உருப்பிணி நங்கை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாம் பத்து

உருப்பிணி நங்கை

திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் அழகர். இவனே இராமன்:அழகன் அமரும் மலை!அழகும் குளிர்ச்சியும் வெற்றியுமுடைய மலை, குறத்தியர் குறிஞ்சிப் பண்பாடிக் கோவிந்தனை மகிழ்விக்கும் மலை!அணி பணமாயிரங்களார்ந்த திருவனந்தன்மேல் படுத்திருக்கும் பெருமாள் ஆளும் மலை. வேதாந்த விழுப்பொருளாகிற அழகர் நிலைத்து வாழும் மலை.

திருமாலிருஞ்சோலையின் மாட்சி

கலி விருத்தம்

ருக்மிணிப் பிராட்டியை மீட்டவன் மலை

349. உருப்பிணி நங்கைதன்னை

மீட்பான்தொடர்ந் தோடிச்சென்ற,

உருப்பனை யோட்டிக்கொண்டிட்

டுறைத்திட்ட உறைப்பன்மலை

பொருப்பிடைக் கொன்றைநின்று

முறையாழியுங் காசுங்கொண்டு

விருப்பொடு பொன்வழங்கும்

வியன்மாலிருஞ் சோலையதே. 1

மணிவண்ணன் மலை திருமாலிருஞ்சோலை

350. கஞ்சனும் காளியனும்

களிறும்மரு துமெருதும்,

வஞ்சனை யில்மடிய

வளர்ந்தமணி வண்ணன்மலை,

நஞ்சுமிழ் நாகமெழுந்

தணவிநளிர் மாமதியை,

செஞ்சுடர் நாவளைக்கும்

திருமாலிருஞ் சோலையதே. 2

பொன்னரிமாலைகள் சூழ் பொழில் மாலிருஞ்சோலை

351. மன்னு நரகன் தன்னைச்

சூழ்போகி வளைத்தெறிந்து,

கன்னி மகளிர்தம்மைக்

கவர்ந்தகடல் வண்ணன்மலை,

புன்னை செருந்தியடு

புனவேங்கையும் கோங்கும்நின்று,

பொன்னரி மாலைகள்சூழ்

பொழில்மாலிருஞ் சோலையதே. 3

குறத்தியர் பண்பாடிக் கூத்தாடும் திருமாலிருஞ்சோலை

352. மாவலி தன்னுடைய

மகன்வாணன் மகளிருந்த,

காவலைக் கட்டழித்த

தனிக்காளை கருதும்மலை,

கோவலர் கோவிந்தனைக்

குறமாதர்கள் பண்குறிஞ்சிப்

பாவொலி பாடிநடம்

பயில்மாலிருஞ் சோலையதே. 4

அழகன் அலங்காரன் மலை திருமாலிருஞ்சோலை மலை

353. பலபல நாழஞ்சொல்லிப்

பழித்தசிசு பாலன்றன்னை,

அலவலை மைதவிர்த்த

அழகன் அலங் காரன்மலை,

குலமலை கோலமலை

குளிர்மாமலை கொற்றமலை,

நிலமலை நீண்டமலை

திருமாலிருஞ் சோலையதே. 5

வண்டுகள் பாடும் திருமாலிருஞ்சோலை மலை

354. பாண்டவர் தம்முடைய

பாஞ்சாலி மறுக்கமெல்லாம்,

ஆண்டங்கு நூற்றுவர்தம்

பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை,

பாண்தகு வண்டினங்கள்

பண்கள்பாடி மதுப்பருக,

தோண்ட லுடையமலை

தொல்லைமாலிருஞ் சோலையதே. 6

தெள்ளருவி பெருகும் மலை மாலிருஞ்சோலை மலை

355. கனங்குழை யாள்பொருட்டாக்

கணைபாரித்து, அரக்கர்தங்கள்

இனம்கழு வேற்றுவித்த

எழில்தோளெம் மிரான்மலை,

கனங்கொழி தெள்ளருவி

வந்துசூழ்ந்தகல் ஞாலமெல்லாம்,

இனங்குழு வாடும்மலை

எழில்மாலிருஞ் சோலையதே. 7

தேவர்கள் பிரதட்சிணம் செய்யும் மலை

356. எரிசித றும்சரத்தால்

இல்ங்கையினை, தன்னுடைய

வரிசிலை வாயிற்பெய்து

வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த,

அரைய னமரும்மலை

அமரரொடு கோனும்சென்று,

திரிசுடர் சூழும்மலை

திருமாலிருஞ் சோலையதே. 8

விமலன் மாழும்மலை திருமாலிருஞ் சோலை

357. கோட்டுமண் கொண்டிடந்து

குடங்கையில்மண் கொண்டளந்து,

மீட்டுமஃ துண்டுமிழ்ந்து

விளையாடு விமலன்மலை,

ஈட்டிய பல்பொருள்கள்

எம்பிரானுக் கடியுறையென்று,

ஒட்டருந்தண் சிலம்பாறுடை

மாலிருஞ் சோலையதே. 9

அனந்தசயனன் ஆளும்மலை திருமாலிருஞ்சோலை

358. ஆயிரம் தோள்பரப்பி

முடியாயிர மின்னிலக,

ஆயிரம் பைந்தலைய

அனந்தசயன னாளும்மலை,

ஆயிர மாறுகளும்

சுனைகள்பல வாயிரமும்,

ஆயிரம்பூம் பொழிலுடை

மாலிருஞ் சோலையதே. 10

வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு

359. மாலிருஞ் சோலையென்னும்

மலையையுடைய யமலையை,

நாலிரு மூர்த்திதன்னை

நால்வேதக் கடலமுதை,

மேலிருங் கற்பகத்தை

வேதாந்த விழுப்பொருளின்,

மேலிருந்த விளக்கை

விட்டுசித்தன் விரித்தனனே! 11

அடிவரவு:உருப்பிணி கஞ்சன் மன்னு மாவலி பலபல பாண்டவர் கனம் எரி கோட்டு ஆயிரம் மாலிருஞ்சோலை - நாவகாரியம்.


 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is அலம்பா வெருட்டா
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  நாவ காரியம்
Next