கருப்பூரம் நாறுமோ

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாச்சியார் திருமொழி

கருப்பூரம் நாறுமோ

'வெண் சங்கே!பாஞ்சசன்னியமே!பஞ்சாயுதங்களுள் நீயே பெரும்பேறு பெற்றவன்!நீ அடைந்த பாக்கியத்தை என்னவென்று கூறுவது!கண்ணபிரானின் திருப்பவளச் செவ்வாயோடு தொடர்பு கொண்டுள்ளாய்!வாயமுதைப் பருகுகிறாய்!நீ பெற்ற செல்வமே பெருஞ்செல்வம்!இந்திரனும் உனக்கு நிகராக மாட்டான்!ஆனால் ஒன்று!எல்லா கோபியர்களுக்கும் உரியதான கண்ணன் வாயமுதத்தை ஆக்கிரமித்து c ஒருவனே பருகுவது நல்லதன்று!'என்று கூறுகிறாள் ஆண்டாள்.

பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடுஞ் சுற்றமாக்கல்

கலி விருத்தம்

மாதவனின் வாய்ச்சுவையும் பரிமளமும் எத்தகையவை!

567. கருப்பூரம் நாறுமோ

கமலப்பூ நாறுமோ,

திருப்பவளச் செவ்வாய்தான்

தித்தித்தி ருக்குமோ,

மருப்பொசித்த மாதவன்றன்

வாய்ச்சுவையும் நாற்றமும்,

விருப்புற்றுக் கேட்கின்றேன்

சொல்லாழி வெண்சங்கே! 1

சங்கே!நீ பிறந்தது எங்கே!வளர்ந்தது எங்கே!

568. கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்

உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத்

திடரில் குடியேறித் தீய வசுரர்,

நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே! 2

கோலச் சங்கே!வாசுதேவன் கையில் வீற்றிருக்கிறாயே!

569. தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,

இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்

வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,

குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே! 3

வலம்புரியே!இந்திரனும் உனக்கு நிகராகமாட்டான்

570. சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,

அந்தர மொன்றின்றி யேறி யவன்செவியில்,

மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,

இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4

மதுசூதன் வாயமுதை நீயே உண்கின்றாயே!

571. உன்னோ டுடனே யருகடலில் வார்வாரை,

இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,

மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,

பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே! 5

செங்கண்மாலின் வாயில் தீர்த்தமாடுகிறாய்

572. போய்த்தீர்த்த மாடாதே

நின்ற புணர்மருதம்,

சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே

யேறிக் குடிகொண்டு

சேய்த்தீர்த்த மாய்நின்ற

செங்கண்மால் தன்னுடைய

வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட

வல்லாய் வலம்புரியே! 6

சங்குத் தலைவனே!நீ பெற்ற செல்வம் அழகானது

573. செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்

செங்கட் கருமேனி வாசுதே வனுடைய,

அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,

சங்கரையா!உன்செல்வம் சாலவ ழகியதே! 7

சங்கே!உன்மீது பெண்கள் குற்றம் சொல்கின்றனர்

574. உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,

கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,

பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,

பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே! 8

பெருஞ்சங்கே!அமுதை c மட்டும் உண்பதோ?

575. பதினாறு மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,

பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,

சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே! 9

இவற்றைப் பாடுவோர் அணுக்கராவர்

576. பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,

வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,

ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,

ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. 10

அடிவரவு:கருப்பூரம் கடலில் கடவரை சந்திர உன்னோடு போய் செங்கமலஉண்பது பதினாறு பாஞ்ச -- விண்.











 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வாரணமாயிரம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  விண்ணீல மேலாப்பு
Next