ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பன்னிரு ஆழ்வார்கள்
குலசேகராழ்வார்
"வேழமுடைத்து மலைநாடு"என்று ஒளவையாரால் பாராட்டப்பெற்ற சேர நாட்டினைச் சேர மன்னர்கள் தமிழகத்தின் தலைமை வேந்தர்களாகத் திகழ்ந்து ஆட்சி புரிந்து வந்தார்கள். அங்ஙனம் ஆட்சி புரிந்த அச்சேர மன்னர் மரபில் திடவிரதன் என்பவன் அன்புக்கும் அருளுக்கும் இருப்பிடமானவனாய்த் தோன்றினான். அவ்வேந்தர்பிரான் கொல்லி நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தான். அச்சேர மன்னன் திருமகள்நாதனாகிய திருமாலிடத்து அன்புடையோனாய், வீரமும் கொடையும் ஒருங்கமைந்தவனாய் விளங்கினான்.
அவ்வேந்தர் வேந்தனுக்குக் கடலினின்று உதயமாகும் இளம்பரிதி எனக் குலசேகரர் உதித்தார். குலசேகரர் உதித்தார். குலசேகரர் கொல்லி நகரில் (A. H. 8 ஆம் நூற்றாண்டு) பராபவ ஆண்டு மாசித் திங்கள் வளர்பிறையில் அமைந்த துவாதசி திதியில் வெள்ளிக்கிழமையன்று புனர்ப்பூச நட்சத்திரத்தில் கௌஸ்துப அமிசராய் அவதரித்தருளினார்.
குலசேகரர் குழந்தைப் பருவத்தில் மழலைச் சொற்களாலும், செங்கீரை ஆடுதலாலும், சப்பாணி கொட்டுதலாலும், சிறுதேர் உருட்டுதலாலும் பெற்றோர்களை மகிழ்வித்தார். இளமைப் பருவத்தில் தென்மொழி, வடமொழி முதலியன நன்கு பயின்று மன்னர்கட்குரிய யானை ஏற்றம், குதிரையேற்றம், வில், வாள் முதலிய படைக்கலப் பயிற்சி முதலியன கற்றுத் தேர்ந்து, 'இவரை ஒப்பாரும் மிக்காரும் இலர்'என்னும்படி சிறந்து விளங்கினார். தந்தையாரும் குலசேகரரின் சீரிய நிலையினைக் கண்டு அவரை இளவரசாக்கினார்.
குலசேகரர் தமது தந்தையாருக்குப்பின் நாட்டின் ஆட்சி முறையை ஏற்றுச் சிறந்த முறையில் செங்கோலோச்சினார். இவரது சிறப்பில் பொறாமை அடைந்த சோழனும் பாண்டியனும் ஒன்றுகூடிப் போர் தொடுத்தனர். அவர்களைக் குலசேகரர் வென்று திமிழகத்தின் சக்கரவர்த்தியாய் விளங்கினார்.
இதை,"கொல்லி நகர்க் கிறை கூடல் கோமான்", "கொல்லிகாவலன் மாலடி முடிமேல் கோலமாம் குல சேகரன்"என்ற ஆறு, ஏழாம் திருமொழியினால் உணரலாம். பாண்டிய வேந்தன், குலசேகரரது ஆண்மையின் திறத்தை வியந்து தன் செல்வப் புதல்வியை அவருக்கு மணம் செய்து கொடுத்தான். குலசேகரருக்குள்ள அகப்பற்று, புறப்பற்றினை நீக்கி, வைகுந்தநாதன் அவருக்கு "மயர்வற மதிநலம்"அருளி, தனது "உயர்வற உயர்நலம்"உடைய வடிவத்தை உணரும்படி கடைக்கணித்தருளினார். இதனால் அவருக்குத் தத்துவம் விளங்கியது. அவர் தம் வாழ்நாட்கள், "ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்க் கழிந்தொழிந்தன"என்பார்: "ஆதிமூலமே என்றழைத்த யானையைக் காத்தவனும், சிருங்கிபேரத்துப் புளிஞர் வேந்தனாகிய குகனைத் தனது தோழன் என்றழைத்து, 'என் தம்பி உனது தம்பியாவான்'என்று கூறியவனும், அரசவையில் அரவக்கொடியோனால் அல்லலுற்று அவதிப்பட்ட பாஞ்சாலிக்குப் பொன் ஆடைகள் அருளியவனுமாகிய எம்பெருமானுடைய அருஞ்செயல்களை எண்ணி ஏத்தாது கழித்த நாட்கள் யாவும் பிறந்தும் பிறவாத நாட்கள் ஆகும்"என்பார்;திருமாலைக் கண்டு களிக்கும் நாள் என்றோ என ஏங்குவார். இதனையே அவர் தாம் பாடிய பெருமாள் திருமொழியிலும் நினைவில் கூறுகின்றார்.
பின்னர் இறைவனது நினைவில் ஈடுபட்ட குலசேகரரது மனம், இறைவனது எழில் மிக்க காதையைக் கேட்டலில் விருப்பம் கொண்டது. எனவே, அவர் ஒரு பெரியாரிடத்தில் நாள்தோறும் இராம காதையைக் கேட்பார். அப்பெரியாரும் இராமனது அவதாரத்தையும், விசுவாமித்திரரோடு கானகம் சென்று, காடகையை வதைத்த இயல்பினையும், அகலிகையின் சாப விமோசனத்தையும், மைதிலியை மணந்ததையும், பரசுராமரது வில்லை வளைத்து மன்னர்களின் பகையைப் போக்கியதையும், கேகயன் மகள் சொல்லால் அயோத்தியை விடுத்துக் கங்கையையடைந்து குகனொடு தோழமை பூண்டு, பின் வனம் போய்ப் புக்கதையும் முறையாக நாள்தோறும் கூறிவந்தார். பின்னர் பரதன் வர, பாதுகையளித்து அவனை அனுப்பிவிட்டுச் சித்திரகூடம் சென்றதும், இலங்கை வேந்தனது தங்கை சூர்ப்பனகையினது மூக்கை இலக்குவன் நீக்கியதுமாகிய வரலாறுகளையும் அப்பெரியார் கூறினார்.
அடுத்ததாக, 'சூர்ப்பனகை சினங்கொண்டு கரனிடம் சென்று கூற, கரன் என்னும் இரக்கமிலா அரக்கன் தேரின் மீது ஏறிப் படைவீரர்கள் யாவரும் புடை சூழவும், முரசங்கள் ஒலிக்கவும், யாளிகள், சிங்கங்கள், புலிகள், யானைகள், கரடிகள், பன்றிகள் முதலியவை பூட்டப்பட்ட தேர்களுடன் கடல் பொங்கி எழுந்து வந்தாற்போன்ற இயல்போடு காலனும் கண்டு அஞ்சும்படி இராமலக்குமணர்களை அழிக்க வந்தான். சீதையும் இலக்குவனுமிருக்க, இராமர் தனிமையில் வில்லை வளைத்துப் போர் தொடுக்கப் போர் நிகழ்ந்தது'என மேலும் கதை கூறிய பெரியார் சொல்லிய காலத்து, குலசேகரர் இவை நிகழ்கால நிகழ்ச்சி என்ற எண்ணத்தவராய், தம் படைத் தலைவர்களை அழைப்பித்து, படைகளைத் திரட்டிக்கொண்டு வரும்படி கூறி, தாமும் தேரின்மீது ஏறிச் சென்று இராமருக்கு உதவும் எண்ணத்தவரானார். அரசரது மனநிலையை அறிந்த அமைச்சர் இராமாயணம் கூறுபவரை அழைத்துச் சில செய்திகளைக் கூற, அவரும் அரசன்முன் சென்று, முதற்கண் குலசேகரரது வீரத்தைப் புகழ்ந்து, 'கரனும் அவனது படைவீரர் அனைவரும் சக்கரவர்த்தித் திருக்குமாரரது கணைகளால் அழிவுற்றனர்'எனக் கூறி, 'இரகுநாதன் இளையவனுடன் சீதையுடனும் பர்ணசாலைக்குள் மகிழ்வுடன் அளவளாவிக்கொண்டிருக்கலானார்'என உரைத்தார்.
குலசேகரர் மனநிலை தெளியப்பெற்றவராய்ப் படைகளை அவ்வவற்றின் இடங்களுக்கு அனுப்புமாறு ஆணையிட்டு அரண்மனைக்குச் சென்றார்.
அரசரது மனநிலை வைணவ பக்தர்களின் சேர்க்கையால் கலங்குதல் கண்டு, அவர்களின் நட்பை அழிக்க அமைச்சர்கள் திட்டம் வகுத்து, குலசேகரர் பூசை செய்யும் பெருமானிடத்துள்ள நவமணிமாலையை மறைத்தனர். அரசன் வினவிய காலத்து, அமைச்சர்கள் அரசனிடம், 'வைணவர்கள்தாம் எடுத்திருக்கவேண்டும்'என்று கூற, குலசேகரர் அமைச்சர்களின் கூற்றை மறுத்தவராய், ஒரு குடத்தில் நல்ல பாம்பு ஒன்றையிட்டுக் கொண்டுவரச் செய்தார். அங்ஙனமே பாம்பு குடத்தே அடைபட்டு வந்ததும் குலசேகரர், "வைணவர்கள் எடுத்திரார்கள் என்பது உண்மையாயின் இப்பாம்பு என்னைத் தீண்டாது ஆகுக"எனக் கூறிக் குடத்தினுட் கையை விட, பாம்பு தீண்டாமலே இருந்தது. குலசேகரர் குடத்தினின்று தம் கையை எடுத்ததும், அப்பாம்பு குடத்தினின்று வெளிவந்து குலசேகரரை வணங்கிப் படம் எடுத்தாடியது. பின்பு, குலசேகரர் அப்பாம்பிற்கு யாதும் தீங்கு செய்யாமல், அதன் இடத்தில் கொண்டுபோய் விடும்படி அதனைக் கொணர்ந்த பணியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.
அமைச்சர்கள் அரசனிடம் தாங்கள் செய்த பிழையைக் கூறி மன்னிக்குமாறு அரசனின் பாதமலர்களை வணங்கினார்கள். பின்னர் அரசன் அமைச்சர்களை நோக்கி,
"இவ்வுலக வாழ்வில் எனது மனம் ஈடுபடாமல் உள்ளது. இவ்வரசு எனக்கு வேண்டாம்"என்றுரைத்துத் தமது மூத்த மகனுக்கு முடி சூட்டிவிட்டு, மைந்தர்க்கெல்லாம் கூறவேண்டிய அரசியலறங்களனைத்தும் அறிவித்து, அமைச்சர்களிடமும் அம்மைந்தர்களிடமும் இசைவு பெற்று, திருமாலின் அடியவர்களுடன் இறைவனை நாவுற வாழ்த்தி மகிழலாயினார்.
இவர் பெரிய பெருமாளாகிய இராமனிடத்தில் பேரன்புடையவர் ஆதலினால் இவரைப் 'பெருமாள்'என்றும், 'குலசேகரப் பெருமாள்'என்றும் வைணவப் பெரியார்கள் கூறலாயினர். இவர் அருளிய திருமொழிகளின் தொகைக்கு "பெருமாள் திருமொழி"என்னும் பெயர் வழங்கலாயிற்று. இவர் அருளியவை பத்துத் திருமொழிகள், இரண்டு, ஐந்து, ஆறு ஆகிய திருமொழிகள் பத்துப் பாசுரங்களைக் கொண்டவை. மூன்றாந் திருமொழி ஒன்பது பாசுரங்கள் உடையது. ஏனைத் திருமொழிகள் ஒவ்வொன்றும் பதினொரு பாசுரங்கள் கொண்டவை. ஆக இவர் அருளிய பாசுரங்களின் தொகை நூற்று ஐந்தாம்.
குலசேகராழ்வாரால் பாடப்பட்ட தலங்கள்:1. திருவரங்கம், 2. திருக்கண்ணபுரம்,
3. திருச்சித்திரகூடம், 4. திருவிற்றுவக்கோடு, 5. திருவேங்கடம், 6. திருவயோத்தி,
7. திருப்பாற்கடல் முதலியனவாகும்.