மெய்யில் வாழ்க்கையை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெருமாள் திருமொழி

மெய்யில் வாழ்க்கையை

பரம பக்தரும், முடிவேந்தர் சிகாமணியுமான இவ்வாழ்வார் உலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கி அவ்வாழ்க்கையில் அரங்கனிடம் அன்பு கொண்டிருப்பது ஒன்றே சிறந்த செயல் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.


அழகிய மணவாளன் விஷயம்

கலி விருத்தம்

அரங்கனிடமே மயங்குகிறேன்

668. மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ்

வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்,

'ஐய னே!அரங் கா!'என்ற ழைக்கின்றேன்,

மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே. 1

மாலிடம் மால்கொண்டேன்

669. நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்,

ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்,

ஆலியா அழையா அரங்கா வென்று,

மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே. 2

நான் அரங்கனின் பித்தன்

670. மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்,

பாரி னாரொடும் கூடுவ தில்லையான்,

ஆர மார்வ னரங்க னனந்தன்,நல்

நார ணன்நர காந்தகன் பித்தனே. 3

நான் அரங்கனின் பக்தன்

671. உண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம்

மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்,

அண்ட வாண னரங்கன்,வன் பேய்முலை

உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே. 4

தாமரைப் பேதை மணாளனின் பித்தன்

672. தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்,

cF யாரொடும் கூடுவ தில்லையான்,

ஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப்

பேதை மாமன வாளன்றன் பித்தனே. 5

எம்பிரானுக்கே எழுமையும் பித்தன்

673. எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்,

உம்பர் வாழ்வையன் றாகக் கருதிலன்,

தம்பி ராமன ரர்க்கு,அரங் கநகர்

எம்பி ரானுக்கே ழுமையும் பித்தனே. 6

அத்தனே அரங்கா என்கின்றேன்

674. எத்தி றத்திலும் யாரொடும் கூடும்,அச்

சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்,

'அத்த னே!அரங் கா!'என்ற ழைக்கின்றேன்,

பித்த னாயழிந் தேனெம்பி ரானுக்கே. 7

பேயரே எனக்கு யாவரும்

675. பேய ரேயெனக் கியாவரும்,யானுமோர்

பேய னேயெவர்க் கும்இது பேசியென்,

'ஆய னே!அரங் கா!'என்ற ழைக்கின்றேன்,

பேய னாயழிந் தேனெம்பி ரானுக்கே. 8

அரங்கனின் பக்தர்க்குத் துன்பம் இல்லை

676. அங்கை யாழி யரங்க னடியிணை,

தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்,

கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்,

இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே. 9

அடிவரவு: மெய்யில் நூல் மாரனார் உண்டி தீதில் எம்பரத்தர் எத்திறத்திலும் பேயரே அங்கை -- ஊன்.




 





 













 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தேட்டருந்திறல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஊனேறு
Next