ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
நாச்சியார் திருமொழி
வாரணமாயிரம்
கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கனவு கண்டாள்:'தோழி!நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன;பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப் பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிட்ப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னை பாணிக்கிரகணம் செய்துக்கொள்கிறான். கையை பிடித்துக்கொண்டு b வலம் வருகிறான். என் காலைப் பிடித்து அம்மியின்மேல் எடுத்துவைக்கிறான். இவை எல்லாம் விரைவிலேயே நிறைவேறக் கண்ணன் அருள்வானோ!'என்று தோழியிடம் கூறி மகிழ்கிறாள்.
மாயவன் தன்னை மணஞ்செயக் கண்ட
தூய நற்கனவைத் தோழிக்குரைத்தல்
கலி விருத்தம்
திருமண ஏற்பாடுகள் நடைபெறக் கனாக்ண்டேன்
556. வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான். 1
கோவிந்தனாகிய காளைவரக் கனாக்கண்டேன்
557. நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2
எனக்கு மணமாலை சூட்டக் கனாகண்டேன்
558. இந்திர முள்ளிட்ட, தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3
கங்கனம் கட்டுவதாகக் கனாக்கண்டேன்
559. நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
மதுரை மன்னன் வரக் கனாக்கண்டேன்
560. கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5
மதுசூதன் என் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன்
561. மத்தளம் கொட்வ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6
கண்ணன் என்கைபற்றித் தீவலம் செய்யக் கனாக்கண்டேன்
562. வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7
நான் அம்மி மிதிப்பதாகக் கனாக்கண்டேன்
563. இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8
பொரிமுகம் தட்டுவதாகக் கனாக்கண்டேன்
564. வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9
மணநீரால் மஞ்சனமாட்டுவதாகக் கனாக்கண்டேன்
565. குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல iF வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடன்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10
நன்மக்களைப் பெற்று மகிழ்வர்
566. ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வாரே. 11
(பகவானுக்கு இடாத அன்னமும், வாரணமாயிரம் அநுஸந்திக்காத திருமணமும் பயனற்றவை. ஸ்ரீவைஷ்ணவர்கள் திரு மாளிகைகளில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் திருக்கல்யாணம் என்றே சொல்லலாம். கல்யாணத்தில் சீர் பாடல் கட்டத்தில் வாரணமாயிரம் அநுஸந்திப்பது வழக்கம். இப்பாடல்களைக் கேட்கும் புதுமணத் தம்பதிகள் விரைவிலேயே ஞானமும் பக்தியும் நிறைந்த நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்.)
அடிவரவு:வாரணம் நாளை இந்திரன் நாற்றிசை கதிர் மத்தளம் வாய் இம்மைக்கும் வரிசிலை குங்குமம் ஆயன் -- கருப்பூரம்.