மதுரகவியாழ்வார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பன்னிரு ஆழ்வார்கள்

மதுரகவியாழ்வார்

பைந்தமிழும் பல வளமும் அமைந்து விளங்கும் பாண்டிய நாட்டில் குறைவர அமைந்ததாகிய திருக்கோளூர் என்னும் ஊர் ஒன்று உளது. அவ்வூரில் வாழ்வோர் யாவரும் கல்வி யறிவிலும் செல்வத்திலும் சிற்நது விளங்கி, நல்லொழுக்கத்தினின்றும் பிறழாதவர்களாக இருந்தார்கள்.

இத்தகைய சிறப்போடு வாழ்ந்த மக்களுள் முன் குடிமிச் சோழிய அந்தணர் மரபினரும் இருந்தனர். அம்மரபில் அதனை விளக்கும் மணிவிளக்காய் (A. H.9 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்) ஈசுவர ஆண்டு சித்திரைத் திங்கள் வளர்பிறையில் பொருந்திய சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமையன்று சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீவைநதேயாம்சராய் மதுரகவியாழ்வார் திருவவதரித்தருளினார்.

இவர் தமிழ் மொழியிலும், வடமொழியிலும் சிறந்த புலமை பெற்று, சிறந்த ஒழுக்கம், திருமாலிடம் அன்பு, அருள் முதலியன தம்மிடம் வாய்க்கப்பெற்றவராயிருந்தார். தமிழ் மொழியில் மதுரமான கவிதைகளைப் பாடிய காரணம்பற்றி இவருக்கு மதுரகவிராயர் என்னும் பெயர் அமைந்துள்ளது.

மதுரகவியாழ்வார், புண்ணியப் பதிகள் என வழங்கும் 1. அயோத்தி, 2. மதுரை,
3. கயை, 4. காசி, 5. காஞ்சி, 6. அவந்தி, 7. துவாரகை என்னும் ஏழையும் சென்று சேவித்து, மறுபடியும் அயோத்தியை அடைந்து, அங்கு அர்ச்சாவதார வடிவாய் எழுந்தருளியிருக்கின்ற இராமபிரானையும், பிராட்டியையும் சேவித்துத் திருவடி தொழுதுகொண்டு அங்கு வசிக்கலானார்.

ஒரு நாளிரவில் இவர் திருக்கோரூர் எம்பெருமானைத் திசை நோக்கித் தொழக் கருதித் தென்திசையில் கண் செலுத்திய பொழுது, அப்பாக்கத்திலே வானுற வளர்ந்து விளங்கிய ஒரு திவ்யமான பேரொளியைக் காணுற்று, அஃது இன்னதென்றறியாமல், 'கிராம நகரங்கள் வேகின்றனவோ? காட்டுத் தீயோ?'என ஐயுற்றுத் திகைத்து நின்றார். இங்ஙனமே அடுத்த இரண்டு மூன்று நாட்களிலும் கண்டு, அச்சுடர்த்திரள் முச்சுடரொளியிலும் மிக்கு விளங்கியதானால் பெருவியப்புற்ற அவர், அதனைக் காணும் அவாவினராய்ப் புறப்பட்டு அச்சோலையைக் குறியாகக் கொண்டு நெடுவழி கடந்து நடந்து திருக்குருகூரை அடைந்தார். அவ்வொளி அப்பகுதியில் பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலுக்குட்புக்கு மறைந்துவிட்டது. மதுரகவியார் அவ்வூரிலுள்ளாரைப் பார்த்து, 'இங்கு ஏதேனும் சிறந்த செய்தி உண்டா?'என வினவ அவர்கள் ஆழ்வாரது வரலாற்றைக் கூறினார்கள். மதுரகவியார் அவ்வரலாற்றைக் கேட்டுக் கோயிலினுள்ளே சென்று முன் நம்மாழ்வார் வரலாற்றிற் கூறியபடி, ஆழ்வார் அருளைப் பெற்று, அவர் அருளிச் செயல்களைப் பட்டோலையில் எழுதினார். மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது. மதுரகவியார் நம்மாழ்வாரையே பதினாரு பாசுரங்களால் ஆன பாமாலை ஒன்றாற் பாடினார். அப்பாமாலையின் முதற்பா 'கண்ணிநுண் சிறுத்தாம்பு'என்பது பெயராயிற்று. நம்மாழ்வார் திருநாட்டை அலங்கரித்தபின்னர், அவர்அர்ச்சை வடிவினரான ஆழ்வாரின் உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்தார்.

மதுரகவியார் ஆழ்வாருக்கு நித்தியம் நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திருவிழாக்களில் 'வேதந்தமிழ் செய்த மாறர் வந்தார்', திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்' 'அளவிலா ஞானத்து ஆரியர் வந்தார்'என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார். இதனைக் கேள்வியேற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரிட்டு, 'உங்கள் ஆழ்வார் பக்தரேயன்றிப் பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதந்தமிழ் செய்தவரென்று புகழ்வது தகுதியோ?'என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்திட்டனர். அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி, 'இவர்கட்கு கர்வபங்கமாகும்படி தேவரீர் செய்தருளவேண்டும்'என்று துதித்தார். சடகோபர் ஒரு கிழப் பார்ப்பனர் வடிவத்தோடு வந்து "திருவாய்மொழியில் 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்!எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே'என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று, சங்கப் பலகையின்கண் வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும்"என்று கூறியருளினார். அங்ஙனமே மதுரகவி ஆழ்வார் கண்ணன் சுழலிணையை எழுதிய ஏட்டை எடுத்துப் பலகை பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக்கொண்டு மிதந்தது.

அப்பொழுது நீரில் விழுந்து அமிழ்ந்து தடுமாறியெழுந்து மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள் வேதம், வேதத்தின் முடிவுப் பொருள்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய வித்தகத் திறனைத் தெரிந்துகொண்டு செருக்கொழிந்தனர். அங்ஙனம் செருக்கொழிந்த சங்கப் புலவர்கள் நம்மாழ்வாரது பெருமையைக் குறித்துத் தோத்திரமாகத் தனித்தனி ஒவ்வொரு பாடல் பாடி வெளியிட்டனர்.

அங்ஙனம் வெளியிட்டதில் அப்பாடல்கள் யாவும்,

"சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ

நாமம் பராங்குசமோ நாரணமோ - தாமந்

துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கும்

உளவோ பெரும உமக்கு"

என்ற இப்பாடல் வடிவாகச் சிறிதும் வேற்றுமையின்றி ஒற்றுமைப்பட்டிருக்க, இதுபற்றி அவர்களனைவரும், 'இஃது என்ன விந்தை!'என வியப்புக் கடலில் ஆழ்ந்து, பின்னர் இத்தகைய ஒற்றுமைத் தன்மை நேர்தற்கு ஆழ்வாரது தெய்வத் திருவருளே காரணமாகும் என்று எண்ணினார்.

பிறகு சங்கத்துச் சான்றோர்களின் தலைவராக விளங்கும் புலவர், ஆழ்வாரைப் புன்மொழிகளால் இழித்துக் குற்றத்தைப் போக்கிக்கொள்ள வேண்டி,

"ஈயா டுவதோ கருடற் கெதிரே

இரவிக் கெதிர்மின் மினியா டுவதோ

நாயா டுவதோ உறுவெம் புலிமுன்

நரியா டுவதோ நரகே சரிமுன்

பேயா டுவதோ அழகூர் வசிமுன்

பெருமான் வகுளாபரணன் அருள் கூர்ந் (து)

ஓவா துரையா பிரமா மறையின்

ஒருசொற் பெறுமோ உலகிற் கவியே"

என்ற பாடலைப் பாடினார்.

இங்ஙனம் நம்மாழ்வாரது புலமையின் திறத்தை முற்றும் உணர்ந்த சங்கப் புலவர்கள் ஆழ்வாரது அருந்தமிழ்ப் பாவாகிய மருந்தினால் தம்முடைய செருக்காகிய நோய் நீங்கப் பெற்று, மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.

மதுரகவி ஆழ்வார் தமது ஆசிரியராகிய நம்மாழ்வாருக்குப் பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ்

மறைகளின் பொருள்களைப் பலரும் உணரும்படி உரைத்துச் சிலகாலம் எழுந்தருளியிருந்து, பின்பு சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தான பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is நம்மாழ்வார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  குலசேகராழ்வார்
Next