ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
நாலாம் பத்து
தங்கையை மூக்கும்
வட நாட்டிலுள்ள திருப்பதிகளுள் கண்டமென்னும் கடி நகர் ஒன்று. இது கங்கைக் கரையிலுள்ளது. இங்கு புருஷோத்தமன் என்ற பெயரோடு பகவான் எழுந்தருளி இருக்கிறான். அவ்வூரின் பெருமைகளை இத்திருமொழி கூறுகிறது. பகவானைக் காட்டிலும் அவன் வாழும் திவ்யதேசமே அடியார்களுக்குப் பெரும்பேறு அளிக்கவல்லது. வடமதுரை, சாளக்கிராமம், ஸ்ரீவைகுண்டம், துவாரகை, அயோத்தி முதலிய தலங்களில் வாழும் எம்பெருமானே இவ்வூரில் வாழ்கிறான். இவனை வணங்கி உய்வு பெறுவீர்களாக என்கிறார் ஆழ்வார்.
தேவப்ரயாகை என்று வழங்கப்படும்கண்டமென்னும் கடிநகரின் பெருமை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
புருடோத்தமனின் இருக்கை கண்டங் கடிநகர்
391. தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்
தடிந்தவெம் தாச ரதிபோய்,
எங்கும் தன்புக ழாவிருந் தரசாண்ட
எம்புரு டோத்தம னிருக்கை,
கங்கை கங்கையென்ற வாசகத் தாலே
கடுவினை களைந்திட கிற்கும்,
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
கண்டமென் னும்கடி நகரே. 1
எம்பெருமானின் ஸ்ரீபாத தீர்த்தமே கங்கை
392. சலம்பொதி யுடம்பில் தழலுமிழ் பேழ்வாய்ச்
சந்திரன் வெங்கதி ரஞ்ச,
மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின்
மால்புரு டோத்தமன் வாழ்வு,
நலந்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
நாரணன் பாதத்து ழாயும்,
கலந்திழி புனலால் புகர்படு கங்கைக்
கண்டமென் னும்கடி நகரே. 2
அசுரர்களை அழித்தவனின் இருக்கை கண்டமென்னும் கடிநகர்
393. அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி
அழலுமி ழாழிகொண் டெறிந்துஅங்-
கெதிர்முக வசுரர் தலைகளை யிடறும்
எம்புரு டோத்தம னிருக்கை,
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில்
சங்கரன் சடையினில் தங்கி,
கதிர்முக மணிகொண் டிழிபுனல் கங்கைக்
கண்டமென் னும்கடி நகரே. 3
நம் புருடோத்தமன் நகர்
394. இமையவ ரிறுமாந் திருந்தர சாள
ஏற்றுவந் தெதிர்பொரு சேனை,
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்
நம்புரு டோத்தமன் நகர்தான்,
இமவந்தந் தொடங்கி யிருங்கட லளவும்
இருகரை யுலகிரைத் தாட,
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்
கண்டமென் னும்கடி நகரே. 4
பாவத்தை அழிக்கும் கங்கை
395. உழுவதோர் படையு முலக்கையும் வில்லும்
ஒண்சுட, ராழியும் சங்கும்,
மழுவொடு வாளும் படைக்கல முடைய
மால்புரு டோத்தமன் வாழ்வு,
எழுமையுங் கூடி யீண்டிய பாவம்
இறைப்பொழு தளவினி லெல்லாம்,
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்
கண்டமென் னும்கடி நகரே. 5
அருந்தவ முனிவர் ஸ்நானம் செய்யும் கங்கை
396. தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம்
சலசல பொழிந்திடக் கண்டு,
மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை
மால்புரு டோத்தமன் வாழ்வு,
அலைப்புடைத் திரைவா யருந்தவ முனிவர்
அவபிர தம்குடைந் தாட,
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்
கண்டமென் னும்கடி நகரே. 6
மால்புருடோத்தமன் வாழ்வு கண்டமென்னும் கடிநகர்
397. விற்பிடித் திறுத்து வேழத்தை முறுக்கி
மேலிருந் தவன்தலை சாடி,
மற்பொரு தெழப்பாய்ந் தரையனை யுதைத்த
மால்புரு டோத்தமன் வாழ்வு,
அற்புத முடைஐ ராவத மதமும்
அவரிளம் படியரொண் சாந்தும்,
கற்பக மலரும் கலந்திழி கங்கைக்
கண்டமென் னும்கடி நகரே. 7
வேள்விப் புகை கமழும் கண்டங் கடிநகர்
398. திரைபொரு கடல்சூழ் திண்மதில் துவரை
வேந்துதன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய வரசினை யருளும்
அரிபுரு டோத்தம னமர்வு,
நிரைநிரை யாக நெடியன யூபம்
நிரந்தர மொழுக்குவிட்டு,இரண்டு
கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கைக்
கண்டமென் னும்கடி நகரே. 8
கடலைக் கலக்கும் கங்கை
399. வடதிசை மதுரை சாளக்கி ராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி,
இடமுடை வதரி யிடவகை யுடைய
எம்புரு டோத்தம னிருக்கை,
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத்
தலைப்பற்றிக் கரைமரஞ் சாடி,
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்
கண்டமென் னும்கடி நகரே. 9
பிரணவத்தினால் சொல்லப்படுகிறவன் புருடோத்தமன்
400. மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால்
மூன்றெழுத் தாக்கி,மூன் றெழுத்தை
ஏன்றுகொண் டிருப்பார்க் கிரக்கநன் குடைய
எம்புரு டோத்தம னிருக்கை,
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி
மூன்றினில் மூன்றுரு வானான்,
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்
கண்டமென் னும்கடி நகரே. 10
கங்கையில் நீராடிக் கைங்கர்யம் செய்த பயன்
401. பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்
துறைபுரு டோத்தம னடிமேல்,
வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன்
விட்டுசித் தன்விருப் புற்று,
தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை
தங்கிய நாவுடை யார்க்கு,
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே
குளித்திருந் தகணக் காமே. 11
அடிவரவு:தங்கையை சலம் அதிர் இமையவர் உழுவதோர் தலை வில் திரை வடதிசை மூன்று பொங்கு - மாதவத்தோன்.