மாதவத்தோன்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாம் பத்து

மாதவத்தோன்

ஆழ்வார் திருவரங்கத்தே கங்கையின் புனிதமாய காவிரியின் நடுவில் சயனித்திருக்கும் நம்பெருமாளிடம் ஈடுபடுகிறார். 'இவனே கண்ணன்;ஆசார்ய பக்தி கொண்டவன்:பார்த்தஸாரதியாக இருந்து பாண்டவர்களைக் காப்பாற்றியவன். இவனே

எல்லா அவதாரங்களையும் மேற்கொண்டவன். குளிர்ந்த சோலைகள் நிரம்பியது திருவரங்கம். தென்றல் தவழும் இடம்;வண்டுகளும் பகவானின் குணங்களைப் பாடுமிடம் திருவரங்கம்'என்கிறார்!

திருவரங்கம் பெரிய கோயிலின் மகிமை

தரவு கொச்சகக் கலிப்பா

சாந்தீபினியின் மகனைக் கொடுத்தவனூர் அரங்கம்

402. மாதவத்தோன் புத்திரன்போய்

மறிகடல்வாய் மாண்டானை

ஓதுவித்த தக்கணையா

உருவுருவே கொடுத்தானூர்,

தோதவத்தித் தூய்மறையோர்

துறைபடியத் துளும்பியெங்கும்

போதில்வைத்த தேன்சொரியும்

புனலரங்க மென்பதுவே. 1

ஸ்ரீவைஷ்ணவர் வாழுமிடம் திருவரங்கம்

403. பிறப்பகத்தே மாண்டொழிந்த

பிள்ளைகளை நால்வரையும்,

இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்

தொருப்படுத்த வுறைப்பனூர்,

மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்

வருவிருந்தை யளித்திருப்பார்

சிறப்புடைய மறையவர்வாழ்

திருவரங்க மென்பதுவே. 2

பரீக்ஷி த்தைப் பிழைப்பித்தவன் வாழுமிடம் திருவரங்கம்

404. மருமகன் றன் சந்ததியை

உயிர்மீட்டு மைத்துனன் மார்,

உருமகத்தே வீழாமே

குருமுகமாய்க் காத்தானூர்,

திருமுகமாய்ச் செங்கமலம்

திருநிறமாய்க் கருங்குவளை,

பொருமுகமாய் நின்றலரும்

புனலரங்க மென்பதுவே. 3

இராக்கதரை அழித்தவனூர் திருவரங்கம்

405. கூன்தொழுத்தை சிதகுரைப்பக்

கொடியவள்ளாய்க் கடியசொற்கேட்டு,

ஈன்றெடுத்த தாயரையும்

இராச்சியமு மாங்கொழிய,

கான்தொடுத்த நெறிபோகிக்

கண்டகரைக் களைந்தானூர்,

தேன்தொடுத்த மலர்ச்சோலைத்

திருவரங்க மென்பதுவே. 4

இராவணனைக் கொன்றவனூர் திருவரங்கம்

406. பெருவரங்க ளவைபற்றிப்

பிழக்குடைய இராவணனை,

உருவரங்கப் பொருதழித்திவ்

வுலகினைக்கண் பெறுத்தானூர்,

குரவரும்பக் கோங்கலரக்

குயில்கூவும் குளிர்பொழில்சூழ்,

திருவரங்க மென்பதுவே

என்திருமால் சேர்விடமே. 5

அசுரர்களை ஆழியால் அழித்தவனூர் திருவரங்கம்

407. கீழுலகி லசுரர்களைக்

கிழங்கிருந்து கிளாராமே,

ஆழிவிடுத் தவருடைய

கருவழித்த அழிப்பனூர்,

தாழைமட லூடுரிஞ்சித்

தவளவண்ணப் பொடியணிந்து,

யாழினிசை வண்டினங்கள்

ஆளம்வைக்கு மரங்கமே. 6

காவிரி அரங்கனின் அடிதொழுமிடம் திருவரங்கம்

408. கொழுப்புடைய செழுங்குருதி

கொழித்திழிந்து குமிழ்த்தெறிய,

பிழக்குடைய அசுரர்களைப்

பிணம்படுத்த பெருமானூர்,

தழுப்பரிய சந்தனங்கள்

தடைவரைவா யீர்த்துக்கொண்டு,

தெழிப்புடைய காவிரிவந்

தடிதொழும்சீ ரரங்கமே. 7

வண்டுகள் மல்லிகை வெண்சங்கூதும் மதிலரங்கம்

409. வல்லெயிற்றுக் கேழலுமாய்

வாளெயிற்றுச் சீயமுமாய்,

எல்லையில்லாத் தரணியையும்

அவுணனையும் இடந்தானூர்,

எல்லியம்போ திருஞ்சிறைவண்

டெம்பெருமான் குணம்பாடி,

மல்லிகைவெண் சங்கூதும்

மதிலரங்க மென்பதுவே. 8

நீலநிற நெடுமால் ஊர் ஸ்ரீரங்கம்

410. குன்றாடு கொழுமுகில்போல்

குவளைகள்போல் குரைகடல்போல்,

நின்றாடு கணமயில்போல்

நிறமுடைய நெடுமாலூர்,

குன்றூடு பொழில்நுழைந்து

கொடியிடையார் முலையணவி,

மன்றூடு தென்றலுலாம்

மதிலரங்க மென்பதுவே. 9

திருவரங்கன் புகழ் பாடுவோர்க்கு யாம் அடியோம்

411. பருவரங்க ளவைபற்றிப்

படையாலித் தெழுந்தானை,

செருவரங்கப் பொருதழித்த

திருவாளன் திருப்பதிமேல்,

திருவரங்கத் தமிழ்மாலை

விட்டுசித்தன் விரித்தனகொண்டு,

இருவரங்க மெரித்தானை

ஏத்தவல்லா ரடியோமே. 10

அடிவரவு:மாதவத்தோன் பிறப்பு மருமகன் கூன் பெருகீழுலகில் கொழுப்பு வல்லெயிற்று குன்று பரு - மரவடியை.



 



 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தங்கையை மூக்கும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  மரவடியை
Next