கார்க்கோடல் பூக்காள்!

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாச்சியார் திருமொழி

கார்க்கோடல் பூக்காள்!

'காத்தல் மலர்களே!உங்களைப் போன்ற நீலவண்ணன் கண்ணன் எங்கே? கண்ணனின் பவள வாயைப் போன்ற பழங்களைக் கொண்ட கொடியே!அவனை சத்யவாதி என்று எல்லோரும் கூறுகின்றனர். என் விஷயத்தில் மாறிவிட்டானோ? கண்ணனின் புன்முறுவலை நினைவூட்டும் முல்லைக் கொடியே!என் எதிரில் தோன்றி என்னை வருத்தாதே!குயில்களே!ஈதென்ன கூச்சல்? திருவேங்கடவன் வந்து எனக்கு நல்வாழ்வு அளிக்குமாறு பாடக்கூடாதோ? மயில்களே!இது என்ன ஆட்டம்!குடக் கூத்தாடியவனை நினைவூட்டுகிறீர்களே!ஓயாது ஒலிக்கும் கூடலே!உன்னிடம் தானே திருவனந்தாழ்வான் இருக்கிறான். அவன்மீது படுத்திருக்கும் பகவானிடம் என் துயர் சொல்லேன்'என்ற ஆண்டாள் புலம்புகிறாள். 'கோதாய்!என்ன சொல்லியும் கண்ணன் வரவில்லை! உன் தந்தை பெரியாழ்வார் அழைக்கும்போது கட்டாயம் வருவான். அப்போது அவனைச் சேவிக்கலாம்'என்று தோழி கூறி ஆறுதல் அடைவிக்கிறாள்.

மாற்செய் வகையடு மாற்றம் இயம்பல்

கலிநிலைத்துறை

காந்தன் மலர்களே!கடல் வண்ணன் எங்குற்றான்?

597. கார்க்கோடல் பூக்காள்!கார்க்கடல்

வண்ணனென் மேல்உம்மைப்

போர்க்கோலம் செய்து போர

விடுத்தவ னெங்குற்றான்,

ஆர்க்கோ இனிநாம் பூச

லிடுவது, அணிதுழாய்த்

தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப்

படைக்கவல் லேனந்தோ! 1

பகவானுடைய சோதியில் என்னைச் சேர்ப்பீர்களா?

598. மேற்றோன்றிப் பூக்காள் மேலுல

கங்களின் மீதுபோய்,

மேற்றோன்றும் சோதி வேத

முதல்வர் வலங்கையில்,

மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்

போலச் சுடாது,எம்மை

மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து

வைத்துக்கொள் கிற்றிரே. 2

பாம்பணையார்க்கும் நாக்கு இரண்டோ?

599. கோவை மணாட்டி!நீயுன்

கொழுங்கனி கொண்டு,எம்மை

ஆவி தொலைவியேல் வாயழ-

கர்தம்மை யஞ்சுதும்

பாவி யேன்தோன்றிப் பாம்பணை-

யார்க்கும்தம் பாம்புபோல்,

நாவு மிரண்டுள வாய்த்து

நாணிலி யேனுக்கே. 3

முல்லைக் கொடியே!அவர் சொல் பொய்யோ?

600. முல்லைப் பிராட்டி!நீயுன்

முறுவல்கள் கொண்டு,எம்மை

அல்லல் விளைவியே லாழிநங்

காய்!உன்ன டைக்கலம்,

கொல்லை யரக்கியை மூக்கரிந்

திட்ட குமரனார்

சொல்லும் பொய்யானால், நானும்

பிறந்தமை பொய்யன்றே. 4

குயில்காள்!அவர் என்னைக் கூடுவாரா?

601. பாடும் குயில்காள்!ஈதென்ன

பாடல்,நல் வேங்கட

நாடர் நமக்கொரு வாழ்வுதந்

தால்வந்து பாடுமின்,

ஆடும் கருளக் கொடியுடை

யார்வந் தருள்செய்து,

கூடுவ ராயிடில் கூவிநும்

பாட்டுகள் கேட்டுமே. 5

மயில்களே!எனது நிலையைப் பாருங்கள்

602. கணமா மயில்காள்!கண்ணபி

ரான்திருக் கோலம்போன்று,

அணிமா நடம்பயின் றாடுகின்

நீர்க்கடி வீழ்கின்றேன்,

பணமா டரவணைப் பற்பல

காலமும் பள்ளிகொள்,

மணவாளர் நம்மை வைத்த

பரிசிது காண்மினே. 6

எனக்கு வேறு வழியே இல்லை

603. நடமாடிக் தோகை விரிக்கின்ற

மாமயில் காள்,உம்மை

நடமாட்டங் காணப் பாவியேன்

நானோர் முதலிலேன்,

குடமாடு கூத்தன் கோவிந்தன்

கோமிறை செய்து,எம்மை

உடைமாடு கொண்டா னுங்களுக்

கினியன்று கோதுமே? 7

அழகர்பிரானை நான் தழுவத்தான் வேண்டும்

604. மழையே!மழையே!மண்புறம்

பூசியுள் ளாய்நின்ற,

மெழுகூற்றி னார்போல் ஊற்றுநல்

வேங்கடத் துள்நின்ற,

அழகப் பிரானார் தம்மையென்

நெஞ்சத் தகப்படத்

தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண்

டூற்றவும் வல்லையே? 8

கடலே!என் துயர்களை நாகணைக்கே உரைத்தி

605. கடலே!கடலே!உன்னைக்

கடைந்து கலக்குறுத்து,

உடலுள் புகுந்துநின் றூறல்

அறுத்தவற்கு, என்னையும்

உடலுள் புகுந்துநின் றூறல்

அறுக்கின்ற மாயற்குஎன்

நடலைக ளெல்லாம் நாகணைக்

கேசென்று ரைத்தியே. 9

விட்டுசித்தர் அழகரை வருவிப்பாரோ?

606. நல்லஎன் தோழி!நாக

ணைமிசை நம்பரர்,

செல்வர் பெரியர் சிறுமா

னிடவர்நாம் செய்வதென்,

வில்லி வுதுவை விட்டுசித்

தர்தங்கள் தேவரை,

வல்ல பரிசு வருவிப்ப

ரேலது காண்டுமே. 10

அடிவரவு:கார் மேல் கோவை முல்லை பாடும் கண நட மழையே கடலே நல்ல -- தாம்.



 













 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is சிந்துரச் செம்பொடி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தாமுகக்கும்
Next