ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெருமாள் திருமொழி
தருதுயரந்தடாயேல்
விற்றுவக்கோடு என்பது ஒரு திவ்விய தேசம். இது கேரள நாட்டில் உள்ளது. இதை வித்துக்கோடு என்றும், திருமிற்றக் கோடு என்றும் கூறுவர். 'விற்றுவக்கோட்டு அம்மானே!உன்னைத் தஞ்சமாக வந்தடைந்தேன். நீயே என்னைக் காக்க வேண்டும். c என் துன்பத்தை நீக்கா விட்டாலும், தாயின் அருளையே நினைந்து அழும் குழந்தை போலவும், அரசனின் கோல் நோக்கி வாழும் குடி போலவும் உன் அருளையே எதிர்பார்த்து ஏங்கி இருப்பேன்!உன்னிடமன்றி வேறு யாரிடம் செல்ல முடியும்? விசாலமான கடலில் செல்லும் கப்பலின் பாய் மரத்தின் மீது அமர்ந்திருக்கும் பறவையைப் போல் வேறு கதியின்றி இருக்கிறேன். ஆதலால், உன் சரணல்லால் சரணில்லை'என்று ஆழ்வார் அந்த எம்பெருமானைச் சரணடைகிறார்.
விற்றுவக்கோட்டம்மான் விஷயம்
தரவு கொச்சகக் கலிப்பா
தாயின் அருள்தான் சேய்க்கு வேண்டும்
688. தருதுயரம் தடாயேலுன்
சரணல்லால் சரணில்லை,
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ்
விற்றுவக்கோட் டம்மானே,
அரிசினத்தா லீன்றதாய்
அகற்றிடினும், மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி
அதுவேபோன் றிருந்தேனே. 1
நின் பெருமையையே நான் பேசுவேன்
689. கண்டா ரிகழ்வனவே
காதலன்றான் செய்திடினும்,
கொண்டானை யல்லா
லறியாக் குலமகள்போல்,
விண்டோய் மதிள்புடைசூழ்
விற்றுவக்கோட் டம்மா,நீ
கொண்டாளா யாகிலுமுன்
குரைகழலே கூறுவனே. 2
உன் பற்று அல்லால் வேறு பற்றில்லை
690. மீன்நோக்கும் நீள்வயல்சூழ்
விற்றுவக்கோட் டம்மா,என்
பால்நோக்கா யாகிலுமுன்
பற்றல்லால் பற்றில்லேன்,
தான்நோக்கா தெத்துயரம்
செய்திடினும், தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும்
குடிபோன்றி ருந்தேனே. 3
அடியேன் உனதருளே பார்ப்பேன்
691. வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்,
மாளாத காதல்நோ யாளன்போல், மாய்த்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மா,நீ
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே. 4
நான் எங்கு போய்ப் பிழைப்பேன்?
692. வெங்கண்தின் களிறடர்த்தாய்
விற்றுவக்கோட் டம்மானே,
எங்குப்போ யுங்கேனுன்
னிணையடியே யடையலல்லால்,
எங்கும்போய்க் கரைகாணா
தெறிகடல்வாய் மீண்டேயும்,
வங்கத்தின் கூம்பேறும்
மாப்பறவை போன்றேனே. 5
உன் சீர்தான் என் மனத்தை உருக்கும்
693. செந்தழலே வந்தழலைச்
செய்திடினும், செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற்
கல்வா லலராவால்,
வெந்துயர்வீட் டாவிடினும்
விற்றுவக்கோட் டம்மா,உன்
அந்தமில்சீர்க் கல்லா
லகங்குழைய மாட்டேனே. 6
என் சித்தத்தை உன்னிடமே வைப்பேன்
694. எத்தனையும் வான்மறந்த
காலத்தும் பைங்கூழ்கள்,
மைத்தெழுந்த மாமுகிலே
பார்த்திருக்கும் மற்வைபோல்,
மெய்த்துயர்வீட் டாவிடினும்
விற்றுவக்கோட் டம்மா,என்
சித்தம்மிக வுன்பாலே
வைப்ப மடியேனே. 7
ஆறுகளெல்லாம் கடலினைத்தானே சேரும்?
695. தொக்கிலங்கி யாறெல்லாம்
பரந்தோடி, தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க
மாட்டாத;மற்றவைபோல்,
மிக்கிலங்கு முகில்நிறத்தாய்!
விற்றுவக்கோட் டம்மா,உன்
புக்கிலங்கு சீரல்லால்
புக்கிலன்காண் புண்ணியனே! 8
அடியேன் நின்னையே வேண்டி நிற்பன்
696. நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்,
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே. 9
நரகத்தை அடைய மாட்டார்கள்
697. விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்,
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த,
கொற்றவேல் தானைக் குலசே கரன்சொன்ன,
நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நகரமே. 10
அடிவரவு:தரு கண்டார் மீன் வாளால் வெங்கண் செந்தழல் எத்தனை தொக்கு நின்னை விற்றுவக்கோட்டு -- ஏர்.