ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
மூன்றாம் பத்து
நெறிந்த கருங்குழல்
இராம தூதனாக இலங்கைக்குச் சென்ற (அநுமன்) திருவடி அசோகவனத்தில் சீதா பிராட்டியைக் காண்கிறார். பல அடையாளங்களைச் சொல்லித் தான் இராமதூதன் என்பதை உணரவைக்கிறார். இராமன் கொடுத்தனுப்பிய மோதிரத்தைக் கொடுத்து மகிழ்விக்கிறார். இவ்வரிய செயல்களைக் கூறி மகிழ்கிறார் ஆழ்வார். ஒருவன் இராமபக்தன் என்பதற்கு இத்திருமொழியைக் கூறுவதும் ஓரடையாளம்.
சீதைக்கு அனுமன் கூறிய அடையாளம்
கலி விருத்தம்
வில்லால் பரசுராமனின் தவவலிமையைச் சிதைத்தது
318. நெறிந்தகருங் குழல்மடவாய்!
நின்னடியேன் விண்ணப்பம்,
செறிந்தமணி முடிச்சனகன்
சிலையறுத்து நினைக்கொணர்ந்த
தறிந்து,அரசு களைகட்ட
அருந்தவத்தோ னிடைவிலங்க,
செறிந்தசிலை கொடுதவத்தைச்
சிதைத்ததுமோ ரடையாளம். 1
சீதை மல்லிகை மாலையால் இராமனைக் கட்டியது
319. அல்லியம்பூ மலர்க்கோதாய்!
அடிபணிந்தேன் விண்ணப்பம்,
சொல்லுகேன் கேட்டருளாய்
துணைமலர்க்ண் மடமானே,
எல்லியம்போ தினிதிருத்தல்
இருந்ததோ ரிடவகையில்,
மல்லிகைமா மாலைகொண்டங்
கார்த்ததுமோ ரடையாளம். 2
இலக்குமணனோடு காடு சென்றது
320. கலக்கியமா மனத்தனளாய்க்
கைகேசி வரம்வேண்ட,
மலக்கியமா மனத்தனனாய்
மன்னவனும் மறாதொழிய,
'குலக்குமரா!காடுறையப்
போ'என்று விடைகொடுப்ப,
இலக்குமணன் தன்னொடுமங்
கேகியதோ ரடையாளம். 3
குகனோடு தோழமை கொண்டது
321. வாரணிந்த முலைமடவாய்!
வைதேவீ!விண்ணப்பம்,
தேரணிந்த அயோத்தியர்கோன்
பெருந்தேவீ!கேட்டருளாய்,
கூரணிந்த வேல்வலவன்
குகனோடும் கங்கைதன்னில்,
சீரணிந்த தோழமையைக்
கொண்டதுமோ ரடையாளம். 4
சித்திரகூடத்தில் பரதன் இராமனை வணங்கியது
322. மானமரு மென்னோக்கி!
வைதேவீ!விண்ணப்பம்,
கானமரும் கல்லதர்போய்க்
காடுறைந்த காலத்து,
தேனமரும் பொழிற்சாரல்
சித்திரகூ டத்திருப்ப,
பான்மொழியாய்!பரதநம்பி
பணிந்துமோ ரடையாளம். 5
அத்திரத்தினால் காகாசுரன் கண்ணை அறுத்தது
323. சித்திரகூ டத்திருப்பச்
சிறுகாக்கை முலைதீண்ட,
அத்திரமே கொண்டெறிய
அனைத்துவரும் திரிந்தோடி,
'வித்தகனே!இராமாவோ!
நின்னபயம்!'என்றழைப்ப,
அத்திரமே அதன்கண்ணை
அறுத்ததுமோ ரடையாளம். 6
இலக்குமணன் சீதையை விட்டுப்பிரிந்தது
324. மின்னொத்த நுண்ணிடையாய்
மெய்யடியேன் விண்ணப்பம்,
பொன்னொத்த மானொன்று
புகுந்தினிது விளையாட,
நின்னன்பின் வழிநின்று
சிலைபிடித்தெம் பிரானேக,
பின்னே அங் கிலக்குமணன்
பிரிந்துமோ ரடையாளம். 7
மோதிரத்தை அடையாளமாகக் காட்டியது
325. மைத்தகுமா மலர்க்குழலாய்!
வைதேவீ!விண்ணப்பம்,
ஒத்தபுகழ் வானரக்கோன்
உடனிருந்து நினைத்தேட,
அத்தகுசீ ரயோத்தியர்கோன்
அடையாள மிவைமொழிந்தான்,
இத்தகையான் அடையாளம்
ஈதவன்கைம் மோதிரமே. 8
சீதை மோதிரம் பெற்று உகந்தது
326. திக்குநிறை புகழாளன்
தீவேள்விச் சென்றந்நாள்,
மிக்கபெருஞ் சபைநடுவே
வில்லிறுத்தான் மோதிரங்கண்டு,
'ஒக்குமா லடையாளம்
அனுமான்!'என்று உச்சிமேல்
வைத்துக்கொண்டு, உகந்தனளால்
மலர்க்குழலாள் சீதையுமே. 9
இமையவரோடு ஒன்றுவர்
327. வாராரும் முலைமடவாள்
வைதேவீ தனைக்கண்டு,
சீராரும் திறல்அனுமன்
தெரிந்துரைத்த அடையாளம்,
பாராரும் புகழ்ப்புதுவைப்
பட்டர்பிரான் பாடல்வல்லார்,
ஏராரும் வைகுந்தத்
திமையவரோ டிருப்பாரே. 10
அடிவரவு: நெறிந்த அல்லி கலக்கிய வாரணி மான சித்திர கூடத்து மின் மைத்தகு திக்கு வாராரும் - கதிர்.