ஊனேறு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெருமாள் திருமொழி

ஊனேறு

'திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவனே திருவேங்கடமலையில் நிற்கிறான். மனிதனாகப் பிறந்தவன் திருவேங்கடமலையின் சம்பந்தத்தைப் பேறவேண்டாமா? திருவேங்கடவன் விரும்பி வாழும் மலையன்றோ குளிரருவி வேங்கடம்!அம்மலையில் ஏரிக்கரையில் வாழும் நாரையாய்ப் பிறக்கமாட்டேனா!திருவேங்கடச் சுனையில் வாழும் மீனாக இருக்கமாட்டேனா!அம்மலையில் இருக்கும் சண்பக மரமாகவோ, புதராகவோ, திருமலையில் ஒரு பாகமாகவோ, அம்மலையில் பெருகும் காட்டாறாகவோ, மலைமேல் செல்லும் வழியாகவோ, அம்மலையில் உள்ள பொருள்களுள் ஏதேனும் ஒன்றாகவோ பிறக்கமாட்டேனோ? திருவேங்கடவா!உன் சன்னிதியில் ஒரு படியாக இருந்துகொண்டு உன் பவள வாயைச் சேவித்துக்கொண்டே இருப்பேன்'என்று தம் ஆர்வத்தைக் கூறுகிறார் ஆழ்வார்.

திருவேங்கடமுடையான் விஷயம்

தாவு கொச்சுக் கலிப்பா

வேங்கடத்தே குருகாய்ப் பிறக்கவேண்டும்

677. ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண் டேன்,

ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்,

கூனேறு சங்க மிடத்ததான்தன் வேங்கடத்து,

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. 1

திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கவேண்டும்

678. ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ,

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,

தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்,

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. 2

வேங்கடவனுக்குப் பொன்வட்டில் பிடிக்கவேண்டும்

679. பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்,

துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள்வாசல்,

துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள்வாசல்,

மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்,

பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேனாவேனே. 3

வேங்கடத்தில் செண்பக மரமாய் இருக்கவேண்டும்

680. ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்,

கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு,

பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து,

செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவனே. 4

வேங்கட மலையில் புதராக இருக்கவேண்டும்

681. கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து,

இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்,

எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்,

தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே. 5

வேங்கட மலையுள் சிகரமாக இருக்கவேண்டும்

682. மின்னனைய நுண்ணிடையா

ருருப்பசியும் மேனகையும்,

அன்னவர்தம் பாலொடு

மாடலவை யாதரியேன்,

தென்னவென வண்டினங்கள்

பண்பாடும் வேங்கடத்துள்,

அன்னனைய பொற்குவடா

மருந்தவத்த னாவேனே. 6

வேங்கட மலையில் காட்டாறாக இருக்கவேண்டும்

683. வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ், மன்னவர்தம்

கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்,

தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்,

கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே. 7

வேங்கட மலையில் உள்ள வழியாக இருக்கவேண்டும்

684. பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்,

முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்,

வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்,

நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே. 8

படியாகக் கிடந்து பவளவாய் காண்பேன்

685. செடியாய வல்வினைகள்

தீர்க்கும் திருமாலே,

நெடியானே!வேங்கடவா!

நின்கோயி லின்வாசல்,

அடியாரும் வானவரு

மரம்பையரும் கிடந்தியங்கும்,

படியாய்க் கிடந்துன்

பவளவாய் காண்பேனே. 9

அந்த மலையில் ஏதேனும் ஒரு பொருளாக ஆவேன்

686. உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ், உருப்பசிதன்

அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்,

செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்,

எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே. 10

பகவானின் பக்தர்களாக ஆவர்

687. மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்,

பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி,

கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன,

பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பக்தர்களே. 11

அடிவரவு:ஊன் ஆனாத பின்னிட்ட ஒண் கம்பம் மின் வான் பிறை செடி உம்பர் மன்னிய -- தரு.






 





 













 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is மெய்யில் வாழ்க்கையை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தருதுயரந்தடாயேல்
Next