ட சுவடுரைத்து,

புரவி முகஞ்செய்து செந்நெலோங்கி

விளைகழ னிப்புதுவை,

திருவிற்பொலி மறைவாணன் பட்டர்பிரான்

சொன்ன மாலைபத்தும்,

பரவு மனமுடைப் பத்தருள்ளார்

பரமனடி சேர்வர்களே. 10

(விவசாயம் செய்வோர் வெள்ளைப்பரிமுகரான ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவரைத் தியானம் செய்து, விதைகள் நட்டால் விளைவு மிகப் பெரிதாகக் கிட்டும்.)

அடிவரவு:கதிர் நாந்தகம் கொலை தோயம் நீரேறு பொல்லா வெள்ளை நாழிகை மண்ணும் கரிய - அலம்பா.


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is நெறிந்த கருங்குழல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  அலம்பா வெருட்டா
Next