கல்வி ஆரம்பிக்கிற ஸமயத்தில், கல்யாண காலத்தில், ஒரு இடத்துக்குப் புதிசாகப் போகிறபோது, ஒரு இடத்திலிருந்து புறப்படுகிறபோது, யுத்த ஸமயத்தில் – இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு போவானேன்? “ஸகல காரியத்திலும்” என்று சொல்லிவிடலாம்; ஸகல காரியத்திலும் எவனோ ஒருத்தனுக்கு இடைஞ்சல் என்பதே ஏற்படுவதில்லை:
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேசே நிர்கமே ததா |
ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்-தஸ்ய ந ஜாயதே ||
“வித்யாரம்பே”- படிப்பு ஆரம்பிக்கும் போது, அதிலிருந்து ப்ரஹ்மசர்ய ஆச்ரமம். அந்த ஆச்ரமம் வஹிக்கிற காலத்தில் இடைஞ்சல் வராது.
“விவாஹே ச”- கல்யாணத்தின் போதும். அதாவது க்ருஹஸ்தாச்ரமத்திலும் இடையூறு வராது.
ரொம்ப ஸ்வல்பப் பேரே ஸந்நியாஸாச்ரமம் வாங்கிக் கொள்வதால், ப்ரஹ்மசர்ய – க்ருஹாஸ்தாச்ரமங்களைச் சொன்னதிலேயே ஒரு மநுஷ்யனின் வாழ்நாள் முழுவதையும் சொன்னதாக ஆகிவிட்டது. வாழ்க்கை பூரா அவனுக்கு இடையூறு இல்லை.
வாழ்க்கை என்கிறது என்ன? பல தினுஸான சலனங்கள் தான்;இப்போது இருப்பது நாளைக்கு இல்லை என்று மனஸாலேயும், வாக்காலேயும், சரீரத்தாலேயும், புத்தியாலேயும், பணத்தாலேயும் பல தினுஸுக் காரியங்களைப் பண்ணி மாறிக் கொண்டே இருப்பதுதான். ஆலோசித்துப் பார்த்தால் தெரியும், life என்பது movement-கள் தான் என்று. இதிலே சரீரத்தால் பண்ணும் ‘மூவ்மென்டு’கள்தான் பளிச்சென்று தெரிவது. அதிலேயும் சரீரம் முழுவதையும், ஒரு இடத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிப் பிரயாணம் பண்ணுகிறோமே, அதுதான் முக்யமான ‘மூவ்மென்டாக’த் தெரிகிறது. அதைத்தான் ‘ப்ரவேசே நிர்கமே தாதா’ என்று சொல்லியிருக்கிறது. ‘ப்ரவேசம்’ ஒரு இடத்துக்குள்ளே போவது. ‘நிர்கமம்’ ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு வெளியில் போவது.
இப்படியே எந்த விதமான மூவ்மென்டாலும் ஏதோ ஒரு விஷயத்திற்குள் பிரவேசிக்கிறோம்; ஏதோ ஒன்றை விட்டுவிட்டுப் புறப்படவும் செய்கிறோம்.
இவையெல்லாவற்றிலும் ஒருத்தனுக்கு இடைஞ்சல் வராது.
வாழ்க்கையைச் சலனம் என்று சொன்னேன். இன்னொரு ‘டெஃபனிஷ’னும் [இலக்கணமும்] சொல்கிறதுண்டு. பத்திரிகைகளில் அந்த ‘டெஃபனிஷன்’ தான் ரொம்பவும் அடிபடுகிறது. “வாழ்க்கைப் போராட்டம்”, “வாழ்க்கைப் போராட்டம்” என்றே நிறையக் கேட்கிறோம். டார்வின் தியரி, ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் தியரி எல்லாமே போராடிப் போராடித்தான் ஜீவ குலம் உருவாயிருக்கிறது என்றே சொல்கின்றன.
யோசனை பண்ணிப் பார்த்தால் சலனமும், போராட்டமும் ஒன்றுக்கொன்று கனெக்ஷன் உள்ளவை என்று தெரியும். யாரோ ஒரு ஜீவனுக்கு மட்டும் சலனம், மற்றதெல்லாம் சலனமில்லாமல் இருக்கிறது என்றால்தான் இந்த ஒருத்தன் தன் இஷ்டப்படி ஸுகமாக ஸஞ்சாரம் பண்ண முடியும். (எல்லா தினுஸு ஸஞ்சாரங்களையுந்தான் சொல்கிறேன்;) ஆனால் வாஸ்தவத்தில் அப்படியா இருக்கிறது? அத்தனை ஜீவராசிகளுக்கும்தான் ஓயாத சலனமாக இருக்கிறது. அசேதன வஸ்துக்களிலுங்கூட ஒரே சலனம்! ஒரு அணுவுக்குள்ளேகூட எலெக்ட்ரிஸிடியின் வேகத்தோடு ஸதா ஸஞ்சாரம் நடந்துகொண்டே இருக்கிறது. இப்படிப் பல உயிர்களும், ஜட வஸ்துக்களும் ஒரே ஸமயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தால் அவற்றுக்கிடையே மோதல்களும் உண்டானபடிதானே இருக்கும்? போராட்டம் என்பது மோதல்தானே?
இன்னும் அடிப்படைக்குப் போனால் ஒரு ஜீவனோ, ஜடமோ சலனம் அடைகிறதென்பதே போராடுவதுதான். சாந்தம் வந்துவிட்டால் நிச்சலனமாக அடங்கிப் போய்விடுவோம் என்று நன்றாகத் தெரிகிறதோல்லியோ? ஆகையால் சலனம் இருந்தால் சாந்தி இல்லை என்று ஆகிறது. சாந்தி இல்லாமலிருப்பதுதான் போராட்டம். War and Peace என்று எதிர்ப் பதங்களாகச் சொல்கிறோமல்லவா?
வாழ்க்கையே போராட்டம் என்றாலும், குறிப்பாக அப்படித் தெரிவது ஒருத்தரோடொருத்தர் போட்டுக் கொள்ளும் சண்டைதான். அதைத்தான் “ஸங்க்ராமே” என்று சொல்லியிருக்கிறது. “ஸங்க்ராமம்” என்றால் யுத்தம்.
யுத்தத்தில் ஒருத்தனுக்கு இடையூறு வராது. அவன் ஜயசாலியாக விளங்குவான்.
நீட்டி அர்த்தம் பண்ணிக் கொண்டால், வாழ்க்கையின் அநேக ப்ரவேச – நிர்கமங்களான போக்குவரத்துக்களிலேயும், ஸகல விதமான போராட்டங்களிலேயும் அவன் இடையூறு எதுவுமில்லாமல் வெற்றியோடு விளங்குவான்.
அர்த்தத்தை இன்னமும் கொஞ்சம் நீட்டி, ஒரு சலனமும் போராட்டமும் இல்லாத பூர்ண ஸ்திதியான ஆத்ம ஸமாதி நிலையை அடைவான் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ‘வித்யாரம்ப’த்தால் ப்ரஹ்மசர்யத்தையும், ‘விவாஹ’த்தால் க்ருஹஸ்தாச்ரமத்தையும் சொன்ன மாதிரி, அப்புறம் ஸமாதி நிலையில் கொண்டு சேர்க்கும் ஸந்நியாஸாச்ரமத்தைக் குறிப்பிடுகிற மாதிரியும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.
இதிலே – அதிலே, இந்த ஆச்ரமத்திலே – அந்த ஆச்ரமத்திலே என்று எதற்காகப் பலது (பலவற்றைச்) சொல்லணும்? சுருக்கமாக அத்தனையையும் அடக்கி, ‘எல்லாக் காரியத்திலேயும்’ – “ஸர்வ கார்யேஷு” – அவனுக்கு இடைஞ்சல் இல்லை, அதாவது வெற்றிதான் என்று [ச்லோகத்தை] முடித்திருக்கிறது.
ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே
“தஸ்ய” — அவனுக்கு; ‘ஸர்வ கார்யேஷு’ — ஸகல காரியங்களிலேயும்; “விக்ன:” — இடைஞ்சல்; “ந ஜாயதே” உண்டாவதில்லை.
நமக்கு ஒன்றைப் பலது சொல்லி விஸ்தாரம் பண்ணிக் காட்டினால்தான் மனஸில் பதிகிறது. “எல்லாவற்றிலும் இடைஞ்சல் உண்டாகாது” என்று மட்டும் சொன்னால் அவ்வளவு அழுத்தமாகத் தெரியாது. ‘இதில் உண்டாகாது, அதில் உண்டாகாது” என்று அநேகம் சொல்லி அப்புறம் ‘எதிலுமே உண்டாகாது’ என்றால்தான் மனஸில் அழுந்தப் பதியும் என்றே அப்படிச் சொன்னது.
ஸர்வ கார்யேஷு விக்நஸ்-தஸ்ய ந ஜாயதே — ஸகல கார்யங்களிலும் அவனுக்கு விக்னம் என்பது உண்டாவதில்லை.
அவனுக்கு எனறால் எவனுக்கு?
பதில் முந்தைய அடியில் இருக்கிறது. அந்த அடி இப்படிச் சொல்கிறது.
ஷோடசைதாநி நாமாநி ய: படேச் – ச்ருணுயாதபி
ஷோடச ஏதாநி நாமாநி ய: படேத் ச்ருணுயாத் அபி.
‘ஏதாநி”- இந்த, அதாவது இதற்கு முன்னே சொன்ன; “ஷோடச நாமாநி” – பதினாறு பெயர்களை; “ய:”- எவன்; “படேத்”- படிக்கிறானோ; “அபி”என்றால் இங்கே “அல்லது” என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் – அல்லது; “ச்ருணுயாத்”- கேட்கிறானோ…
இந்த பதினாறு பேரை எவனொருத்தன் படிக்கிறானோ, அல்லது இன்னொருத்தர் படித்துக் கேட்கிறானோ அவனுக்குத்தான் ஸர்வ கார்யங்களிலும் விக்னம் ஏற்படுவதில்லை. – “விக்நஸ் – தஸ்ய ந ஜாயதே”.
“படிப்பவர், கேட்பவர்” என்பது பொதுவாக வழங்குகிற சொற்றொடர். பெரிய பெரிய புராணம், உபாக்யானம் முதலியவற்றை ஒரு உபந்நியாஸ கர்த்தா படித்து அர்த்தம் சொல்வார். மற்றவர்கள் கேட்பார்கள். அதை வைத்தே ‘படிப்பவர் – கேட்பவர்’, ‘வக்தா – ச்ரோதா’ என்று வசனம் வந்து விட்டது.
ஆனால் இங்கே ஸப்ஜெக்ட் பெரிசான புராணக் கதை எதுவுமில்லை. பதினாறே பேர்கள்தான் ஸப்ஜெக்ட். ஆகையினால் அதைப் படிப்பது, கேட்பது என்று பொது வசனத்தை வைத்துச் சொன்னாலும் உள்ளே தாத்பர்யம் ஒவ்வொருவரும் அந்தப் பதினாறு பேர்களை மனப்பாடம் பண்ணிச் சொல்ல வேண்டும் என்பதுதான்.
மனப்பாடம் பண்ணாதவர்களே புஸ்தகத்தைப் பார்த்துப் படிக்கலாம். அல்லது இன்னொருத்தர் படித்துக் கேட்கலாம்.
இம்மாதிரி அந்த பதினாறு நாமாக்களைப் படித்தால், அல்லது கேட்டால் – அல்லது இது இரண்டையும்விட ச்ரேஷ்டமாக, மனப்பாடமாகச் சொன்னால் – அப்படிப் பண்ணுகிறவருக்கு வித்யாரம்பம், விவாஹம், ப்ரவேசம், நிர்கமம், ஸங்க்ராமம் முதலானவற்றில், ஸகல கார்யங்களிலுமே, விக்னம் உண்டாகாது.
அதென்ன பதினாறு நாமா? அவை எந்த ஸ்வாமியுடையவை? ஒரே ஸ்வாமியின் நாமாக்களா? பல ஸ்வாமிகளுடைய நாமாக்களா?
ஒரே ஸ்வாமியுடையவைதான்.
“விக்னம் வராது” என்பதிலிருந்தே ஊகித்து விடலாம். அந்த ஒரு ஸ்வாமி யாரென்று.
விக்நேச்வரர்தான்!
அவருக்கு அநேகம் பெயர்கள், ஸஹஸ்ர நாமா, அஷ்டோத்தர சத நாமா எல்லாம் உண்டு. இருபத்தியோரு தினுஸு பத்ரங்கள் [இலைகள்] அர்ச்ச்னை பண்ணுவதற்கென்று இருபத்தியோரு நாமா, அதே மாதிரி 21 தினுஸு புஷ்பம் அர்ச்சனை பண்ண 21 நாமா, இரட்டை இரட்டையாக 21 தடவை அருகம் புல் அர்ச்சனை பண்ணுவதற்கு 21 நாமா எல்லாம் அவருக்கு உண்டு. இங்கே நமக்கு ஸர்வ காரியத்திலும் விக்ன நிவ்ருத்திக்குப் பதினாறே பேர் சொல்லியிருக்கிறது.