நாவ காரியம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாம் பத்து

நாவ காரியம்

திருக்கோட்டியூரை மங்களாசாஸனம் செய்கிறது இத்திரு மொழி!'இங்கிருக்கும் எம்பெருமான் மிகக் கருணை கொண்டவன், சோலைகள் நிரம்பிய ஊர் இது. இங்கு வாழத் தவம் செய்திருக்க வேண்டும். திருக்கோட்டியூர் எம்பெருமானை நினையாதவர்கள், அவன் பெயரைச் சொல்லாதவர்கள் பாக்கியம் பெறாதவர்கள். அவனைப் போற்றுவோர் என் தலைவர்கள்'என்கிறார் ஆழ்வார்.

மனம் வாக்கு காயம் ஆகியவற்றைக்கொண்டு திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும் அனுபவிக்காதவரை இழித்தும் கூறல்

கந்தக் கலி விருத்தம்

பாவகாரிகளை எப்படிப் படைத்தான் பிரம்மன்?

360. நாவகாரியம் சொல்லிலாதவர்

நாடொறும்விருந் தோம்புவார்,

தேவகாரியம் செய்துவேதம்

பயின் றுவாழ்திருக் கோட்டியூர்,

மூவர்காரிய மும்திருத்தும்

முதல்வனைச்சிந்தி யாத,அப்

பாவகாரிக ளைப்படைத்தவன்

எங்ஙனம்படைத் தான்கொலோ! 1

பகவானை நினையாதவர்கள் ஏன் பிறந்தனர்?

361. குற்றமின் றிக் குணம்பெருக்கிக்

குருக்களுக்கனு கூலராய்,

செற்றமொன்றுமி லாதவண்கையி

னார்கள்வாழ்திருக் கோட்டியூர்,

துற்றியேழுல குண்டதூமணி

வண்ணன்தன்னைத் தொழாதவர்,

பெற்றதாயர் வயிற்றினைப்பெரு

நோய்செய்வான் பிறந்தார்களே. 2

கை பெற்ற பயன் உணவு உண்ணவா?

362. வண்ணநன்மணி யும்மரகத

மும்மழுத்தி நிழலெழும்

திண்ணைசூழ்,திருக் கோட்டியூர்த்திரு

மாலவன்திரு நாமங்கள்,

எண்ணகண்ட விரல்களால் இறைப்

பொழுதுமெண்ணகி லாதுபோய்,

உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்

கவளமுந்துகின் றார்களளே. 3

பருகும் நீரும் உடுக்கும் உடையும் பாவம் செய்தனவோ!

363. உரகமெல்லணை யான்கையிலுறை

சங்கம்போல்மட அன்னங்கள்,

நிரைகணம்பரந் தேறும்செங்கம

லவயல்திருக் கோட்டியூர்,

நரகநாசனை நாவில்கொண்டழை

யாதமானிட சாதியர்,

பருகுநீரு முடுக்கும்கூறையும்

பாவஞ்செய்தன தாங்கொலோ. 4

பூமிக்குப் பாரங்கள்

364. ஆமையின்முது கத்திடைக்குதி

கொண்டுதூமலர் சாடிப்போய்,

தீமைசெய்திள வாளைகள்விளை

யாடுநீர்த்திருக் கோட்டியூர்,

நேமிசேர்தடங் கையினானை

நினைப்பிலாவலி நெஞ்சுடை,

பூமிபாரங்க ளுண்ணுஞ்சோற்றினை

வாங்கிப்புல்லைத் திணிமினே. 5

பக்தர்களுடைய பாத தூளியின் சிறப்பு

365. பூதமைந்தொடு வேள்வியைந்து

புலன்களைந்து பொறிகளால்,

ஏதமொன்றுமி லாதவண்கையி

னார்கள்வாழ்திருக் கோட்டியூர்,

நாதனைநர சிங்கனைநவின்

றேத்துவார்க ளுழக்கிய,

பாததூளி படுதலாலிவ்

வுலகம்பாக்கியம் செய்ததே. 6

என்ன தவம் செய்தார்களோ?

366. குருந்தமொன்றொசித் தானொடுஞ்சென்று

கூடியாடி விழாச்செய்து,

திருந்துநான்மறை யோரிராப்பகல்

ஏத்திவாழ்திருக் கோட்டியூர்,

கருந்தடமுகில் வண்ணனைக்கடைக்

கொண்டுகைதொழும் பக்தர்கள்,

இருந்தவூK லிருக்கும்மானிடர்

எத்தவங்கள்செய் தார்கொலோ. 7

செல்வநம்பியை அடிமை கொண்டவன்

367. நளிர்ந்தசீலன் நயாசலன் அபி

மானதுங்கனை,நாடொறும்

தெளிந்தசெல்வனைச் சேவகங்கொண்ட

செங்கண்மால்திருக் கோட்டியூர்,

குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம்

பாடுவாருள்ள நாட்டினுள்

விளைந்ததானிய முமிராக்கதர்

மீதுகொள்ளகி லார்களே. 8

பக்தர்கள் பகவானின் சின்னங்கள்

368. கொம்பினார்பொழில் வாய்க்குயிலினம்

கோவிந்தன்குணம் பாடுசீர்,

செம்பொனார்மதில் சூழ்செழுங்கழ

னியுடைத்திருக் கோட்டியூர்,

நம்பனைநர சிங்கனைநவின்

றேத்துவார்களைக் கண்டக்கால்,

எம்பிரான் றன சின்னங்களிவர்

இவரென்றாசைகள் தீர்வனே. 9

அன்னதான வள்ளல்கள் வாழுமிடம் திருக்கோட்டியூர்

369. காசின்வாய்க்கரம் விற்கிலும்கர

வாதுமாற்றிலி சோறிட்டு,

தேசவார்த்தைப டைக்கும்வண்கையி

னார்கள்வாழ்திருக் கோட்டியூர்,

கேசவா!புரு டோத்தமா!கிளர்

சோதியார்!குற ளாவென்று,

பேசுவாரடி யார்களெந்தம்மை

விற்கவும் பெறுவார்களே. 10

இருடீகேசனுக்கு ஆளாவர்

370. சீதநீர்புடை சூழ்செழுங்கழ

னியுடைத்திருக் கோட்டியூர்,

ஆதியானடி யாரையும்அடி

மையின்றித்திரி வாரையும்,

கோதில்பட்டர் பிரான்குளிர்புது

வைமன்விட்டு சித்தன்சொல்,

ஏதமின் றியு ரைப்பவர்

இருடீகேசனுக்குக் காளரே. 11

(இராமநுஜரின் ஐந்து ஆசாரியர்களுள் திருக்கோட்டியூர் நம்பி ஒருவர். இராமாநுஜர் இவரிடம் சரமச்லோகார்த்தம் கேட்டார். தகுதியுடையவர்களுக்குத் திருமந்திரப் பொருளை இராமாநுஜர் வெளியிட்ட இடமும் திருக்கோட்டியூரே.)

அடிவரவு:நாவகாரியம் குற்றம் வண்ணம் உரகம் ஆமை பூதம் குருந்தம் நளிர்ந்த கொம்பின் காசின் சீதநீர்- ஆசைவாய்.


 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is உருப்பிணி நங்கை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஆசைவாய்
Next