சிந்துரச் செம்பொடி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாச்சியார் திருமொழி

சிந்துரச் செம்பொடி

ஆண்டாள் திருமாலிருஞ்சோலையின் அழகிலும், அழகரின் திருமேனி ஸெளந்தர்யத்திலும் ஈடுபடுகிறாள். வானில் படர்ந்து விளங்கிய கார்முகில் மழையை நன்றாகப் பொழிந்தது. மழை காலத்திற்கு உரிய பூக்கள் திருமாலிருஞ்சோலை மலையில் பூத்துப் பரவி இருந்தன. இவை ஆண்டாளின் பிரிவுத் துன்பத்தை அதிகமாக்கின. திருமாலிருஞ்சோலை மணாளனிடம் இவள் மனம் சென்றது.

திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடல்

கலிநிலைத்துறை

நான் உய்வேனோ?

587. சிந்துரச் செம்பொடிப்போல்

திருமாலிருஞ் சோலையெங்கும்,

இந்திர கோபங்களே

எழுந்தும்பரந் திட்டவால்,

மந்தரம் நாட்டியன்று

மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான்

சுழலையினின் றுய்துங்கொலோ! 1

அவனளித்த மாலை செய்த யுத்தம்

588. போர்களி றுபொரும்மா

லிருஞ்சோலையம் பூம்புறவில்,

தார்க்கொடி முல்லைகளும்

தவளநகை காட்டுகின்ற,

கார்க்கொள் படாக்கள்நின்று

கழறிச்சிரிக் கத்தரியேன்,

ஆர்க்கிடு கோதோழி!

அவன் தார்செய்த பூசலையே. 2

என் கைவளை பறித்துச் சென்றுவிட்டாரே!

589. கருவிளை யண்மலர்காள்!

காயாமலர் காள்,திருமால்

உருவொளி காட்டுகின்றீர்

எனக்குய்வழக் கொன்றுரையீர்,

திருவிளை யாடுதிண்டோள்

திருமாலிருஞ் சோலைநம்பி,

வரிவளை யில்புகுந்து

வந்திபற்றும் வழக்குளதே. 3

அழகிரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு?

590. பைப்பொழில் வாழ்குயில்காள்!

மயில்காள்!ஒண் கருவிளைகாள்,

வம்பக் களங்கனிகாள்!

வண்ணப்பூவை நறுமலர்காள்,

ஐம்பெரும் பாதகர்காள்!

அணிமாலிருஞ் சோலைநின்ற,

எம்பெரு மானுடைய

நிறமுங்களுக் கென்செய்வதே? 4

அடைக்கலம் புக எனக்கு ஓரிடம் கூறுங்கள்

591. துங்க மலர்ப்பொழில்சூழ்

திருமாலிருஞ் சோலைநின்ற,

செங்கட் கருமுகிலின்

திருவுருப் போல்,மலர்மேல்

தொங்கிய வண்டினங்காள்!

தொகுபூஞ்சுனை காள்,கனையில்

தங்குசெந் தாமரைகாள்!

எனக்கோர் சரண் சாற்றுமினே. 5

நான் சமர்ப்பிப்பதை அழகர் ஏற்பாரோ?

592. நாறு நறும்பொழில்மா

லிருஞ்சோலை நம்பிக்கு,நான்

நூறு தடாவில்வெண்ணெய்

வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,

நூறு தடாநிறைந்த

அக்கார வடிசில்சொன்னேன்,

ஏறு திருவுடையான்

இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ! 6

கைங்கர்யம் செய்துகொண்டே இருப்பேன்

593. இன்றுவந் தித்தனையும்

அமுதுசெய் திடப்பெறில்,நான்

ஒன்றுநூ றாயிரமாக்

கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,

தென்றல் மணங்கமழும்

திருமாலிருஞ் சோலைதன்னுள்

நின்ற பிரான்,அடியேன்

மனத்தேவந்து நேர்படிலே. 7

குருவிக்ணங்கள் மாலின் வரவு சொல்கின்றன

594. காலை யெழுந்திருந்து

கரியகுரு விக்கணங்கள்,

மாலின் வரவுசொல்லி

மருள்பாடுதல் மெய்யம்மைகொலோ,

சோலை மலைப்பெருமான்

துவாரபதி யெம்பெருமான்,

ஆலி னிலைப்பெருமான்

அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8

அவனது சங்கொலியும் நாணொலியும் என்று கேட்பேன்?

595. கோங்கல ரும்பொழில்மா-

லிருஞ்சோலையில் கொன்றைகள்மேல்

தூங்குபொன் மாலைகளோ-

டுடனாய்நின்று தூங்குகின்றேன்,

பூங்கொள் திருமுகத்து

மடுத்தூதிய சங்கொலியும்,

சார்ங்கவில் நாணொலியும்

தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ! 9

திருமாலடி சேர்வர்

596. சந்தொடு சாரகிலும்

சுமந்துடங் கள்பொருது,

வந்திழி யும்சிலம்பா-

றுடைமாலிருஞ் சோலைநின்ற,

சுந்தரனை, சுரும்பார்

குழல்கோதை தொகுத்துரைத்த,

செந்தமிழ் பத்தும்வல்லார்

திருமாலடி சேர்வர்களே. 10

(திருமாளிகைகளில் திருவாராதன காலத்தில் பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கும் போது 6, 7, பாசுரங்களை மிகவும் பக்தியோடு அநுசந்திப்பது வழக்கம்.

ஆண்டாள் கண்ணனாகிய அழகருக்கு நூறு தடாக்களில் வெண்ணெயையும், அக்கார அடிசிலையும் மானசீகமாக சமர்ப்பித்ததையெல்லாம் எம்பெருமான் ஏற்றுத் திருவுள்ளம் உவந்து அருளினான் என்பது மகான்களின் கருத்து.)

அடிவரவு:சிந்துர போர் கருவிளை பைம்பொழில் துங்கநாறு இன்று காலை கோங்கலரும் சந்தொடு -- கார்.

 













 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is விண்ணீல மேலாப்பு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கார்க்கோடல் பூக்காள்!
Next